இலங்கையில்

ஒற்றையாட்சியைப் பலப்படுத்தும் முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிப்பு

மகாநாயக்கத் தேரர்கள் ஆசி வழங்கினர்- சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன
பதிப்பு: 2020 பெப். 13 23:05
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 15 03:52
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும்போது இலங்கை அரசின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பௌத்த பிக்குமாரை உள்ளடக்கிய யுத்துகம என்ற சிங்கள அமைப்பு ஒன்று இந்த அறிக்கையைத் தயாரித்துக் கையளித்துள்ளது. பலமானதொரு அரசு- எமது அரசியல் யாப்புக்கான முன்மொழிவுகள் என்ற கருப்பொருளில் குறித்த பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு அறிக்கையாகக் கையளிக்கப்பட்டுள்ளன. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சிறப்பு நிகழ்விலேயே இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
 
யுத்துகம அமைப்பின் தலைவர் கெவிது குமாரதுங்க இந்த முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையை கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்தார். அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் புத்தகமாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

மக்கள் இறைமை, ஒற்றையாட்சியை உறுதிப்படுத்தல், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, சட்டவாக்கத்துறை, நீதித்துறை ஆகிய மூன்றும் சமநிலையில் செயற்படுதல், கடமையை முதன்மையாகக் கொண்ட சமூகம் ஆகிய விடயங்கள் பிரதானமாக முன்மொழியப்பட்டுள்ளன.

சியம்மக நிக்காயாவின் அஸ்கியா பீடத்தின் பதிவாளர் சங்கைக்குரிய மெதகம தம்மானந்த நாயக்கத் தேரர், நாரயன்பிட்டி அபயராம விகாராதிபதி முத்தெட்டுவே ஆனந்த நாயக்கத் தேரர், பெங்கமுவே நாலக்கத் தேரர், உள்ளிட்ட மாகாநாயக்கத் தேரர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை நிகழ்த்தினர்.

அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பந்துல குணவர்த்தன, காமினி லொக்குகே, தயாசிறி ஜயசேகர ஆகியோரும் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் நிகழ்வில் பங்கேற்றனர். இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை வலியுறுத்தி கோட்பாட்டு விளக்கங்களைக் கொடுத்து வரும். கலாநிதி குணதாச அமரசேகர, ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர த சில்வா ஆகியோருக்கு கோட்டாபய ராஜபக்ச சிறப்பு விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.

ரணில்- மைத்திரி அரசாங்கத்தில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குதம் நோக்கில் உத்தேச நகல் யோசனைகள் கையளிக்கப்பட்டிருந்தன. அந்த யோசனைகள் ஒற்றையாட்சித் தன்மை கொண்டதாக அமைந்திருந்தாலும் அதற்குள் சமஸ்டி உள்ளடங்கியிருப்பதாகச் சம்மந்தன் அப்போது கூறியிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய அரசியல் கட்சிகள் அந்த யோசனையை முற்றாக நிரகரித்திருந்தன. ஆனாலும் புதிய அரசியல் யாப்பு நடைமுறை்க்கு வருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், சென்ற நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச ரணில் மைத்திரி அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்புக்கான யோசனைகளைப் பற்றி எதுவுமே பேசவில்லை. எனினும் அவரை மையமாகக் கொண்ட ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி அந்த யோசனைகளை முற்றாகவே நிராகரித்திருந்தது.

இவ்வாறான நிலையில் யுத்துகம என்ற சிங்கள பௌத்ததேசியவாத அமைப்பு இலங்கையின் புதிய அரசியல் யாப்புக்கான முன்மொழிவுகளை கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளது.