மகிந்த ராஜபக்ச தரப்பினால் பௌத்த தேசியவாத சிந்தனையில் உருவாக்கப்பட்ட

பொதுஜனப் பெரமுனவைப் போன்றே ஐக்கிய தேசியக் கட்சியும்- ரணில், சஜித் முரண்பாடு நீடிப்பு

புதிய அணியில் மலையகத் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைவு!
பதிப்பு: 2020 பெப். 28 23:09
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 28 23:52
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
#sajithpremadasa
இலங்கை ஒற்றையாட்சி அரசில் மாறி மாறி ஆட்சியமைத்து வரும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் நீடித்துச் செல்கின்றன. கட்சியின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை கூடிய நிலையில் எந்தவித இணக்கப்பாடுகளும் இன்றி கூட்டம் முடிவடைந்துள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் செயற்பாடுகள் அதன் சின்னம் தொடர்பாக கூட்டத்தில் சுமார் இரண்டு மணி நேரமாக ஆராயப்பட்டது. புதிய கூட்டணிக்கான சின்னம் தொடர்பான இறுதித் தீர்வு விரைவில் அறிவிக்கப்படும் என சென்ற புதன்கிழமை எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் தீர்மானம் இன்றி கூட்டம் முடிவடைந்துள்ளது.
 
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோரிடைய வாக்குவாதமும் ஏற்பட்டிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டுமென ரணில் விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த சஜித் பிரேமதாச தரப்பு உறுப்பினர்கள் அப்படியானால் கட்சியின் தலைமைப் பொறுப்பு சஜித் பிரேதாசவிடம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.

இதேவேளை, சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியின் ஒப்பந்தம் எதிர்வரும் திங்கட்கிழமை கைச்சாத்திடப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நடை;பெறவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டு யானைச் சின்னத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாச தலைமையில் அன்னம் சின்னத்தில் புதிய அரசியல் கூட்டணியும் போட்டியிடுமென உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் முஸ்லிம் முஸ்லிம் கட்சிகளைச் சேர்த்துக்கொள்ளாமல் தமக்கு விருப்பமான அல்லது அடங்கிச் செல்லக் கூடிய குறிப்பிட்ட சில தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளை மாத்திரம் இணைத்துக் கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியை மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் செயற்படுத்துவது போன்று ஐக்கிய தேசியக் கட்சியையும் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு செயற்படுத்த முற்படுவதாகக் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

கடந்தகாலங்களில் தமிழ் இனவாதத்தை ஐக்கிய தேசியக் கட்சியே ஆரம்பித்திருந்தது. ஆனாலும் அந்த இனவாத அரசியல் செயற்பாடுகளுக்கு ஈடாகவும் இன்னுமொரு படி மேலாகவும் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி செயற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் பௌத்த தேசியவாதத்தை அடிப்படையாக் கொண்டு செயற்படும் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியில் தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் கட்சிகள் இணைந்து செயற்படத் தயாராகின்றன.

ஏனெனில் இருப்பதைவிட சஜித் பிரேமதாசவின் புதிய அரசியல் கூட்டணி சிறப்பானதென மலையகத் தமிழ்க் கட்சிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் நம்புகின்றனர்.