இலங்கை ஒற்றையாட்சி அரசின்

வரலாற்றுப் பாடநூல்களில், இலங்கை வரலாறா? சிங்கள பௌத்த வரலாறா?

தமிழ் மொழிமூல மாணவர்கள் எதைக் கற்பது? 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரான வரலாற்றுத் திரிபும் திணிப்பும்
பதிப்பு: 2020 ஒக். 10 11:23
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 11 22:30
main photo main photo main photo main photo main photo main photo
- சண்முகம் இந்திரகுமார்
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசம் உள்ளிட்ட இலங்கைத் தீவின் மொத்த வரலாற்றையும் வரலாற்றுப் பாடமாக அனைத்து பாடசாலைப் பிள்ளைகளும் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் எமது கலைத்திட்டம் (பாடத்திட்டம்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தனித்துவத்தை அறிந்து அதைப் பாதுகாத்து, உலகின் நிலைமைகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய நாட்டுப்பற்றுள்ள ஆற்றல் நிறைந்த இலங்கையரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு பாடசாலை கலைத் திட்டத்தில் கட்டாய மையப் பாடமாக 2007 ஆம் ஆண்டிலிருந்து வரலாற்றுப் பாடம் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இலங்கைக் கல்விக் கொள்கை மறுசீரமைப்பில் விபரிக்கப்பட்டுள்ளது.
 
Histry
தமிழ் மரபுரிமைகள் சார்ந்த ஆவணங்கள் போதியளவு இருந்தும். இவை தமிழ் மொழி மூலப் பாடநூல்களில் பொருத்தமான இடங்களில் குறிப்பிட்டுக் காண்ப்பிக்கமால் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றமைக்கான காரணம் என்ன என்பது குறித்து தமிழ் மொழி மூல துறைசார் அறிஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தமிழலான தொல்லியல் சாசனங்கள். குறிப்பாக நாணங்கள். கல்வெட்டுக்கள், கட்டடங்கள். புதைபொருட்கள், கழிமண் தாழிகள், சுடுமண் பொருட்கள் என பல்வேறுபட்ட மரபுரிமைச் சின்னங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழ் மொழி மூலப் பாடநூல்களில் இவற்றைக் காண்பதில்லை. அத்துடன் சிங்கள லிபி வரிவடிவத்தில் அமைந்த சொற்களும், பாலி மொழிச் சொற்களும் தமிழ் மொழி மூல மாணவர்களுக்குப் பரீட்சையம் இல்லாத பல சொற்களும் மொழி பெயர்ப்புச் செய்யப்பட்ட தமிழ் மூல வரலாற்றுப் பாடநூல்களில் காணப்படுகின்றன. (கட்டுரையில் பிரசுரிக்கப்பட்டுள்ள படங்கள் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் எழுதிய இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டவை- இந் நூல் இந்துக் கலாசாரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது)

இந்த நோக்கத்தினை மேலும் அர்த்தமுள்ளதாக செயற்படுத்த 2015ஆம் ஆண்டிலிருந்து புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் தேசிய பொதுக் குறிக்கோள்கள் மற்றும் பொதுத் தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுப் பாடத்திற்கென இனங்காணப்பட்ட 23 தேர்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டு 6ஆம் தரத்திலிருந்து 11ஆம் தரம் வரையிலான வரலாற்றுப் பாடக் கலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

6ஆம் தரத்திற்கான இப்பாடத்திட்டம் 2016 ஆம் ஆண்டிலிருந்து செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டது. இப்பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் 5 தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அவ்வாறே 7ஆம் தரத்தில் 5 தேர்ச்சிகளையும் 8ஆம் தரத்தில் 5 தேர்ச்சிகளையும் 9ஆம் தரத்தில் 6 தேர்ச்சிகளையும் 10 ஆம் தரத்தில் 10 தேர்ச்சிகளையும் 11ஆம் தரத்தில் 8 தேர்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு பாடநூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஆனால் மேற்படி கல்விக் கொள்கைக்கு ஏற்ப தமிழ் மொழிமூல வரலாற்றுப் பாடநூல், முற்று முழுதாக சிங்கள கலாசாரத்தின் அடிப்படையிலான மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. பாடநூல் ஆக்க நியமங்களின் படி, குறித்த மொழி ஒன்றில் எழுதப்பட்ட மரபுரிமை வரலாறுகளுடன் கூடிய பாடநூலை, பிறிதொரு மொழியில் மொழியாக்கம் செய்யப்படுவது சர்வதேசப் பாடநூல் நியமங்களுக்கு ஏற்புடையதல்ல.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயற்படும் கல்வி தொடர்பான யுனெஸ்கோ நிறுவனத்தின் பரிந்துரைகளில் இந்த நியமங்கள் முக்கியமாகப் பேணப்படுகின்றன. ஆனால் இலங்கை அரசாங்கம் காலம்தோறும் தமிழ் மொழிமூலப் பாடநூல் தயாரிப்புத் திட்டங்களில் துறைசார்ந்த தமிழ் அறிஞர்களை இணைத்துக் கொணடாலும், அவர்களின் தமிழ் மரபுரிமைகள் சார்ந்த ஆலோசனைகளைக் கருத்தில் எடுப்பதில்லை.

ஒரு நாட்டின் வரலாறு என்பது ஒவ்வொரு மாணாக்கருக்கும் அவசியம் தெரிந்திருக்க வேண்டியதும், அதில் போதிய அறிவினைக் கொண்டிருப்பதும் அவசியமாகும். எமது பாடசாலைப் பாடத்திட்டத்தில் வரலாறு முக்கிய பாடமாக இடப்பெற்றிருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும். அப்பாடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குரிய கட்டாய பாடங்களில் ஒன்றாக இடம்பெற்றிருப்பதனால் அனைத்து மாணவர்களும் அப்பாடத்தைக் கற்றுவருகின்றனர்.

