இலங்கை அரசாங்கத்தின்

ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 468 கோடி ரூபாய்களுக்கான கணக்கு வாக்கெடுப்பு வாபஸ்

இந்த நிதியாண்டில் பெரும் நிதி நெருக்கடி
பதிப்பு: 2020 பெப். 20 20:56
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 20 22:03
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. இதனால் இன்று வியாழக்கிழமை ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 468 கோடியே 36 இலட்சத்து 61000 ஆயிரம் ரூபாய்களுக்கான கணக்கு வாக்கெடுப்பு (Vote and Account) ஒன்று நடத்தப்பட ஏற்பாடாகியிருந்தது. ஆனாலும் இறுதி நேரத்தில் அந்த வாக்கெடுப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தக் கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கத் தயாராகியிருந்த நிலையில் வாக்கெடுப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து பெரும் நிதி நெருக்கடியை இலங்கை எதிர்நோக்கி வருவதாக மகிந்த ராஜபக்ச சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
 
இதனால் கணக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து வாக்கெடுப்பு நடத்த அரசாங்ம் தீர்மானித்திருந்தது. எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுப் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதால், தேர்தல் முடிவடைந்து உறுதியான அரசாங்கத்தை அமைத்த பின்னர் வரவு செலவுத் திட்டத்தை அல்லது கணக்கு வாக்கெடுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

கணக்கு வாக்கெடுப்புக்கான அறிக்கையை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக சமர்ப்பிக்கவிருந்த போதிலும் அதனைத் தோற்கடிப்பதென ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த முடிவினால் அந்தக் கணக்கு வாக்கறிக்கையை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொண்டதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

இதன் மூலம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசாங்கம் முதல் தோல்வியையும் சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி முதல் வெற்றியையும் பதிவு செய்து கொண்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மைத்திரி- ரணில் அரசாங்கம் பெற்றுக்கொள்ளப்பட்ட பாரிய அளவிலான கடனைச் செலுத்த வேண்டியிருக்கின்றது. வைத்தியசாலைகளில் மருந்து கொள்வனவு , உரக் கொள்வனவு உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக முன்னைய அரசாங்கமான தற்போதைய எதிர்க்கட்சியினர் பெற்றுக் கொண்ட கடன் தொகை திருப்பி செலுத்தப்படவில்லையென அமைச்சர் தினேஸ் கணவர்த்தன நாடாளுமன்றத்தில் கூறினார்.

பொதுமக்களின் நாளாந்த நடவடிக்கையின் தேவைக்காகவே கணக்கு வாக்கு அறிக்கையை சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிர்க்கட்சியால் இதற்கு எதிர்ப்பு முன்வைக்கப்பட்டுள்ளது. இ்ந்தக் கணக்கு வாக்கெடுப்பு சட்ட ரீதியானது அல்லவென எதிர்க்கட்சி கூறுகின்றது. ஆனால் சட்டமா அதிபரிடம் கேட்ட போது இது சட்ட ரீதியானது என கூறியதாகவும் தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.