கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்- மக்கள் மத்தியில் குழப்பம்

உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை
பதிப்பு: 2020 ஜன. 27 22:02
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 30 22:06
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#journalist
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டக்களப்பு ஊடக மையத்தைச் சேர்ந்த சில ஊடகவியலாளர்கள் மரண அச்சுறுத்தல்களை எதிர்நோகியுள்ளனர். அலுவலகத்திற்குள் வீசப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தில் மரண அச்சுறுத்தல் எனக் கூறப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை அனைத்துத் தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்படும் உயிர் அச்சுறுத்தலாகவே கருதுவதாகவும் ஒன்றியம் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
மட்டக்களப்பிலிருந்து கொண்டு இங்கு நடைபெறும் விடயங்களை வெளி உலகுக்கு வெளிப்படுத்தி வருகின்ற செய்தியாளர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஊடக ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் என்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அநாமதேயமாக துண்டுப்பிரசுரங்களை அலுவலகத்துக்குள் வீசி ஊடகவியலாளர்களின் செயற்பாட்டை நிறுத்துவதற்கும் நசுக்குவதற்குமான முயற்சியாகவே மட்டக்களப்பு ஊடக அமைய ஊடகவியலாளர்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் எனவும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் கருதுகின்றது.

பல்வேறு சிரமங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில் மக்களுக்கு பிரதேசங்களில் நடைபெறுகின்ற விடயங்களை வெளிப்படுத்திவரும் வேளையில் அச்சுறுத்தல் செயற்பாடுகள் கவலையளிப்பதாகவும் ஒன்றியம் கூறியுள்ளது.

மட்டக்களப்பிலுள்ள செய்தியாளர்களுக்கெதிராக விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊடக சுதந்திரம் என்பது கேட்டுப் பெறவேண்டியதல்ல. இவ்வாறான செயற்பாடுகள் ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவே அமையும் ஒன்றியம் விடுத்துள்ள அந்த அறிக்கையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.