கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்

துண்டுப்பிரசுரம் தொடர்பாகப் பொலிஸாரிடம் முறைப்பாடு. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் தகவல்
பதிப்பு: 2020 ஜன. 23 23:17
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 24 01:40
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#journalist
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ஊடக அமையத்தின் அலுவலகத்துக்குள் வீசப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்திலேயே இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளது. ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்காக இன்று பிற்பகல் 2.30க்கு ஊடக அமையத்தை திறந்தபோது மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன. எச்சரிக்கை என்ற தலைப்பில் காணப்பட்ட அந்தத் துண்டுப் பிரசுரத்தில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
 
வாலசிங்கம் கிருஷ்ணகுமார், செல்வக்குமார் நிலாந்தன், புண்ணியமூர்த்தி சசிகரன், குகராசு சுபோஜன், நல்லதம்பி நித்தியானந்தன், வடிவேல் சக்திவேல், சுப்பிரமணியம் குணலிங்கம் ஆகிய ஊடகவியலாளர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த அந்தத் துண்டுப்பிரசுரத்தில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுமென எழுதப்பட்டிருந்தது.

இந்த ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படுபவர்கள் என்றும் குறித்த அந்த துண்டுப்பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் மட்டக்களப்பு நகரில் உள்ள பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

அங்கு முறைப்பாட்டைப் பதிவு செய்த இலங்கைப் பொலிஸார் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்ததாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட ஊடகவியாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

ஆனால் குறித்த ஊடகவியாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக வாக்குமூலம் வழங்குவதற்கு நாளை வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குமார அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

இதனால் துண்டுப் பிரசுரத்தின் மூலம் அச்சறுத்தல் விடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் பொலிஸாரின் உத்தரவுக்கு ஏற்ப வாக்கு மூலங்களைத் தனித் தனியாக வழங்கவுள்ளதாகவும் அவர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

அத்துடன் இந்த மரண அச்சுறுத்தல் துண்டுப்பிரசுரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்புக் கிளை அலுவலகம், கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றுக்கும் தொலைபேசி மூலமாக விபரங்களைக் கூறியுள்ளதாகவும் நாளை நேரடியாகச் சென்று முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச ஊழியர்களின் ஊழல் மோசடிகள், அசட்டையீனமான செயற்பாடுகள் குறித்து மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிட்டமையினால் ஒன்றியத்தின் பிரதிநிதி நிலாந்தன் ஏறாவூர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இதனைக் கண்டித்து கடந்த மாதம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். கொழும்பு அரசியல் செல்வாக்குடன் அரச அதிகாரிகள், அரச ஊழியர்கள் பலர் ஊழல் மோசடிகளிலும் அதிகாரத்துஸ்பிரயோகங்கள் போன்ற செயல்களில் ஈடுபடுவதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் இன்று காணப்பட்ட துண்டுப்பிரசுரம் வேறொரு நோக்கில் வீசப்பட்டிருக்கலாம் என்று மட்டக்களப்புத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.