இலங்கை நாடாளுமன்றத்

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை விகாரைகளில் நடத்த முடியாது- மகிந்த தேசப்பிரிய

வேட்பாளர் பெயர்களில் வழிபாடுகள் நடத்தவும் தடை
பதிப்பு: 2020 மார்ச் 03 22:47
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 03 23:09
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
#mahindarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் பிரகாரம் பௌத்த சமயத்துக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டிருப்பதால் தேர்தல் காலங்களில் பௌத்த குருமார் தமக்குச் சார்பான கட்சிகள், வேட்பாளர்களுக்கு ஆதரவாக விகாரை வளாகங்களுக்குள்ளும், மத வழிபாடுகளின்போதும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகக் கடந்த தேர்தல் காலங்களில் முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன. அத்துடன் தேர்தலை கண்காணிக்க இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்பாளர்களும் முறையிட்டிருந்தனர். இதனடிப்படையில் இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய மகாநாயகத் தேரர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார்.
 
மதஸ்தலங்களின் வளாகத்துக்குள் அரசியல் கட்சிகளின் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தவோ மத வழிபாடுகளின் போது குறிப்பிட்ட வேட்பாளர்களை ஊக்குவிக்குமாறு பிரசங்கம் செய்வதோ தேர்தல் சட்ட விதிகளின் பிரகாரம் தடை செய்யப்பட்டுள்ளதாக மகிந்த தேசப்பிரிய மகாநாயகத் தேரர்களிடம் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை மல்வத்து, அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை மகிந்த தேசப்பிரிய தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழு உயர் அதிகாரிகள் குழு ஒன்று சந்தித்து உரையாடியிருந்தது.

அப்போது மகாநாயக்கத் தேரர்களிடம் விளக்கமளித்த மகிந்த தேசப்பிரிய மதஸ்தலங்களை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தி வருவதாகவும் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

கடந்தகால தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின்போது மதஸ்தலங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும் மத வழிபாடுகளின்போது சில வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசங்கம் நடத்தப்பட்டிருந்தது என்றும் முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன.

அதன் காரணமாகவே இம்முறை மதத்தலைவர்களைச் சந்தித்து விளக்கமளித்து வருவதாக மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார். பொது இடங்களில் இடம்பெறும் பிரச்சாரக் கூட்டங்களில் மதத் தலைவர்கள் குறித்த வேட்பாளருக்காக அல்லது குறித்த குறித்த கட்சிக்காக உரையாற்ற முடியும்.

ஆனால் மத வழிபாட்டு வளாகங்களிலும் வழிபாடுகளின்போதும் தேர்தல் பிரச்சார நடவடிக்களை மதத் தலைவர்கள் முன்னெடுக்க முடியாதெனவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. வேட்பு மனுத் தாக்கல் இந்த மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகி 19 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையிலேயே பௌத்த பிக்குமாரின் செயற்பாடுகள் குறித்து தோ்தல்கள் ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் பதவிவாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.