வடமாகாணம்- முல்லைத்தீவில்

மகாவலி அபிவிருத்திக்காகச் சிங்களக் குடியேற்றம் இல்லையென மகிந்த கூறியமை பொய்யான தகவல்

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன், பாதிக்கப்பட்ட மக்கள் கண்டம்
பதிப்பு: 2020 பெப். 07 21:38
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 08 20:58
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#mullaitivu
வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகள் தமிழ்ப் பிரதேசங்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள் இலங்கை அரசாங்கத்தால் அபகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச இலங்கை நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் வெளிப்படையாகவே காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதை மகிந்த ராஜபக்ச எவ்வாறு நாடாளுமன்றத்தில் மறுத்துரைத்தார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். முல்லைத்தீவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரவிகரன் விளக்கமளித்தார்.
 
Mullithivu
முல்லைத்திவில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக விவசாயச் செய்கைகளுக்குப் பயன்படுத்த்திய ஆமையன் குளம். கிரி இப்ப வெவ என்ற சிங்களப் பெயரிடப்பட்டு மகாவலி எல் வலையத்துக்குள் அபகரிக்கப்பட்டுள்ளது. ஆமையன் குளம், சிங்களப் பெயராக மாற்றப்பட்டுப் புனரமைக்கப்பட்டு 2019-06-07 அன்று அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம் இது. இங்கு சிங்கள விவசாயிகள் குடியேற்றம் செய்யப்படுகின்றனர். இந்த நிலையிலேயே முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறவில்லையென்று மகிந்த கூறுகிறார்.
right photo
இந்தச் செய்தியாளர் மாநாட்டில் காணி அபகரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களும் கலந்துகொண்டு விளக்கமளித்தனர். 1984ஆம் ஆண்டு தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் குடியமர்ந்த போது அவர்கள் தமது வாழ்வாதாரத்துக்காக பாதுகாக்கப்பட்டிருந்த நிலங்கள் அனைத்தும் அபகரிக்கப்பட்டிருந்தாக அவர் சுட்டிக்காட்டினார்.

அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பான புள்ளி விபரங்கள் இருக்கின்றன. மூவாயிரத்து 744 ஏக்கர் காணிகள் அங்கு பறிக்கப்பட்டன. பிரதமர் தன்னுடைய உரையில் 408 ஏக்கர் காணி, அதுவும் நூற்றி மூன்று பேர் பயிர் செய்ததாகவும் சிங்கள மக்களுக்கு அந்தக் காணிகள் பகிரப்படவில்லை என்றும் கூறியிருக்கின்றார்.

உந்திராயன் குளம் என்ற தமிழ்ப் பிரதேசதத்தில் 264 ஏக்கர் அபகரிக்கப்பட்டு நெலும்வௌ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆமையன்குளம் 360 ஏக்கர், அடையக்கறுத்தான் குளம் 75 ஏக்கர், சாம்பல்குள வயல் 300 ஏக்கர் என 899 ஏக்கர் நிலம் குளத்தோடு சம்பந்தப்பட்ட வயல்களாகும்.

இவற்றில் 360 ஏக்கர் கொண்ட ஆமையன்குளத்தை 103 மில்லியன் ரூபாய்க்கு மேற்பட்ட நிதியில் புனரமைப்புச் செய்து முன்னைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தக் குளத்தை கிரிவன்வௌ என்று பெயர் மாற்றம் செய்து சிங்கள மக்களிடம் கையளித்தமை அனைவரும் அறிந்ததாகும்.

இங்கு 360 ஏக்கர் குளத்திலேதான் தமிழ் மக்கள் விவசாயம் செய்தனர்.இந்த நிலையில் 900 ஏக்கர் நிலம் வரை காடுகளை அழித்தும் வேறு வளங்களை எடுத்தும் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

ஏறத்தாள மூவாயிரத்து 744 ஏக்கர் காணியுடன் விஸ்தரிக்கப்பட்டு பதினோராயிருத்து 232 ஏக்கர் காணிகள் மகாவலி எல் என்ற பெயரில் அபகரிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளன. ஆகவே மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்துள்ளார் என்று ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.