வடக்குக்- கிழக்கு

தாயகப் பிரதேசத்தில் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம் உருவாகியது

யாழ் ஆயர் நல்லை ஆதீனக் குருமுதல்வர் ஆகியோர் தலைமை
பதிப்பு: 2020 ஜன. 26 21:52
புதுப்பிப்பு: ஜன. 30 22:12
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுக்கும் நோக்கில் தமிழ் மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியார், யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆகியோரின் தலைமையில் குறித்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கதீற்றல் விதியில் உள்ள யாழ் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் துறைசார்ந்த பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பொருளியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில்சார் நிபுணர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
 
இளைஞர், யுவதிகளுக்கான வலுவூட்டல், வறுமை ஒழிப்பு, விவசாயம், மீன்பிடி, திறன் விருத்தி, பொருளாதார வலுவூட்டல், கல்வி, சுற்றாடல், சுகாதாரம், விஞ்ஞானமும் புதுமைப் படைத்தலும், தகவல் தொழில்நுட்பம், சட்ட உரிமைகள், தமிழர் மரபு, பல்துறை ஒருங்கிணைப்பு ஆகிய துறைகளில் துறைசார் வல்லுநர்களை அடையாளம் கண்டு வளங்களை;ச் சரியான முறையில் பயன்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது இந்த மன்றத்தின் நோக்கமாகும்.

யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் நல்லை ஆதீன குரு ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோரின் தலைமையில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஐம்பதுக்கும் அதிகமான துறைசார்ந்த தொழில் நிபுணர்கள், பேராசிரியர்கள் கல்வியாளர்கள் ஆகியோர் இணைந்து செயற்படுவதற்கு முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் தாயகப் பிரதேசங்களின் பொருளாதார, சமூக அபிவிருத்தி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை சமாந்தரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு சிவில் சமூகத்தின் பங்களிப்பு அவசியமெனக் கூறப்பட்டு வந்த நிலையில் இந்த மன்றம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் கூறியுள்ளார்.

புலம்பெயர் நாடுகளில் இருந்து கிடைக்கும் பொருளாதார நிதியுதவிகள், சர்வதேச தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் நிதிகள் போன்றவற்றை ஒன்று திரட்டி ஒருங்கிணைந்த செயற்த்திட்டமாக அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பது மற்றுமொரு நோக்கம் என்றும் மன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.