கல்விக் கொள்கைக்கு ஏற்ப தமிழ் மொழிமூல வரலாற்றுப் பாடநூல், முற்று முழுதாக சிங்கள கலாசாரத்தின் அடிப்படையிலான மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. பாடநூல் ஆக்க நியமங்களின் படி, குறித்த மொழி ஒன்றில் எழுதப்பட்ட மரபுரிமை வரலாறுகளுடன் கூடிய பாடநூலை, பிறிதொரு மொழியில் மொழியாக்கம் செய்யப்படுவது சர்வதேசப் பாடநூல் நியமங்களுக்கு எற்புடையதல்ல

வரலாறு என்பது கடந்தகாலச் சமூகத்திற்கும் நிகழ்காலச் சமூகத்திற்கும் இடையிலான உரையாடலைக் குறிக்கிறது. நாம் எங்கிருந்து வந்தோம் என்பதைத் தெரிந்தால்தான் எங்கே போகிறோம் எங்கே போக வேண்டும் என்பது தெரியும். அதில் நல்லவை, கெட்டவை, சாதகமானவை, பாதகமானவை என சகலதும் இருக்கலாம். எனினும், பக்கம் சாராது உள்ளதை உள்ளபடி கூறுவது உண்மை வரலாறாகும். அந்த வகையில் இலங்கையில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளை, இளமை முதல் கற்றுணர்ந்து கொள்வதற்காகவே வரலாற்றுப் பாடம் பாடசாலைகளில் கட்டாய பாடமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் தமிழ், சிங்கள மக்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. எமது பண்டைய இராசதானிகளைச் சிங்கள மன்னர்களும் தமிழ் மன்னர்களும் மாறிமாறி ஆட்சி செய்துள்ளனர். சிங்கள மன்னர்களின் படைகளில் தமிழ் படைவீரர்களும், தமிழ் மன்னர்களது படைகளில் சிங்களப் படைவீரர்களும் இருந்து ஆட்சி அதிகாரத்திற்காகப் போராடியுள்ளனர்.

அவர்கள் இராச ஆதிக்கத்திற்காகப் போராடினார்களே தவிர இன அடிப்படையில் பிரிந்து நின்று போராடவில்லை. பொலநறுவை அரசில், அரசையும் பௌத்த மதத்தையும் பாதுகாத்தவர்கள் தமிழ்ப்படை வீரர்கள் என எமது இலக்கியங்கள் கூறுகின்றன.

பொலநறுவையில் ஆட்சி புரிந்த சிங்கள மன்னர்கள் கிழக்கிலங்கையில் இருந்த சைவ ஆலயங்களைப் பாதுகாத்து அவற்றிற்கு நன்கொடைகளை வழங்கியதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. ஆனால் பல சிங்கள வரலாற்றாசிரியர்கள் தமிழ் சிங்கள மக்களிடம் நிலவிய நல்லுறவுகளை ஆராய்வதில் அக்கறை காட்டுவதை விட ஆட்சி உரிமைக்கான போராட்டங்களை தமிழ் சிங்கள மக்களுக்கு இடையிலான இனப் போராட்டமாகச் சித்தரிப்பதிலேயே அதிக அக்கறை காட்டி வந்துள்ளனர்.

இதுவரை காலமும் எமது வரலாற்றுப் பாட நூல்கள் சிங்கள வரலாற்று ஆசிரியர்களால் சிங்கள மொழியில் எழுதப்பட்டவை. அந்நூல்களே தமிழிலும், ஆங்கிலத்திலும் அப்படியே மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அப்பாட நூல்கள் பௌத்த, சிங்கள வரலாற்றை முதன்மைப்படுத்தி எழுதப்பட்டவை. அந்நூல்களைப் படிக்கும் போது இந்த நாட்டில் சிங்கள மக்களும், பௌத்த மதமுமே இருப்பது போன்ற தோற்றப்பாடு காணப்படுகின்றது. இது தமிழ் மாணவர்களிடையே அடி மனதில் ஓர் ஆழமான தாழ்வுச் சிக்கலை ஏற்படுத்தும்.

அந்நூல்களில் தமிழ் வரலாற்றாசிரியர்களின் பங்களிப்பு என்பது தமிழ் எழுத்துப் பிழைகளைச் சரிபார்ப்பதோடு முற்றுப் பொறுகிறது. அவர்களுக்குத் தமிழர் வரலாறுகள் பற்றி எந்தவொரு புதிய விடயங்களைச் சேர்ப்பதற்கு உரிமையோ சந்தர்ப்பமோ வழங்கப்படுவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வரலாற்றுப் பாட நூல்களில் அரிதாக தமிழர், தமிழ் மன்னர்களின் ஆட்சி பற்றிக் கூறப்பட்டிருந்தது. அந்த வரலாறும் 2016ஆம் ஆண்டு புதிய பாடத்திட்ட வரலாற்றுப் பாட நூல்களில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

உதாரணமாக ஆறாம் தரம் மாணவர்களுக்காக முன்பு எழுதப்பட்ட பாட நூலில் தமிழர், தமிழ் மன்னர் பற்றி வரலாறு சுருக்கமாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த நூலில் அதுவும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் மாணவர்கள் எமது நாட்டு வரலாறு என்ற போர்வையில் சிங்கள மாணவர்களுக்காக எழுதப்பட்ட வரலாற்றையே பரீட்சைகளுக்காக கற்கவேண்டியுள்ளது.

