வடமாகாண ஆளுநரின்

யாழ் மாநகர சபைக்கான இணைப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ அதிகாரியை நியமிக்க முடிவு

செயற்பாடுகளை முடக்கும் சதி நடவடிக்கையென உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
பதிப்பு: 2020 ஜன. 24 22:30
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 25 23:25
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#Jaffnamunicipalcouncil
இலங்கை ஒற்றையாட்சி அரசின் வடமாகாண ஆளுநராகப் புதிதாகப் பதவியேற்றுள்ள பி.எம்.எஸ் சார்ளஸ், யாழ் மாநாகர சபையின் இணைப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற கேணல் தரத்தில் உள்ள இலங்கை இராணுவ அதிகாரியொருவரை நியமிக்கவுள்ளதாக குற்றச்சாட்டுக்ள் எழுந்துள்ளன. யாழ்.மாநகர சபை நிர்வாக நடைமுறைகளில் குறிப்பிட்ட சில விடயங்களுக்கு மாத்திரமே ஆளுநரின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் ஆளுநகருக்கான இணைப்பு அதிகரியாக ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரி நியமிக்கப்படுவதன் மூலம், மாநகர சபைக்குரிய அற்ப சொற்ப அதிகாரங்களையும் கொழும்பு நிர்வாகம் பறித்தெடுக்கும் சதித் திட்டமென யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
 
முன்னர் இராணுவ அதிகாரிகளையே ஆளுநராக நியமித்து இலகுவதாக நினைத்ததைச் செய்த இலங்கை ஒற்றையாட்சியின் நிறைவேற்று ஜனாதிபதி, தற்போது ஓய்வு பெற்ற தமிழ் சிவில் சேவை அதிகாரிகளை நியமித்து அவர்களைக் கருவியாகப் பயன்படுத்தி அவர்கள் மூலமாகவே தாம் நினைத்ததைச் செய்து முடிப்பதாக அவதானிகள் கூறுகின்றனர்

ஓய்வு பெற்ற நிர்வாக சேவை அதிகாரிகள் பலர் வடமாகாணத்தில் இருக்கும்போது வடமாகாணத்தைச் சேராத சிங்களவரான இராணுவ அதிகாரியை, மாநகரசபை இணைப்பு அதிகாரியாக நியமிக்கவுள்ளமை திட்டமிடப்பட்ட சதி நடவடிக்கை என்று மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நியமனத்தின் மூலம் யாழ் மாநகரசபையின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். யாழ் மாநகர சபையோடும் பிரதேச மக்களோடும் நல்ல பரீட்சையம் உள்ள ஒருவரை நியமிக்காமல் சிங்கள இராணுவ அதிகாரியை ஏன் நியமிக்க வேண்டுமென்றும் பார்தீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி இலங்கையில் மாகாணங்கள் பிரிக்கப்பட்டு ஒன்பது மாகாண சபை முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்காக என்று கூறிக் கொண்டு இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அதிகாரங்கள் பகிரப்பட்டிருந்தன.

ஆனாலும் அப்போதிருந்தே தமிழ்த்தரப்பு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் இணைக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போது 2006 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு முன் முதலாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டது. 2013 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு வடமாகாண சபை முதன் முதலாக இயங்கியது. இந்த மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியினாலே நியமனம் பெறுவார்.

அவர் ஜனாதிபதிக்கு விசுவாசமானவராகவும் ஒருவகையில் ஜனாதிபதி சொல்வதையே செய்பவராகவுமே செயற்படுவார். எனவே இலங்கை ஒற்றையாட்சி அரசின் அரசியல் யாப்பின் பிரகாரம் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யப்பட்டாலும் அதனுடைய இறுக்கமான பிடி கொழும்பிலேயே இருக்கின்றது.

இந்த நிலையில் புதிய ஆளுநர் சார்ளஸ் யாழ் மாநகர சபையின் ஆளுநராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியை நியமிக்கவுள்ளமை அவரது முடிவல்ல. அது நிறைவேற்று ஜனாதிபதியின் தீர்மானம் என்று அவதானிகள் கூறுகின்றனர்.

முன்னர் இராணுவ அதிகாரிகளையே ஆளுநராக நியமித்து இலகுவதாக நினைத்ததைச் செய்த இலங்கை ஒற்றையாட்சியின் நிறைவேற்று ஜனாதிபதி, தற்போது ஓய்வு பெற்ற தமிழ் சிவில் சேவை அதிகாரிகளை நியமித்து அவர்களைக் கருவியாகப் பயன்படுத்தி அவர்கள் மூலமாகவே தாம் நினைத்ததைச் செய்து முடிகின்றார் என்றும் அவதானிகள் கூறுகின்றனர்.