தாயகப் பிரதேசமான வடமாகாணத்தில்

இராணுவத்தினர் பொலிஸார் பிரதேச மக்கள் மீது தாக்குதல்

நாகர்கோயில், முள்ளிவாய்க்கால், சண்டிலிப்பாய் பிரதேசங்களில் ஐவர் காயம். நால்வர் கைது
பதிப்பு: 2020 மே 09 23:05
புதுப்பிப்பு: மே 10 00:38
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளான மே மாதம் 18 ஆம் திகதி பதினொரு ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினரும் இலங்கைப் பொலிஸாரும் பொது மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாகர் கோயில், யாழ் சண்டிலிப்பாய், முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் பொது மக்கள் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். யாழ். நாகர்கோயில் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்து இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் வயோதிப பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். ஆனால் பிரதேச மக்கள் ஒன்று திரண்டதயைடுத்து தாக்குதல் நடத்திய இராணுவத்தினர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
 
ஆனாலும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்திய வீட்டு வளவில் இருந்து இராணுவத்தினர் பயன்படுத்தும் தொப்பி, கைத்தொலை பேசிகள் மக்களால் மீட்கப்பட்டுள்ளன. சென்ற தைப் பொங்கலன்று பிரதேச மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளின் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக மக்கள் சந்தேகிக்கின்றனர்.

அதேவேளை, நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளியான இளைஞன் ஒருவனை இராணுவத்தினர் தொடர்ச்சியாகத் தேடி வருகின்றனர். ஆனால் அவ்வாறு சந்தேகமான இளைஞனே இல்லையென பொலிஸார் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். அவ்வாறு எவரையுமே தேடவில்லையெனப் பொலிஸார் கூறியிருக்கின்ற நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு குறித்த முன்னாள் போராளியின் வீட்டுக்குள் இராணுவத்தினர் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக மக்கள் கூறுகின்றனர்.

குறித்த முன்னாள் போராளி அங்கு இல்லாதால் பிரதேசத்தில் இருந்த இளைஞர்களை இராணுவத்தினர் தாக்கி அட்டகாசம் புரிந்த நிலையிலேயே மக்கள் ஒன்று திரண்டனர். இதனால் இராணுவத்தினர் அங்கிருந்து தப்பியோடியதாகவும் தாக்குதலில் வயோதிபப் பெண் ஒருவர் காயமடைந்ததாகவும் பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு மற்றும் முள்ளிவாய்க்கால் மேற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காயமடைந்து மூன்று பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். ஆனால் இந்தத் தாக்குதல் தொடர்பாக உறவினர்கள் முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டச் சென்றபோது. அங்கிருந்த பொலிஸார் முறைப்பாட்டை ஏற்கவில்லை. தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணங்கள் எதுவுமே தெரியவில்லையென உறவினர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் முறையிட்டுள்ளனர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, யாழ் சண்டிலிப்பாய் இரட்டைப்புலவு வைரவர் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடொன்றிற்குள் சிவில் உடையில் நுழைந்த இலங்கைப் பொலிஸார் இருவர் அங்கிருந்த இளைஞன் ஒருவரைத் தாக்கியுள்ளனர். இதனால் அந்த இளைஞர் காயமடைந்துள்ளார். இன்று சனிக்கிழமை நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் இருந்தவர்கள் அவலக்குரல் எழுப்பியதால், பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் குறித்த வீட்டிற்குள் ஓடிச் சென்றனர். இதனால் பொலிஸாருடன் மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து வீட்டில் இருந்த நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். காயமடைந்த இளைஞனை ஏற்றிச் செல்வதற்காகச் சம்பவ இடத்திற்கு வந்த அம்பூலன்ஸ் வாகனம் பொலிஸாரால் திருப்பி அனுப்பப்பட்டதாகப் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள இரு குடும்பங்களிடையே ஏற்பட்டிருந்த முரண்பாடுகளைப் பயன்படுத்தி அங்கு சென்ற பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா வரும் வரையான ஏ-09 வீதியில் அளவுக்கு அதிகமான இலங்கை இராணுவத்தினர் குவிக்கப்பட்டுச் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சென்ற திங்கட்கிழமை சந்தித்தபோது கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.