இதனால் தமிழ் மொழி மூலம் வரலாறு கற்கும் மாணவர்கள் தமது இனத்தின், தமது பண்பாட்டின் வரலாற்றைக் கற்கும் உரிமை நுட்பமாக மறுக்கப்படுகிறது. இவற்றிலிருந்து வரலாற்றுப் பாடத்திட்டத்தினைத் தயாரித்துள்வர்களின் நோக்கம் தமிழ் மாணவர்களுக்கு தம்மைப் பற்றிய உண்மை வரலாறு தெரியக் கூடாது என்பதே. இதில் அவர்கள் வெகு அவதானமாக இருப்பது தெரிகிறது.

இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில் வடக்கு எல்லை பருத்தித்துறையாகவும், தென் எல்லை தேவேந்திரமுனையாகவுமுள்ளது. அதேபோல், கிழக்கு எல்லை மட்டக்களப்பாகவும், மேற்கு எல்லை கொழும்பாகவும் உள்ளது. இந்த எல்லைக்குள் இடம்பெற்றுள்ள பண்டைய வரலாற்று நிகழ்வுகள் அனைத்துமே இலங்கை வரலாற்றில் அடக்கப்பட வேண்டியவை. அவை விரிவாகவோ, சுருக்கமாகவோ அமையலாம்.

எனினும், தமிழர்களின் பண்டைய இருப்பை வெளிப்படுத்தக்கூடிய சாட்சிகள், ஆட்சியாளர்கள் தொடர்பிலான விடயங்கள் எவையும் பாடசாலை மாணவர்களுக்கான வரலாற்றுப் பாட நூல்களில் இடம்பெறாமையானது பாரிய குறைபாடாகும். அத்தகைய குறைபாடுகளுடன்கூடிய வரலாறே தமிழ் மொழி மூல மாணாக்கருக்குக் கற்பிக்கப்படுகின்றது.

தமிழர்களின் பண்டைய இருப்பை வெளிப்படுத்தக்கூடிய சாட்சிகள், ஆட்சியாளர்கள் தொடர்பிலான விடயங்கள் எவையும் பாடசாலை மாணவர்களுக்கான வரலாற்று பாட நூல்களில் இடம்பெறாமையானது பாரிய குறைபாடாகும். அத்தகைய குறைபாடுகளுடன்கூடிய வரலாறே தமிழ் மொழி மூல மாணாக்கருக்குக் கற்பிக்கப்படுகின்றது

இன ஒற்றுமைக்குப் பதிலாக இனங்களுக்கிடையே வேற்றுமையையும், பகைமையினையும் வளர்க்கும் விதத்திலே இப் பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. தமிழ் மக்கள் இந்த நாட்டின் வந்தேறு குடிகள் - அந்நியர்கள் என்ற உணர்வுகளை ஊட்டக்கூடிய வரலாற்றுப் பாடத் திட்டமே இன்று நடைமுறையில் உள்ளது.

அண்மைக்காலத்தில் பாடசாலை மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட வரலாற்றுப் பாட நூல்களில் விஜயன் வருகைக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் பற்றிய புதிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இப்பாடம் இலங்கையில் பரந்துபட்ட அளவில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியற் சான்றாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

இலங்கையின் மூத்த தொல்லியலாளர் கலாநிதி சிரான் தெரணியகலா வடஇலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுவில் 125000 ஆண்டுகளுக்கு முன்னர் கற்கால மக்கள் வாழ்ந்ததை விஞ்ஞானபூர்வமாக நிறுவியுள்ளார். அதேவேளை, ஆதிகாலத்தில் அநுராதபுரத்தை அடுத்த பரந்த குடியிருப்புக்களைக் கொண்ட இடமாக கந்தரோடையும் காணப்படுகிறது. இது யாழ்ப்பாணத்தின் தலைமைக் குடியிருப்பு எனத் தொல்லியலாளர் கூறுகின்றனர்.

இக் கண்டுபிடிப்புக்கள் வடஇலங்கைக்குத் தொன்மையான வரலாறு உண்டு என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன. ஆனால் இவ்விடங்களுக்கு எமது வரலாற்றுப்பாட நூல்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அந்நியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்தபோது சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களும் அந்நியர்களுக்கெதிரான போராட்டங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக, போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பையும், ஆட்சியையும் இறுதிவரை எதிர்த்துப் போராடிய யாழ்ப்பாணத்து தமிழ் அரசு குறித்தோ, தமிழ் அரசர்கள் குறித்தோ தமிழ் அரசர்களுக்கு மேற்படி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவளித்த மக்கள் குறித்தோ போதிய விளக்கங்கள் இல்லாமல் இலங்கைத் தீவின் வரலாறு திரிபுபடுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது.

அதேபோன்று, யாழ்ப்பாணத்து அரசுக்குத் தெற்கேயிருந்த வன்னித் தமிழரசு தொடர்பான குறிப்புகளும் இன்றியே இந்த வரலாற்றுப் பாட நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ் அரசின் கடைசி மன்னன் சங்கிலியன் அந்நியரான போர்த்துக்கேயருக்கு எதிராக இறுதிவரை போரிட்டதைப் போன்றே, வன்னித் தமிழ் அரசின் கடைசி மன்னன் பண்டாரவன்னியனும் ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இறுதிவரை போரிட்டு மடிந்த வரலாற்றைக்கூட பாடசாலை வரலாற்றுப் பாடங்களில் மறைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

பொலநறுவை அரசு வீழச்சியடைந்ததன் பின்னர், சிங்கள இராசதானி தெற்கு நோக்கி தம்பதேனியா, யப்பகூவா, குருநாகல், கம்பளை கோட்டை என இடம் மாறிய வரலாறு பாடநூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதே காலகட்டத்தில் வடஇலங்கையில் கலிங்கமாகன், சாவகன், வன்னியர், ஆரியச்சக்கரவர்த்திகள் ஆகியோரின் தமிழ் இராசதானிகள் தோன்றிய வரலாறு பாட நூல்களில் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. இவ்வரசுகளின் வரலாறு சொல்லப்படாததால் இன்னொரு உண்மையும் மாணவர்களுக்கு தெரியாமல் போகிறது.

