இலங்கை ஒற்றையாட்சி அரசின்

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய மார்ச் மாதம் கலைப்பார்- அமைச்சர் தினேஸ்

சஜித் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி போட்டியிடும் என்கிறார் ஹரின்
பதிப்பு: 2020 ஜன. 29 22:33
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 30 22:01
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி கலைத்துப் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவாரென வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை காலிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார். பலமான நாடாளுமன்றம் ஒன்று அவசிமயமாகும். 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றமே தற்போதும் உள்ளது. இதன் காரணத்தால் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியினால் பலமான அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை. எனவே ஏப்பிரல் மாதம் அறுதிப் பொரும்பான்மையுள்ள நாடாளுமன்றத்தை அமைக்கவுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
 
நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி விரும்பியிருக்கவில்லை. இதனாலேயே மார்ச் மாதம் நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் நிறைவடைவதால் நாடாளுமன்றத்தைக் கலைக்கவுள்ளதாகவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

இதேவேளை, சுஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி விரைவில் உருவாகுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையை விட்டுக் கொடுக்க கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தயாராக இல்லையென்றும் இதனால் ஐக்கிய தேசிய முன்னணியைப் பலப்படுத்தி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் பெரும்பாலானோரும் மலையகத் தமிழ்க் கட்சிகள், முஸ்லீம் அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய சிறிய கட்சிகள் சிவில் அமைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கி ஐக்கிய தேசிய முன்னணி உருவாகவுள்ளதாகவும் அவர் கொழும்பில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

அனைத்துக் கட்சிகளோடும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் இறுதிச் சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்றும் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அதன் யானைச் சின்னத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவன்ச தெரிவித்துள்ளார்.

கட்சியின் நூற்றி ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களில் அறுபது பேர் ரணில் விக்கிரமசிங்கவுக்க ஆதரவாக உள்ளதாகவும் அகிலவிராஜ் காரியவன்ச தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்றிரவு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார்.