இலங்கை அரசாங்கம்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும்- மகிந்த தேசப்பிரிய

சட்டப் பிரச்சினை இருப்பதாகவும் கூறுகிறார்
பதிப்பு: 2020 ஒக். 02 23:38
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 03 00:04
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை இந்த ஆண்டு நடத்த வேண்டுமென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக சென்ற யூன் மாதம் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டி ஏற்பட்டதால் மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதென்றும் மகிந்த தேசப்பிரிய கூறினார். மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எடுத்துக் கூறியுள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
 
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட மகிந்த தேசப்பிரிய, மாகாண சபைத் தேர்தல்கள் மேலும் மேலும் தாமதமடைந்தமையினால் சட்டப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

20ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தாலும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் சட்டப்பிரச்சினை இருப்பதாகவும் ஆனாலும் நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை சமர்பித்து நிறைவேற்றி மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியுமெனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அதேவேளை. மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியம் இல்லையெனவும் மாகாணங்களுக்கான அதிகாரப்பரவலாக்கத்துக்குரிய 13ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமெனவும் அமைச்சர்கள் பலர் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.