கொரோனா வைரஸ் தொற்று

யாழ்ப்பாணத்தில் 15 ஆக அதிகரிப்பு- ஆனால் புதிதாக எவரும் தனிமைப்படுத்தப்படவில்லை

வைத்தியர் சந்தியமூர்த்தி தகவல்- இலங்கையி்ல் 233 ஆக அதிகரிப்பு
பதிப்பு: 2020 ஏப். 14 23:49
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 15 00:13
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#coronavirus
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை மேலும் 14 பேருக்கு வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கைச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனையில் 12 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுதடுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.


 
இந்த எண்ணிக்கையோடு யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் ஏற்கனவே தனிமைப்படுத்தல் நிலையங்ளில் இருந்தவர்களுக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக எவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்று சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இன்று 24 பேருக்கான கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 14 பேர் பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள்.

சுவிஸ்லாந்து நாட்டில் இருந்து வருகை தந்த போதகர் ஒருவருடன் கூடிய அளவில் தொடர்பில் இருந்த 20 பேர் பலாலிப் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் ஆறு பேருக்கு ஏற்கனவே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வெலிகந்த ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை எஞ்சியிருந்த 14 பேருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லையென்றும் ஏற்கனவே தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு தடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த மக்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனைவிட வேறு பிரதேசங்களில் இருந்து புதிதாக எவரும் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் அவா் மேலும் கூறினார்.