கொரோனா வைரஸ்-

வடக்குக் கிழக்கில் பாரிய தாக்கம் இல்லை- யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படலாம்

யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தகவல்
பதிப்பு: 2020 ஏப். 12 22:04
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 12 22:42
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#coronavirus
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடு;க்கப்பட்டு வரும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் ஏழு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, தொற்றுள்ளவர்களில் இதுவரை 55 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக இலங்கைச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது. ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. கொரேனா வைரஸ் தாக்கம் அதிகமாகக் காணப்பட்ட யாழ் மாவட்டத்தில் தற்போது அதன் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை நிர்ந்தரமாகத் தளர்த்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் குணமடைந்து வருகின்றனர். பாரிய தாக்கம் எவருக்கும் இல்லை. புதிதாக எவரும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக இனம் காணப்படவில்லை என்றும் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறினார்.

வைரஸ் தொற்று இல்லாத இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்குமானால் இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நடைமுறையில் தளர்வுகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அதேவேளை, கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் புதிதாக எவரக்கும் தொற்று ஏற்படவில்லை என்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு. திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பாரிய அளவில் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அம்பாறை அக்கரைப்பற்றுப் பி;ரதேசத்தில் மாத்திரம் கடந்த வாரம் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குறித்த அந்தப் பிரதேசம் மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணத்திலும் மன்னார் தாரபுரம் கிராமத்தைத் தவிர மன்னாரில் வேறு எந்தப் பகுதியிலும் தொற்று ஏற்படவில்லை. முல்லைத்தீவு, கிளிநொச்சி. வவனியா ஆகிய மாவட்டங்களிலும் வைரஸ் தொற்று எவருக்கும் ஏற்படவில்லை.