ஈழத்துப் பெண்கள் மத்தியில்

சமூக மாற்றத்தை முன்னிலைப்படுத்திய பத்மா சோமகாந்தன்

கொழும்புத் தமிழ்ச் சங்கம் அனுதாபம்
பதிப்பு: 2020 ஜூலை 15 23:15
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 16 15:32
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
ஈழத்தமிழ் இலக்கிய முற்போக்கு எழுத்துலக முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் இயற்கை எய்தியமை, பேரிழப்பாகுமென கொழும்புத் தமிழ்ச் சங்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்போக்கு எழுத்துலகில் பல விருதுகளைப் பெற்று ஈழத்துப் பெண்களுக்குப் பெருமை சேர்த்தவர் பத்மா சோமகாந்தன் என்று சங்கத்தின் தலைவர் ஆ,குகமூர்த்தி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் 1934ஆம் ஆண்டு பிறந்த இவர், யாழ் நல்லூர் சாதனா பாடசாலை, யாழ் மங்கையற்கரசி வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராக நீண்டகாலம் பணியாற்றியிருந்தார். பின்னர் யாழ் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் இவர் பணியாற்றியிருந்தார்.
 
சாகித்திய ரத்னா விருதுக்குத் தகுதியுடையவர். ஆனால் இறக்கும் வரை அவர் அந்த விருதுக்குத் தெரிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் கவலையும் முற்போக்கு எழுத்தாளர்கள் மத்தியில் உண்டு

கல்வித்துறை மூலமாகவும், இவர் பெண்களின் முன்னேற்றம் பற்றி அறிவும் உணர்வும் சர்ந்த கட்டுரைகளை எழுதியதோடு, மாணவர்கள் பலரையும் அதற்கேற்றவாறும் பயிற்றுவித்தார். இலக்கிய கலாவித்தகி, செஞ்சொற்செல்வி, ஆகிய கௌரவப் பட்டங்களைப் பெற்றிருந்த பத்மா சோமகாந்தன், மூத்த எழுத்தாளரான அமரர் பிரம்மஸ்ரீ நாகேந்திரக் குருக்கள் சோமகாந்தனைத் திருமணம் செய்திருந்தார்.

இவரது கணவர் ந. சோமகாந்தன் 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயற்கை எய்திய பின்னரும், தனது எழுத்துலகப் பணியில் தொடர்ந்தும் ஈடுபட்டார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கொழுபுத்தமிழச் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இறக்கும்போது துணைத் தலைவராகவும் பதவி வகித்திருந்தார். இவரது மறைவுக்கு கொழும்புத் தமிழச் சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அன்று தமிழ்த்தேசிய அரசியலைத் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்த சுதந்திரன் வாரப் பத்திரிகை ஈழத்தில் முதன் முதலாக 1954ஆம் ஆண்டு சிறுகதைப் போட்டியொன்றை நடாத்தியது. அப்போட்டியில் பத்மா சோமகாந்தன், இரத்தபாசம் என்ற சிறுகதையை எழுதி முதற்பரிசைப் பெற்றிருந்தார்.

அன்றில் இருந்து ஆரம்பித்தது இவருடைய முற்போக்கு எழுத்துப் பணி. புதுமைப்பிரியை என்ற புனைபெயரில் ஈழகேசரி, வீரகேசரி, தினபதி, தினகரன், சுதந்திரன் மற்றும் தினக்குரல் போன்ற பத்திரிகைகளிலும் வேறு பல சஞ்சிகைகளிலும் எழுதி வந்தார். ஆசிரிய சேவையில் ஈடுபட்டுப் பின்னர் அதிபராகத் தரமுயர்ந்து கல்விப் பணியில் ஈடுபட்ட பத்மா சோமகாந்தன், நீண்டகாலம் யாழ் நல்லூரில் வாழ்ந்து ஓய்வுபெற்ற பின்னர் 1990களில் கொழும்புக்கு இடம்பெயர்ந்தார்.

தமிழ் நிலைச் சிந்தனையில் ராஜம் கிருஸ்ணண் நாவல்கள் என்ற ஆய்வுக் கட்டுரையை வெள்ளவத்தையில் இயங்கும் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் இவர் சமர்ப்பித்திருந்தார்.