போத்துக்கேயர் ஆட்சி ஏற்படுவதை கோட்டை மன்னன் வித்தியா பண்டாரனும், யாழ்ப்பாண மன்னன் முதலாம் சங்கிலியனும் ஒன்றிணைத்து எதிர்த்து போரிட்டனர். கோட்டை மன்னன் தருமபாலன் போத்துக்கேயரை ஆதரித்து கிறிஸ்தவனாக மாறிய போது அவன் தந்தை வித்திய பண்டாரன் பௌத்த மதத்தின் பெருமையைப் பாதுகாக்க பௌத்த தந்ததாதுடன் சங்கிலி மன்னனிடம் அடைக்கலம் பெற்றான்.

அவன் இறுதியில் யாழ்ப்பாண இராசதானி காலப் பூதவராயர் ஆலயத்திற்கு அருகில் இறந்த வரலாறு இன்றும் தமிழ் மக்களால் நினைவுகூரப்பட்டு வருகிறது. வன்னிப் பெருநிலப்பரப்பு ஏறத்தாழ 400 ஆண்டுகள் வன்னிச் சிற்றரசர்களால் ஆழப்பட்டது.

அதன் இறுதி மன்னன் பண்டாரவன்னியனும், கண்டி மன்னனும் இறுதிவரை ஒன்றிணைந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டனர். இவர்களைப் பிரித்து கண்டியையும், வன்னியையும் தனித்தனியாகக் கைப்பற்ற ஆங்கிலேயர் பல சூழ்சிகளைச் செய்தனர்.

ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. 1811 இல் பண்டாரவன்னியனை வெற்றி கொண்டதன் பின்னரே 1815 இல் ஆங்கிலேயர் கண்டியை வெற்றி கொள்ள முடிந்தது. இவ்வரலாற்றுச் சம்பவங்களை மாணவர்கள் தெரிந்து கொள்வது எதிர்காலத்தில் தமிழ் சிங்கள மக்களிடையே நல்லுறவு வளர உதவலாமல்லவா

உலகில் எந்தொரு மதமும் குறிப்பிட்ட இனத்திற்காக அல்லது குறிப்பிட்ட மொழிபேசும் மக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாறு இல்லை. இலங்கைக்கு பௌத்த மதம் தேவநம்பியதீஸன் ஆட்சியில் அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்து தமிழ் மக்களும் சிங்கள மக்களும் அம்மதத்தைப் பின்பற்றியதற்கு நம்பகரமான ஆதாரங்கள் உண்டு.

கிழக்கிலங்கையில் உள்ள பண்டைய கால வெல்கம் விகாரையே 11 ஆம் நூற்றாண்டில் இராஜராஜப் பெரும்பள்ளி எனப் பெயரிட்டு தமிழர்களும் வழிபட்டு வந்ததை அங்கு கிடைத்த கல்வேட்டுக்கள் கூறுகின்றன. அதேபோல் சிங்கள மன்னர்களும், இளவரசிகளும் சைவர்களாக இருந்ததற்கும், அரச சபையில் அம்மதம் வளர்க்கப்பட்டதற்கும் ஆதாரங்கள் உண்டு. இந்த உண்மைகள் பாட நூல்களில் முக்கியப்படுத்திக் கூறப்பட வேண்டும்.

இவ்வாறான மூடி மறைப்புகள் - திரிபுபடுத்தல்கள் என்பன பாடசாலை பாடங்களின் ஊடாக எமது மாணாக்கருக்கு புகுத்தப்படுகின்ற நிலையில், எமது நாட்டு மாணாக்கர் மற்றும் இளம் சந்ததியினரிடையே அவர்கள் இந்த நாட்டிலிருந்தும் அந்நியப்பட்டவர்கள் என்ற எண்ணக் கருவே மிக ஆழமாக மனதுள் பதிந்துவிடுகின்றது.

இன்றைய மாணாக்கரே நாளைய எமது நாட்டின் மன்னர்கள் என்ற நிலையில் வைத்துப் பார்க்கும்போது, இந்த நாட்டு மக்களிடையே மேலும், மேலும் கசப்புணர்வுகளை வளர்க்கும் முகமாகவே இவ்வாறான பாடத் திட்ட தயாரிப்புகள் காணப்படுகின்றன. இது மிகவும் அவதானத்தில் கொள்ளவேண்டிய விடயமாகும்.

அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு, இலங்கையை நீண்ட காலம் ஆட்சி செய்த சிறந்த மன்னர்களுள் எல்லாளன் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராவார். எல்லாளனின் ஆட்சியானது இலங்கையில் கி.மு. 205 ஆம் ஆண்டு தொடங்கி கி.மு.161 ஆம் ஆண்டு வரையுள்ள 44 வருடங்கள் நடைபெற்றது. ஆனால் இது பற்றிய வரலாறுகள் பழைய பாடநூல்களில் உண்டு. ஆனால் புதிய பாடத்திட்டத்தில் அந்த வரலாறுகள் நீக்கப்பட்டுள்ளன

இலங்கைத் தேசிய நல்லிணக்கத்தை நாம் பலமிக்கதாக கட்டியெழுப்ப வேண்டுமானால் அனைத்துத் தரப்பு மக்களும் அதை உணர்வுப்பூர்வமாக ஏற்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு எமது மாணவர்களை பாடசாலை மட்டங்களிலிருந்தே தயார்ப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே நடைபெறவில்லை.

