எட்டுத் தமிழர்களைப் படுகொலை செய்த

இலங்கை இராணுவச் சிப்பாய் கோட்டாபய ராஜபக்சவின் பொது மன்னிப்பில் விடுதலை

பௌத்த குருமார் பாராட்டு- ஏனைய இராணுவத்தினரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தல்
பதிப்பு: 2020 மார்ச் 26 20:52
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 27 21:10
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
வடமாகாணம் யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் எட்டுத் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட வழங்கில் குற்றம் சுமத்தப்பட்டு இலங்கை நீதிமன்றத்தினால் மரண தன்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை இராணுவத்தின் சார்ஜன்ட் சுனில் ரத்தனாயக்கா பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய பொதுமன்னிப்பில் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையின் இறுதித் தீர்ப்பு 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றால் வழங்கப்பட்டிருந்தது. மரண தன்டனை நிறைவேற்றப்பட வேண்டுமெனத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
 
2000 ஆம் ஆண்டு படுகொலை இடம்பெற்றிருந்தாலும் 2002 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி இலங்கைச் சட்டமா அதிபரால் இவர் மீது 19 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்கு;ப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஞானபாலன் ரவிவீரன், செல்லமுத்து தேவகுலசிங்கம், விலவராஜா பிரதீபன்,சின்னையா வில்வராஜா,நடேசு ஜெயச்சந்திரன், கதிரன் ஞானச்சந்திரன், ஞானச்சந்திரன் சாந்தன்மற்றும் வில்வராஜா பிரசாத் ஆகிய தமிழர்களே படுகொலை கொலை செய்யப்பட்டிருந்தனர்.

மரண தன்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்து இவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. நிதியும் சேகரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ச இவருக்குப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.

பௌத்த குருமார் பாராட்டியுள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய இலங்கை இராணுவச் சிப்பாய்களையும் விடுதலை செய்யுமாறும் பௌத்த குருமார் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கைத் தீவு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு சுனில் ரத்னாயக்கா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொதுமக்களை படுகொலை செய்த இலங்கை இராணுவச் சிப்பாய்களை கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி என்ற முறையில் விடுதலை செய்ய முடியும் என்றால் இலங்கை நீதிமன்றத்தை மூடுங்கள் என வன்னி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்பட்டாத நிலையில் பாடுகொலைக் குற்றச்சாட்டில் மரண தன்டளை விதிக்கப்பட்டிருந்த இலங்கை இராணுவச் சிப்பாய் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.