1996ஆம் ஆண்டு வடக்குக் கிழக்கு மாகாண சபை நடத்திய இலக்கிய விழாவில். இவர் சிறுவர் இலக்கியம் தொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். 2001ஆம் ஆண்டு கொழும்பில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய ஆய்வு மாநாட்டில் வடமாகாணச் சிறுகதைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

கடவுளின் பூக்கள் சிறுகதைத் தொகுதி லில்லி தேவசிகாமணி பரிசு பெற்றது. வேள்வி மலர்கள் சிறுகதைத் தொகுப்பு சென்னை இந்து நாளிதழின் பரிசு பெற்றது. புதிய வார்ப்புகள், கரும்பலகைக் காப்பியங்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகள் சார்க் நாடுளின் பெண்கள் அமைப்பின் விருதைப் பெற்றது.

அற்றைத் திங்கள் சிறுகதைத் தொகுதி வடக்குக் கிழக்கு பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் விருதைப் பெற்றது. ஈழத்து மாண்புறு மகளீர் என்ற நூல், ஈழத்தில் சாதனை படைத்த பெண்கள் பற்றிய வரலாற்று நூலாகும். இதற்கு இலங்கை இலக்கியப் பேரவை விருது வழங்கிக் கௌரவித்தது.

கொழும்புத் தமிழச் சங்கம் நடத்திய சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் பெண்கள் தொடர்பான சிறுகதை, கவிதை குறித்த ஆய்வரங்கை நடத்துவதற்கான பொறுப்பை இவர் ஏற்றிருந்தார். கொழும்பு இந்துமா மன்றம் கொழும்பு இந்து மகளிர் மன்றம், அகில இலங்கை அரச எழுத்தாளர் சங்கம், முற்போக்கு எழுத்தளர் சங்கம் ஆகியவற்றின் உப தலைவியாகவும் பதவி வகித்திருந்ததார்.

2002ஆம் ஆண்டில் இருந்து 2005ஆம் ஆண்டு வரை வீரகேசரியில் எழுதிய இளம் பெண்களது பிரச்சினைகளின் தீர்வுக்கான ஆலோசனைகளைத் தொகுத்து நெஞ்சுக்கு நிம்மதி என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். இவர் இலங்கைப் பிராமணர் குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தன்னுடைய முற்போக்கு எழுத்துகள் மூலம் ஈழத்தில் அன்றிருந்த சாதிக் கட்டமைப்புகளுக்கு எதிரான கட்டுரைகளையும் சிறுகதைகளையும் துணிவோடு எழுதினார்.

இவருடைய படைப்புகள், அன்று வீட்டுக்குள் முடங்கியிருந்த பெண்கள் வெளியே வந்து கல்வியைக் கற்க வாய்ப்பாக இருந்தது என்ற கருத்துக்களும் இல்லாமில்லை.

கடவுளின் பூக்கள், வேள்வி மலர்கள், மாண்புறு மகளிர், அனுமன் கதை, ஆகிய நூல்களை வெளியிட்டிருந்த பத்மா சோமகாந்தன், பெண்ணின் குரல் என்ற மகளீர் சஞ்சிகையின் ஆசிரியராகவும் பதவி வகித்திருந்தார். ஊடறு என்ற தமிழ் ஊடகப் பெண்கள் அமைப்பின் தலைவியாகவும் இவர் பதவி வகித்திருந்தார்.

சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவு மாநாடு ஒன்று அமெரிக்காவின் சிக்காகக்கோ நகரில் இடம்பெற்றது. அங்கு நடத்தப்பட்ட ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசும் தங்கப்பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டது.

கல்வியாளர், எழுத்தாளர், விமர்சகர், பத்திரிகையாளர் என்ற பன்முக ஆளுமை கொண்ட பத்மா சோமகாந்தன், இலங்கை அரசின் உயர் விருதான சாகித்திய ரத்னா விருதுக்குத் தகுதியுடையவர். ஆனால் இறக்கும் வரை அவர் அந்த விருதுக்குத் தெரிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் கவலையும் முற்போக்கு எழுத்தாளர்கள் மத்தியில் உண்டு.