வரலாற்றுப் பாடநூல்களில் மகாவம்சம் போன்ற பாளிநூல்களில் சொல்லப்பட்டவற்றில் இருக்கக் கூடிய தமிழர்சார்ந்த வரலாற்று உண்மைகளைச் சரியாகச் சேர்த்திருந்தால்கூட இனங்களிடையே நல்லுறவைக் கட்டியெழுப்ப சிறந்ததொரு சந்தர்ப்பம் உருவாகியிருக்கும்.

இலங்கைத் தீவின் மொத்த வரலாற்றையும் அனைத்து பாடசாலைப் பிள்ளைகளும் கற்க வேண்டும் என்ற நோககில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. இலங்கைத் திவின் தனித்துவத்தை அறிந்து அதைப் பாதுகாத்து உலகின் நிலைமைகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய நாட்டுப்பற்றுள்ள ஆற்றல் நிறைந்த இலங்கையரை உருவாக்குவதை நோக்கம் என்று சொல்லப்படுகின்றது. இதற்காகவே பாடசாலை கலைத் திட்டத்தில் கட்டாய மையப் பாடமாக 2007 ஆம் ஆண்டிலிருந்து வரலாற்றுப் பாடம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இலங்கை அரசாங்கம் மார் தட்டுகின்றது.

இந்த நோக்கத்தினை மேலும் அர்த்தமுள்ளதாக செயற்படுத்த 2015ஆம் ஆண்டிலிருந்து புதிய கல்விச் சீர்திருத்தின் மூலம் தேசிய பொதுக் குறிக்கோள்கள் மற்றும் பொதுத் தேசிய பொதுத் தேர்ச்சிகளைக் அடிப்படையாகக் கொண்டு வரலாற்றுப் பாடத்திற்கென இனங்காணப்பட்ட 23 தேர்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டு 6ஆம் தரத்திலிருந்து 11ஆம் தரம் வரையிலான வரலாற்று பாடக் கலைத்திட்டம் தேர்ச்சிகளை மையமாகக் கொண்ட முறையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆறாம் தரத்திற்கான இப்பாடத்திட்டம் இம்முயற்சியில் ஒரு அங்கமாகும். 2016 ஆம் ஆண்டிலிருந்து செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள இப்பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் ஐந்து தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே 7ஆம் தரத்தில் 5 தேர்ச்சிகளையும் 8ஆம் தரத்தில் 5 தேர்ச்சிகளையும் 9ஆம் தரத்தில் 6 தேர்ச்சிகளையும் 10 ஆம் தரத்தில் 10 தேர்ச்சிகளையும் 11ஆம் தரத்தில் 8 தேர்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு பாடநூல்கள் தயாரிக்கப்;பட்டுள்ளன.

இலங்கையில் வரலாற்றுப் பாடநூல்கள் மேற்குறித்த இலக்கினை அடைவதற்கான முயற்சியில் பாடவிதானம் அமையவில்லை என்பது வருந்தத்தக்கது.

தரம் 6,7,8,10,11 நூல்களைப் படிக்கும் ஒருவரால் (தமிழ்மொழி பெயர்ப்பில் வெளி வந்தவற்றை மட்டும் கருத்திலெடுத்து) அந் நூல்களின் பொருளடக்கம், அடுக்குமுறை, கலைச்சொற்களின் கையாளுகை, தீவின் படங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மையப் புள்ளிகள் தொடர்பில் தவறுகளையும் கருத்துப் பிழைகளையும் முரண்பாடான கூற்றுக்களையும் புறக்கணிப்புக்களையும் காணமுடியும்.

வரலாறு தரம் 10 ஐ விளங்கிக்கொண்ட வகையில் பின்வரும் அபிப்பிராயக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

வரலாற்றுக் கல்வியின் நோக்கம்

01. வரலாற்றுக் கல்வியைக் கற்பிப்பதன் நோக்கமானது ஒழுக்கவிதிகளின் தன்மையினை அல்லது இயல்புகளை அறியத்தருதலாக அமைய வேண்டும். மனித நாகரிக வரலாற்றின் மிக நீண்ட வளர்ச்சியில் ஏற்ற - இறக்கமுடைய காலகட்டங்களையும் மனித சமூகத்தின் வளர்ச்சியில் காணப்பட்ட பல்வேறு வகைப்பட்ட பண்பாட்டுப் பெறுமானங்களையும் இயற்கை தந்த ஒழுக்க விதிகளூடாக விளக்குவதாக வரலாற்றுக் கல்வி அமைதல் வேண்டும்.

02. ஒரு தேசத்தின் வரலாற்றுக் கல்வியின் பயனானது அங்கு காணப்படும் வேறுபட்ட (சமூகங்களின்) பண்பாடுகள் தொடர்பான அறிதல்களை வரலாற்றுப் பெறுமானத்தின் யதார்த்தமான நிலைப்பாடு கருதி உருவாக்க வேண்டும். வரலாற்று மாணவர்களுக்கான கற்கையளிக்கையானது ஒன்றுக்கு மேற்பட்ட சமூகங்களினதும் பண்பாடுகளினதும் விருத்தியை மையப்படுத்திய வகையில் அமைவதே அடிப்படையாதாரமாக கொள்ளப்படுகின்றது.

