இலங்கையில் சகல உற்பத்தி துறைகளும் வீழ்ச்சி

அறு நூறு பில்லியன்கள் இழப்பு, கடன் 72 பில்லியன்களாக அதிகரிப்பு- நாடாளுமன்றத்தில் மகிந்த அறிவிப்பு

மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் மீதே குற்றச்சாட்டு
பதிப்பு: 2020 பெப். 05 20:46
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 07 00:58
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
#mahindarajapaksa
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதத்தை விட குறைவாக உள்ளது. சகல உற்பத்தி துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. 600 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அறவிட முடியாக் கடன் 72 பில்லியன்களாக உள்ளது. முழு பொருளாதாரமும் செயலிழந்துள்ளது. எனினும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு பத்து அத்தியாவசியப் பொருட்களை சலுகை விலையில் வழங்கும் திட்டம் மார்ச் முதலாம் திகதி முதல்அமுல்படுத்தப்படுமென பிரதமரும் நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ச இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை அறிவித்தார். இலங்கையின் பொருளாதார, நிதி நிலைமைகள் தொடர்பாக விடுத்த விசேட அறிக்கையிலேயே மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.
 
2019 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கிய நிதியில் அநேகமானவற்றை கடந்த அரசு செலவிட்டது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செலவிட்ட செலவுகளுக்கு வழங்க திறைசேரியில் நிதி இருக்கவில்லை என்றும் மகிந்த ராஜபக்ச கூறினார்.

அரசின் வருமானம் 2400 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டாலும் நவம்பர் மாதமளவில் 1600 பில்லியன் ரூபாய்களே கிடைத்துள்ளன. டிசம்பர் ஆகும் போது இது 1800 பில்லியன்களைத் தாண்டவில்லை. இதனால் 600 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டது.

கடந்த அரசாங்கத்தின் குழப்பமான வரி முறைகளினால் எதிர்பார்த்த வரிவருமானம் கிடைக்கவில்லை.பாராளுமன்றம் அனுமதித்ததை விட கூடுதலாக கடன் பெறப்பட்டுள்ளது.2020 முதல் 4 மாதங்களுக்காக இடைக்கால கணக்கறிக்கையினூடாக நிதி ஒதுக்கினாலும் அது வருட இறுதியில் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளுக்கு போதுமானதல்ல.

2019 டிசம்பர் மாதமாகையில் 2 மாதங்களுக்கு செலுத்தப்படாத பெருந்தொகை செலவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் செலவு உட்பட விசேட செலவுகளுக்காக செலுத்தாத தொகை 1188 மில்லியன் ரூபா என கணிக்கப்பட்டுள்ளது.இந்த வருடம் நடத்தும் தேர்தலுக்கு இடைக்கால கணக்கறிக்கையினூடாக ஒதுக்கிய தொகைக்கு மேலதிகமாக 400 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது.

மருந்து கொள்வனவிற்காக ஒப்பந்தக்காரர்களுக்கு சுகாதார அமைச்சு 25 696 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும். சிரேஷ்ட பிரஜைகளின் வங்கிக் கடனுக்காக 45 856 மில்லியன் ரூபா செலுத்த வேண்டும். பசளை நிவாரணத்திற்காக பசளை விநியோகஸ்தர்களுக்கு 23 950 மில்லியன் ரூபா வழங்க வேண்டும்.முப்படை சேவைகள் மற்றும் திறைசேரியில் தங்கியுள்ள அரச நிறுவனங்கள் என்பவற்றுக்காக 5490 மில்லியன் ரூபா வழங்க வேண்டும்.

நெடுஞ்சாலை நிர்மாணத்திற்காக 18 449 மில்லியனும் மாநகர அபிவிருத்தி நிர்மாணங்களுக்கு 6862 மில்லியனும் பாடசாலை அபிவிருத்தி பணிகளுக்காக 2824 மில்லியனும் கம்பெரலிய வடமாகாண அபிவிருத்தி மீள்குடியேற்ற திட்ட விநியோகஸ்தர்களுக்கு 326 மி்ல்லியனும் மாகாண உள்ளூராட்சி மற்றும் மாவட்ட செயலாளர்களினூடாக செய்த செலவுகளுக்கு 3893 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டியுள்ளது.

நீர்ப்பாசன உயர்கல்வி அமைச்சின் திட்டங்களுக்காக 1990 மில்லியனும் நீர்ப்பாசன கிராமிய திட்டங்களுக்காக6558 மில்லியனும் ஏனைய செலவுகளுக்காக 13 218 மில்லியன் ரூபாவும் செலுத்தப்பட வேண்டும்.

மீண்டுவரும் செலவினங்களுக்காக 101 பில்லியன் ரூபாவும் முதலீட்டுச் செலவினங்களுக்காக 55 பில்லியனும் உரிய நிறுவனங்களினூடாக விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படவில்லை. வெ ளிநாட்டு கடன் திட்ட செலவுகள் மற்றும் அவற்றுக்காக உள்நாட்டில் மேற்கொண்ட செலவுகளுக்காக 211 பில்லியன் ரூபா செலுத்த வேண்டும்.இவை கணக்குகளில் சேர்க்கப்பட முடியாதுள்ளது.

இவற்றினால் முழு பொருளாதாரமும் செயலிழந்துள்ளது. மருத்துவமனைகளுக்கு மருந்து விநியோகிக்க முடியாதுள்ளது.நிர்மாணத்துறையினருக்கு வழங்க வேண்டிய நிதி 3-4 மாதங்களாக வழங்கப்படவில்லை.சுமார் 700 சிறு மற்றும் மத்திய ஆலைகள் மூடப்பட்டுள்ளன.தேயிலை தொழிற்சாலைகள் செயலிழந்துள்ளன.

கடந்த ஆட்சியில் இருந்த இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி பணிப்பாளர்கள் பிணையின்றி கடன் வழங்கியதால் அறவிட முடியாக் கடன் 72 பில்லியன்களாக உள்ளது. முக்கியமான நபர்களுக்கு இவ்வாறு கடன் வழங்கப்பட்டுள்ளன.

பிணைமுறி மோசடியுடன் தொடர்புள்ள தடயவியல் அறிக்கைக்கு அமைய மத்திய வங்கியும் சட்டமா அதிபரும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி ஒதுக்காமல் கடந்த ஆட்சியில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.வீடமைப்பு அதிகார சபைக்கு இவ்வாறு 2511 பேரும் பெற்றோலியக் கூட்டுத் தாபனத்திற்கு 167 பேரும் தொல்பொருள் திணைக்களத்திற்கு 1430 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் வேலையற்ற பட்டதாரிகளுக்கு கண்ணீர்ப்புகை மாத்திரம் தான் கடந்த அரசாங்கத்தில் கிடைத்தது.

கடந்த 5 வருடத்தில் புதிதாக எந்தவொரு மின்சாரத் திட்டமும் ஆரம்பிக்கப்படவில்லை. பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதத்தை விட குறைவாக உள்ளது. சகல உற்பத்தி துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.