வடமாகாணம்

முல்லைத்தீவில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்க இலங்கை இராணுவம் குவிப்பு- மக்கள் விசனம்

மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானம்
பதிப்பு: 2020 ஜன. 23 16:31
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 24 01:43
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் பல்வேறு குற்றச் செயல்களைத் தூண்டிவிடப்பட்டு அதன் மூலம் இலங்கைப் படையினரைத் தொடர்ந்தும் அங்கு தங்கவைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்க இலங்கைப் படையினர் முல்லைத்தீவில் குறித்த சில பிரதேசங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்ட விரோத மணல் அகழ்வைத் தடுப்பது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
 
ஆனால் படையினர் குவிக்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சாந்தி சிறஸ்கந்தராஜா எதிர்ப்பு வெளியிட்டிருந்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமாகிய சதாசிவம் கனகரத்தினம் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மணல் அகழ்வு தொடர்பான கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, காதர் மஸ்தான், மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேசச் செயலாளர்கள், பொலிசார், இலங்கை முப்படையைச் சேர்ந்தவர்கள் பிரதேசச் சபைத் தலைவர்கள், கனியவளத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதேச மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இலங்கைப் பொலிஸார் சிலரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்க இலங்கைப் படையினர் குவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா விசனத்தை வெளியிட்டுள்ளார்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்கும் விடயத்தில் உரிய முறையில் செயற்படவில்லையென பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இலங்கைப் படையினரை மேலும் மேலும் குவிப்பதற்காகவும் இலங்கை இராணுவ முகாம்கள் மூடப்படுவதைத் தவிர்க்கும் நோக்கிலும் திட்டமிடப்பட்ட சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் குழுச் சண்டைகள். தாக்குதல்களை பிரதேச இளைஞர்களிடையே உருவாக்கும் உத்திகளை இலங்கை அரசாங்கம் கையாள்வதாக அவதானிகள் கூறுகின்றனர்.

முல்லைத்தீவு கொக்கிளாய்ப் பிரதேசத்தில் கனியவள மணல்களும் சட்டவிரோதமாக அகழப்பட்டு கொழும்புக்கு ஏற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.