இந்த நோக்கமானது ஒப்பீட்டடிப்படையில் ஒவ்வொரு பண்பாட்டுச் சமூகங்களுக்கிடையில் சகிப்புத் தன்மை, பரஸ்பரம் மதிக்கும் அல்லது கௌரவப்படுத்தும் தன்மை, பல்பக்க வேற்றுமை இயல்புகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை, இணக்கமும் இணங்கிப் போகும் தன்மையை வளர்த்தெடுக்கின்ற போக்கு மற்றும் குழுவாகச் செயற்படுகின்ற தன்மைகளை வளர்த்தெடுக்கின்ற இயல்புகளை உருவாக்குவதற்கான அடிப்படைகளாக அமையும்.

03. சம காலத்து நிலைப்பாட்டினை அல்லது அதன் போக்கினை சரியான வழியில் ஒழுங்கமைத்துக் கொள்ளும் அல்லது திருத்தியமைத்துக் கொள்ளும் நோக்கில் இந்நாட்டின் வரலாற்று மரபுகள், அம் மரபுகள் ஊடாக இனங்காணப்பட்ட ஒழுக்க விதிகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தேசிய அடையாளம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றின் சாராம்சமாகவுள்ள வரலாற்றுப் பெறுமானத்தை எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் நோக்குடன் கட்டியெழுப்புதலும் வரலாற்றுக் கல்வியின் பிரதான நோக்கமாக அமைகின்றது.

04. தேசிய இணக்கப்பாடு (யேவழையெட ஊழnஉடையைவழைn) என்ற நிலையான சமாதான செயற்பாட்டினை அல்லது அதன் இருக்கையினை வேறுபட்ட பண்பாட்டுச் சமூகங்களை ஒரே கோட்டில் இணைத்து நிலைநிறுத்தும் பொருட்டு உருவாக்கப்படும் வரலாற்றுக் கல்வியின் பொதுமையான வடிவமானது பன்மைப் பண்பாட்டுக்குரிய அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட நோக்கங்களையாவது இத்தேசத்தின் வரலாற்றுக் கல்வியில் அடையப்பெறுவோமாக இருப்பின் மாணவர்களது வரலாற்றுப் பாடவிதான கல்விச் செயற்பாட்டில் ஏற்றத்தாழ்வற்ற முரண்பாடற்ற தேசிய நீரோட்டத்துடன் அல்லது எல்லாச் சமூகங்களையும் இணைத்துக்கொள்ளக் கூடிய நிலையை உருவாக்க முடியும்.

வரலாற்றுப் பாடநூல்களும் படிமுறைகளும்

NIE எனப்படும் தேசிய கல்வி நிறுவகம் வரலாற்றுப் பாடநூல்களைத் தயாரித்து வெளியிட்ட நூல்களைப் படிக்கும் ஒருவர் (இங்கு தமிழ்மொழி பெயர்ப்பில் வெளிவந்தவற்றை மட்டும் கருத்திலெடுத்து) அந் நூல்களின் பொருளடக்கம், அடுக்குமுறை, கலைச்சொற்களின் கையாளுகை, தேசப் படங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மையப் புள்ளிகள் தொடர்பில் தவறுகளையும் கருத்துப் பிழைகளையும் முரண்பாடான கூற்றுக்களையும் புறக்கணிப்புக்களையும் அவதானிக்க முடிகிறது.

வரலாறும் சமூகக் கல்வியும் என்ற தலைப்பில் 1980 களில் வெளியிடப்பட்ட வரலாற்றுப் பாடவிதானத்தில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் தற்போது வரலாறு என்ற தலைப்பில் அச்சாகும் வரலாற்றுப் பாட விதானத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளமையை தரம் 06 இலிருந்து தரம் 11 வரையுள்ள மாணவர்களுக்கான கைநூல்களிலிருந்து எடுத்துக்காட்ட முடியும்.

அதுமட்டுமல்லாது தரம் 10லுள்ள வரலாற்றுப் பாடநூல் தொல்லியல் எச்சங்களுக்கான வர்ணப்படங்களுடன் அச்சாகி வெளிவந்த நிலையில் அவை ஒரு பக்கச் சமூகத்தினரின் வரலாற்று ஆதாரமாக எடுத்துக்காட்டப்பட்டிருக்கும் முறை நன்கு அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்நூலிலுள்ள குறைபாடுகளை பின்வருமாறு வகையீடு செய்துகொள்ள முடியும்.

01. வரலாற்றை கற்பதற்கான மூலதாரங்கள் என்ற அத்தியாயத்தில் இல்ங்கைத் தமிழ் மக்களது வரலாற்றோடு தொடர்பான இலக்கியங்கள், தொல்லியல் மற்றும் நாணயவியல் சான்றுகள் எவையும் இணைக்கப்பட்டிருக்கவில்லை.

