ரஷிய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் வருவதற்கு முன்னர்

ஈரான் மோதல் குறித்துப் பேச அமெரிக்கப் பிரதி இராஜாங்க அமைச்சர் கொழும்புக்கு வருகிறார்

சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடவுள்ளார்
பதிப்பு: 2020 ஜன. 10 23:53
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 15 02:53
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
#us
எதிர்வரும் 14, 15 ஆம் திகதிகளில் ரஷிய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergey Lavrov) கொழும்புக்கு வருகைதரவுள்ள நிலையில் அமெரிக்காவின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் (Alice G Wells) அதற்கு முன்னதாக 13 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளதாகக் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. தற்போது அமெரிக்காவுக்கும் ஈரான் நாட்டுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைகள் தொடர்பாக உரையாடவே அமெரிக்கப் பிரதி இராஜாங்க அமைச்சர் கொழும்புக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
 
கொழும்புப் பயணத்தின்போது இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உட்பட அரசியல் தலைவர்கள் பலரைச் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளையும், சிவில் சமூக உறுப்பினர்களையும் சந்தித்து அமெரிக்க. ஈரான் மோதல்கள் குறித்து விளக்கமளித்து இலங்கை மக்களின் கருத்துக்களையும் அறிந்துகொள்வாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க- ஈரான் போர்ச் சூழல் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவின், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் கொழும்புக்கு வரவுள்ளார். இந்தப் பயணம் தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அதிகாரபூர்வமாக எதுவுமே கூறவில்லை.

இதேவேளை, அலிஸ் வெல்ஸ் இலங்கை;ப் பயணத்தை நிறைவு செய்து கொண்டு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கொழும்புக்கு வரவுள்ளமை அமெரிக்க, ஈரான் மோதலுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது என்று கூறப்படுகின்றது.

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சீனா, ரஷியாவுடன் இணைந்து ஈரான் இந்தியப் பெருங்கடலின் வடக்கு பகுதியில் கூட்டு இராணுவ பயிற்சி நடத்தியிருந்தது.

இதன் பின்னரே ரஷிய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கொழும்புக்கு வரவுள்ளமை தொடர்பான செய்தி கடந்த டிசம்பர் மாதம் வெளியாகியிருந்தது.

கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 14 ஆம் திகதி சீனாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் ரஷிய வெளிவிவகார அமைச்சரின் கொழும்புப் பயணத்தை அடுத்து கோட்டாபய ராஜபக்சவின் சீனப் பயணம் தற்காலிகமாகப் பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதிச் செயலகத் தகவல்கள் கூறுகின்றன.