கொழும்பில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வடமாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்

அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை கொனேரா சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகிறது

தனக்கு எதுவுமே தெரியாதென்கிறார் கிளிநொச்சிப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்
பதிப்பு: 2020 ஏப். 26 22:20
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 26 22:58
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#coronavirus
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரித்துச் செல்லும் நிலையில், வைரஸ் தொற்றுள்ளவர்கள் எனச் சந்தேககிக்கப்படுவோரைத் தனிமைப்படுத்தும் நிலையங்கள் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் அமைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் வடமாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை இலங்கைச் சுகாதார அமைச்சினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. வடமாகாணத்துக்குரிய கொரோனா வைத்தியசாலையாக மாற்றும் நோக்கிலேயே பொறுப்பேற்றுள்ளதாகச் சுகாதார அமைச்சு கூறியுள்ளது. ஆனால் கொழும்பில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகும் நோயளர்களுக்குச் சிகிச்சை வழங்குவதற்காகவே பொறுப்பேற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.
 
ஏனெனில் வடமாகாணத்தில் கொரேனா வைரஸ் தாக்கம் குறைவடைந்துள்ளது. ஆனால் கொழும்பில் இருந்து பாதிக்கப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் ஆயிரத்துக்கும் அதிகமான நபர்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி தனிமைப்படுத்தும் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலருக்குத் தற்போது கொரேனா வைரஸ் தாக்கியிருப்பது ரத்தப் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனாலேயே அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை கொரேனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகின்றது.

அக்கராயன் வைத்தியசாலையில் இடம்பெற்ற வைத்திய சேவைகளில் சிலவற்றை ஸ்கந்தபுரம் ஆயுள்வேத மற்றும் பொது கட்டடங்களுக்கு மாற்றுமாறு வடமாகாண சுகாதாரத் திணைக்களத்துக்குக் கொழும்பில் இருந்து அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஏற்பாடு தொடர்பாக தனக்கு எதுவுமே தெரியாதென்றும் கிளிநொச்சிப் பிராந்திய பிரதிச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவன் செய்தியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார். வேண்டுமானால் வடமாகாண சுகாதாரத் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு கேட்குமாறும் அவர் கூறியுள்ளார்.

அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் 15 கிராமங்களைச் சேர்ந்த பத்தாயித்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் மருத்துவ சேவையைப் பெறுகின்றனர்.

போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளற்ற நிலையில் இந்த வைத்தியசாலையை நம்பி வாழ்கின்ற பொது மக்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகள் எதுவுமேயின்றி குறித்த வைத்தியசாலை, கொரோனா வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளதைாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனைத் தடுப்பதற்கோ அல்லது கேள்விக்கு உட்படுத்தவோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறு தமிழ்க் கட்சிகள் எதுவுமே எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையெனவும் மக்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, இன்று ஞாயிற்றுக்கிழமை இரவுவரை நாற்பத்து ஐந்து பேருக்கு வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக ஐநூற்றி ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக இலங்கைச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலலமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.