ஆனைக்கோட்டை முத்திரை

கந்தரோடை பாண்டிய நாணயங்கள்

மகாபராக்கிரமபாகுவின் நயினாதீவு தமிழ்க் கல்வெட்டு

நல்லூர் சேது நாணயமொன்றின் படம் (சங்கம் புலவில் எடுக்கப்பட்ட சேது நாணயம்)

நாயன்மார்கட்டு சிங்கையாளியன் தமிழ் கல்வெட்டு

கொட்டேகம கல்வெட்டு (தமிழ் வெண்பா)

கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட சந்தணவேணுகோபாலர்

போத்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் காலத்து இலக்கியர்களை வரலாற்று மூலங்களாக எடுத்துக்காட்டும் அதே நேரத்தில் தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை போன்றன எவ்விதத்திலும் இலங்கை வரலாற்று மூலாதாரங்களுக்குள் கருத்தில் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வத்தியாயத்தில் வரலாற்றைக் கற்பதன் முக்கியத்துவம் தொடர்பாகக் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் விரிவாக்கப்பட்டு எழுதப்பட வேண்டும். அவை இங்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் வரலாற்று மூலாதாங்களின் தொடர்ச்சியான எடுத்துக்காட்டல்களைத் தொடர்ந்து விளக்கப்படுவது இலங்கை வரலாற்று உருவாக்கத்திற்கு குறிப்பிட்ட சமூகத்தினரே பொறுப்பாக இருந்துள்ளனர் என்ற கருத்தினை மறைமுகமாக மாணவர் மனதில் நிறுவ முற்படுகிறது.

இலங்கையில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அறிஞர் பெருமக்களுக்கு நன்கு தெரிந்திருந்த ஒரு விடயமே விஜயன் வருகைக்கு அதாவது ஆரியர் குடிபெயர்ச்சியாளரின் வருகைக்கு முதலே இலங்கைத்தீவில் வாழ்ந்த சுதேசப் பெருமக்களால் இரும்பின் உபயோகம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது என்பது இவ்விரும்பு உபயோகத்தின் நுட்பங்களைப் பிரயோகித்த மக்கள் பெருங்கற்கால திராவிட இனக்குழுக்களே என்பதும் இலங்கைத் தொல்லியலாளருக்கு நன்கு புரியும்.

இது இவ்வாறிருக்க எக்காரணத்திற்காக இலங்கையின் தொடர்காலப் பண்பாடு உருவாக்கத்தில் திராவிட மக்களுக்கிருந்த பங்கினை இக்குறிப்பிட்ட வரலாற்று நூலில் மறைத்து வரைய வேண்டும்.

இவ்வரைபு முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். குளங்களைக் கட்டி அணை அமைக்கும் தொழில்நுட்ப முறையை, கலிங்கல், துருசு, சுரங்கை, கால்வாய் போன்ற நீரியல்வள அலகுகளை முதலில் அமைத்தவர்கள் பெருங்கற்கால மக்களே.

இதனை வரலாற்று மாணவர்களின் கற்கைப் பரப்பிற்குள் கொண்டுவர வேண்டும்.

சொற்பிரயோகங்கள் (தவறானவை) சொற்பிரயோகங்கள் (திருத்தியமைக்கப்பட வேண்டிய முறை)

கழிமண் ஓடக்கல்லறை சுடுமண் சவப்பெட்டி (Terracotta coffin)

முன் வரலாற்றுக் காலம் வரலாற்று உதயகாலம் ((Proto Historic Period)

புதைகுழி மயானம் (Urn Burials) jதாழிச் சவ அடக்க மையம் (Jar Burials)

கல்லறை மயானம் (Cist Burials) கற்குவியல் சவ அடக்கம் (Rock Cut Chambers) (இலங்கையில் இல்லை)

தேசப்படம் 2.2இல் வட இலங்கையிலுள்ள பெருங்கற்கால சவ அடக்க மையங்கள் புதிய நிலையில் குறிப்பிடப்பட வேண்டும்.

பூனகரி, நாகபடுவான், கட்டுக்கரை, மாயக்கை (தம்பச்செட்டி), ஆனைக்கோட்டை, எள்ளங்குளம் (எல்லாளன் குளம்) என்பன குறிக்கப்பட வேண்டும்.

மாயக்கைக் குகையினுள் இருந்து மீட்கப்பட்ட கற்கருவின் படம் பொறிக்கப்பட வேண்டும்.

இலங்கையின் அரசியல் அதிகார வளர்ச்சி என்ற தலைப்பில் (அத்தியாயம் 03) கையாளப்பட்ட சொற்பதங்கள் முற்றுமுழுவதுமாக பாளிச் சொற்களாகவே உள்ளன.

மபுறுமுகா - மகா பிரமுகர் (அரசர்) மகாசுமதிஃ மஹதே- -மகா மந்திரி அமெனஃ அமெச்செ -அமைச்சர் படகரிக (பண்டகரிக) -பண்டகசாலைப் பொறுப்பாளர் பதகுஃ படகே -நெற்களஞ்சியப் பொறுப்பாளர் கொதுறுகேன -கோணமுதலி (நடத்தை அதிகாரி) நகர குத்திஹ -நகர காவலர்ஃ நகர பரிபாலஹர் மஹாவெதனா -பெரிய வைத்தியர்

இந்நாட்டையாண்ட முக்கியமான மன்னர்கள் வரிசையில் துட்டகைமுனு மன்னர் பற்றிக் குறிப்பிடுமளவிற்கு ஏனைய மன்னர்கள் பற்றிய சிறப்பு முக்கியத்துவப்படுத்தப்படவில்லை.

கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன் 44 வருடங்கள் அனுராதபுரத்தில் தலை நகராக்கிக்கொண்டு ஆட்சிபுரிந்த எல்லாளன்;; பற்றி எவ்வித தனித்துவ விளக்கங்களும் இந்நூலில் இடம்பெறவில்லை.

இந்நிலை மாணவர்கள் மனதில் இலங்கை மன்னர்கள் பௌத்த சிங்களவர்கள் மட்டும்தான் என்ற எண்ணப்பாட்டினைத் தோற்றுவித்துள்ளது.

எல்லாளனுக்கு முன்னரும்ஃ பின்னரும் அனுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த 18 தமிழ் மன்னர்கள் பற்றி மஹா வம்சத்தில் இடம்பெற்ற சில குறிப்புக்களைக்கூட தரம் 10 வரலாற்று நூலில் தொகுப்பாளர்கள் கொடுத்திருக்கவில்லை.

