உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் கைது

விசாரணை தொடரும் என்கிறது இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு
பதிப்பு: 2020 ஏப். 14 22:43
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 14 23:18
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#eastersunday
#attacks
இலங்கையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்திருந்த ரிஷரட் பதியுதீனின் சகோதர் ரியாத் பதியுதீனைக் கைது செய்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை புத்தளம் பகுதியில் வைத்து ரியாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
 
முன்னாள் அமைச்சர் ரிஷரட் பதியுதீன் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்று கூறி பௌத்த குருமார் குற்றம் ஏற்கனவே சுமத்தியிருந்தனர். அவரைக் கைது செய்ய வேண்டுமென அத்துரலியே ரத்தன தேர்தல், ஞானசார தேரர் உள்ளிட்ட பலரும் சிங்கள அமைப்புகளும் கடந்த ஆண்டு கோரிக்கை விடுத்திருந்தன.

ஆனால் ரிஷரட் பதியுதீன் குற்றமற்றவரென முன்னாள் பொலிஸ் மா அதிபர் விசாரணையின் பின்னர் கூறியிருந்தார். கொழும்பு பிரதான நீதவான் நிதிமன்றத்திலும் அவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ச கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்ற மறூநாளே ரிஷரட் பதியுதீன் கைது செய்யப்பட வேண்டுமென பௌத்த குருமார் மீண்டும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் அவருடைய சகோதர் ரியாத் பதியுதீன் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே குற்றச்சாட்டின் அடிப்படையில் குருநாகல் மாவட்ட வைத்தியசாலையின் மகப் பேற்று வைத்தியர் முகமட் ஷாபி கடந்த ஆண்டு மே மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டுக் கடந்த ஆண்டு ஒக்ரேபார் மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். குற்றத்தை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லையென்று கூறியே இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். சிங்களப் பெண்களுக்கு்ச் சட்டவிரோதமாகக் கருத்தடை சந்திர சிகிச்சை செய்தார் என்ற குற்றச்சாட்டிலேயே முகமட் ஷாபி கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் அவர் மீது ஆரம்பத்தில் இருந்தே விசாரணைகளை நடத்துமாறு குருநாகல் நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் இலங்கைப் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.