கொழும்பில் இருந்து சென்ற குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால்

முல்லைத்தீவு உடையார்கட்டுப் பிரதேசத்தில் இருவர் கைது

புதுக்குடியிருப்புப் பொலிஸாருக்கும் அறிவிப்பு
பதிப்பு: 2020 ஜன. 13 11:52
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 15 02:44
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கைக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் வடமாகாணம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டுப் பிரதேசத்தில் இரண்டு குடும்பஸ்த்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து சென்ற குற்றத் தடுப்புப் பிரிவின் விசேட பொலிஸ் குழுவினரே இவர்கள் இருவரையும் கைது செய்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் கிழக்கு மாகாணம் திருகோணமலையில் வெடிமருந்துப் பொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பாகவே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு புதுக்குடியிருப்புப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.
 
திருகோணமலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் இவர்கள் இருவருக்கும் தொடர்புள்ளதாகவும் இதனாலேயே இருவரையும் கைது செய்ததாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் உறவினர்களிடம் கூறியுள்ளனர்.

முல்லைத்தீவு உடையார்கட்டு தெற்கு, உடையார்கட்டு வடக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு குடும்பஸ்தர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இருவரும் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து உறவினர்களிடம் எதுவுமே கூறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினரும் இலங்கை விசேட அதிரடிப்படையினரும் அவ்வப்போது தேடுதல். சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிபொருட்கள் அல்லது ஏதேனும் ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் கூறி பலர் கைது செய்யப்படுகின்றனர்.

ஆனால் வெடிபொருட்கள், ஆயுதங்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் இல்லையென உறவினர்கள் கூறுகின்றனர். இவ்வாறான கைது நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ், வவுனியா, மட்டக்களப்பு கிளை அலுவலகங்களில் உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இலங்கை இராணுவத்தினரும் இலங்கைப் பொலிஸாரும் இணைந்து தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் எவரும் கைது செய்யப்படவில்லை.

வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளை கொதி நிலையில் வைத்திருப்பதற்கும் இலங்கைப் படையினரின் முகாம்களை மேலும் அதிகரிக்கும் நோக்கிலுமே இவ்வாறான தேடுதல், சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மக்கள் கூறுகின்றனர்.