சவேந்திர சில்வாக்குப் பயணத் தடைவிதிக்கப்பட்டு 24 மணி நேரத்தில்

அமெரிக்காவின் மிலேனியம் ஒப்பந்தம் பற்றி ஆராய்வதற்கான குழு கோட்டாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது

புத்திஜீவிகள் குழுவின் அறிக்கையின் உள்ளடக்கம் வெளியிடப்படவில்லை
பதிப்பு: 2020 பெப். 17 23:34
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 18 10:28
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடம் இருந்து பெறும் கடன்களை மீளச் செலுத்துவதற்கு எவ்விதமான திட்டங்களும் இல்லாமல் இறக்குமதிப் பொருளாதாரத்தில் மாத்திரமே தங்கியுள்ளது. இந்த நிலையில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் பெறப்பட்ட கடனுக்கான 367 மில்லியன்களுக்குக் குறை நிரப்புப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறியுள்ளார். இவ்வாறானதொரு சூழலில் அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் (Millennium Challenge Cooperation) (MCC) நாநூற்றி எண்பது மில்லியன் டொலர்களைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது பற்றி ஆராய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் முதற் கட்ட அறிக்கை இன்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.


 

MMC1
அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் (Millennium Challenge Cooperation) (MCC) நாநூற்றி எண்பது மில்லியன் டொலர்களைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் தலைவர் கொழும்புப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைப் பேராசிரியர் லலிதசிறி குணவர்த்தன (Prof Lalithasiri Gunaruwan) அறிக்கை கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கும்போது எடுக்கப்பட்ட படம். இந்தக் குழுவை கோட்டாபய ராஜபக்ச சென்ற நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் நியமித்திருந்தார்.
குறிப்பாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவருடைய குடும்பம் மீது அமெரிக்கா விதித்த பயணத் தடை விதிக்கப்பட்டு இருபத்து நான்கு மணி நேரத்திலேயே இந்த முதற் கட்ட அறிக்கை கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

புத்திஜீவிகள் குழுவின் தலைவர் கொழும்புப் பல்கலைக்கழகப் பொருளியல் துறைப் பேராசிரியர் லலிதசிறி குணவர்த்தன (Prof Lalithasiri Gunaruwan) குறித்த அறிக்கையை கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்தார்.

எனவே MCC எனப்படும் அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் ஒப்ப்ந்தத்தில் இலங்கை அரசாங்கத்தை கைச்சாத்திடுவதற்கான உத்தியாகவே இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீதான பயணத் தடை விதிக்கப்பட்டிருக்கலாமென கொழும்பு உயர் மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கையின் தற்போதையை பொருளாதார நிலை கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பதாகப் பிரதமர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

ஏற்றுமதி உற்பத்திகளை முன்னேற்றுவதற்குப் பதிலாக இறக்குமதி உற்பத்திகளுக்கே இலங்கைப் பொருளாதாரம் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாகவே தேசிய கைத்தொழில்கள், உற்பத்திகள் அனைத்தும் செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கைப் பொருளாதார நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.

இந்தப் பலவீனங்களின் அடிப்படையிலேயே அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation) (MCC) நாநூற்றி எண்பது மில்லியன் டொலர்களை வழங்கத் தாமாகவே முன்வந்ததாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார்.

அமெரிக்காவுக்குச் சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரி புரோக் பியேர்மன் (Brock Bierman) சந்தித்து உரையாடியிருந்தார்.

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டாமென சிங்களக் கடும் போக்குக் கட்சிகளுமு் பௌத்த குருமாரும் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாதென கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களின்போது மக்கள் முன்னிலையில் வாக்குறுதியளித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் இந்த ஒப்பந்தத்துக்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றார். இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ச நியமித்த புத்திஜீவிகள் குழு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஆனால் அறிக்கையின் உள்ளடக்கம் இதுவரை ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.