இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் உள்ள

அனுராதபுரம் சிறைச்சாலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு- மூன்று கைதிகள் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட முரண்பாட்டில் மோதல்- தமிழ் அரசியல் கைதிகளும் இலக்கு
பதிப்பு: 2020 மார்ச் 21 21:26
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 21 21:52
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
இலங்கையின் வடமத்திய மாகாணம் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையில் இலங்கைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சிறைச்சாலையில் இன்று சனிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு முயற்சியில் ஈடுபட்டதாகவும் இதனால் கைதிகளை நோக்கித் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாலேயே மூன்று கைதிகள் உயிரிழந்ததாக சிறைச்சாலைத் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் இலங்கைச் சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தவில்லை.
 
அனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் என்ற சந்தேகத்தில் நான்கு கைதிகள் சிறைச்சாலையில் உள்ள வைத்தியசாலையில் சிறைக் காவலர்களினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய கைதிகள் தம்மைத் தனிமைப்படுத்த வெளியில் அனுப்புமாறு கோரி சிறைக்காவலர்களுடன் முரண்பட்டனர். இதனால் ஏற்பட்ட மோதலிலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதிகள் சிலர் சிறைச்சாலை வளாகத்துக்குள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பொலிஸார் சிறைச்சாலை வாசலில் காவலில் ஈடுபட்டனர்.

கைதிகள் சிறைச்சாலைக் கதவுகளை உடைக்க முற்பட்டனர். இதனால் வெளியே நின்ற பொலிஸார் ஆகாயத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நிலைமை கட்டு மீறியதால் கைதிகளை நோக்கியும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரியொருவர் கூறினார்.

சம்பவத்தையடுத்து விசேட அதிரடிப்படையினரும் சிறைச்சாலை முன்பாகக் குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிப் பிரயோகத்தினால் கைதியொருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். ஏனைய இரு கைதிகள் காயமடைந்ததாகவும் ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால் மூன்று கைதிகளுமே உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இரு கைதிகள் சிங்களவர் என்றும் மற்றையவர் முஸ்லிம் கைதியென்றும் சிறை்ச்சாலைத் தகவல்கள் கூறுகின்றனர். அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பதினொரு தமிழ் அரசியல் கைதிகளையும் வெளியே செல்லுமாறு சிறைச்சாலைக் காவலர்கள் கூறியபோதும் அதற்குத் தமிழ் அரசியல் கைதிகள் மறுத்துள்ளனர்.

அவ்வாறு வெளியே செல்லுமாறு கூறிவிட்டு என் கவுன்டர் முறையில் தமிழ் அரசியல் கைதிகளைச் சுட்டுக் கொல்வதே நோக்கமாக இருந்ததாக கைதியொருவர் தமது உறவினர்களுக்குக் கூறியதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை ஆறு மணி வரை ஊரடங்குச் சட்டம் அமூல்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.