இந்நிலையில் இன இணக்கப்பாடு என்பது இந்நூலை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுக் கற்பித்தலினூடாக அடைவது என்பது சாத்தியமற்றதே.

இக்குறிப்பிட்ட நூலில் இடம்பெறும் பண்டைய சமூகம் என்ற தலைப்பினையுடைய 04 ஆம் அத்தியாயம் முழுவதுமாக மீளமைப்புச் செய்யப்படுதல் வேண்டும்.

இவ்வத்தியாயத்தின் அறிமுகத்தில் 'எமது நாட்டின் வரலாற்றை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பண்டைய காலத்தில் வாழ்ந்த சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை பற்றிய விடயங்களை அறிந்து கொள்வது அவசியமாகும்.

இப்பாடத்தில் இவையனைத்தையும் பற்றிய மேலும் பல கருத்துக்களையும் விடயங்களையும் தெரிந்துகொள்ளப் போகிறீர்கள்' எனக் குறிப்பிட்டுவிட்டு இனங்களுக்கிடையேயான இணக்கப்பாடு என்ற உபதலைப்பின்கீழ் 'முற்காலத்தில் இருந்தே எமது நகரங்களில் பல்வேறு கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

இந்நாட்டில் வாழ்ந்து வந்தவர்களைத் தவிர வியாபாரத்தின் பொருட்டு வந்த ஏனைய சமயக் கலாசாரங்களைக் கொண்ட மக்கள் நகரங்களில் வாழ்ந்ததற்கான கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவர்களுள் தென்னிந்தியாவிலிருந்து வந்த தமிழர்களும் கிரேக்கம், மெஸிடேனியா ஆகிய பிரதேசங்களிலிருந்து வந்த அயோனியன்களும் ...... மலாக்கா குடாநாட்டிலிருந்து வந்த ஜாவர்களும் காணப்பட்டனர்' என விபரிக்கப்பட்டுள்ளது.

இதன் பின் பௌத்த சமயக் குழுவாக இருந்த தமிழர் ஒருவரைப் பற்றி அனுராதபுர அபயகிரி விகாரையிலிருந்து கண்டறியப்பட்ட கல்வெட்டு ஒன்றில் கூறப்பட்டுள்ளது எனவும் அக்கல்வெட்டு கி.மு. 250 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு பண்டைய சமூகம் என்ற ஒரு கட்டமைப்பின் கீழ் பௌத்த மதத்தினைத் தழுவிய சமூகமே முதன்மையானது எனவும் ஏனையவை சிறு குழுக்கள் என்ற கருத்துப்பட விளக்கப்பட்டுள்ளமையானது முரண்பாட்டினை ஏற்படுத்தியுள்ளது.

பௌத்த மதத்தின் வருகைக்கு முற்பட்ட சமூகம் என்ற நிலையை இந்நிலையினை இம் நூலாக்கக் குழுவினர் சிந்திக்வேயில்லை.

தரம் 06 வரலாறு

2016 இல் 03ஆம் பதிப்பாக வெளிவந்த இவ்வரலாற்றுப் பாடவிதான நூலில் 05 அத்தியாயங்களாக வகுக்கப்பட்டு வரலாறு ஓர் அறிமுகம், ஆதி மனிதன், உலகின் புராதன நாகரிகங்கள். இலங்கையின் குடியேற்றங்கள் நிறுவப்படல், எமது பண்டைய அரசர்களென பிரதான தலைப்புகளின் கீழ் வர்ணப்படங்களுடன் வுநஒவ எழுதப்பட்டுள்ளது. மிகவும் இலகுபடுத்தப்பட்ட வகையில் வரலாறு என்றால் என்ன என்பது விபரிக்கப்பட்டுள்ளது.

ஆதி மனிதன், உலகின் புராதன நாகரிகங்கள் என்பன மிகவும் சுருக்கமாக விபரிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் குடியேற்றங்கள் நிறுவப்படல் என்ற அத்தியாயத்தில் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கற்காலக் குடியேற்றங்கள் தொடர்பாக மிகவும் சுருக்கமாகவும் விஜயனின் குழுவினர் வருகையும் குவேனி கதையும் ஓரளவுக்கு விபரிக்கப்பட்டுமுள்ளது.

எமது பண்டைய அரசர்கள் என்ற அத்தியாயத்தில் அனுராதபுர காலத்தில் ஆட்சிசெய்த 07 மன்னர்கள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்திலும் தமிழ் மன்னர்களது ஆட்சிபற்றி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

இவ்வத்தியாயத்தில் அனுராதபுரத்தில் 44 வருடங்கள் ஆட்சிபுரிந்த எல்லாள மன்னன் பற்றி எழுதப்படவில்லை.

எல்லாளன் (கி.மு.205- கி.மு.161.) அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு, இலங்கையை நீண்ட காலம் ஆட்சி செய்த சிறந்த மன்னர்களுள் எல்லாளன் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராவார். எல்லாளனின் ஆட்சியானது இலங்கையில் கி.மு. 205 ஆம் ஆண்டு தொடங்கி கி.மு.161 ஆம் ஆண்டு வரையுள்ள 44 வருடங்கள் நடைபெற்றது. இலங்கைத் தீவினை ஆட்சி செய்த தமிழ் மன்னர்களுள் மிகச் சிறந்த மன்னனாக ஆட்சி புரிந்த எல்லாளனின் நல்லிணக்கத்துடனான மக்கள் நலன் பேணிய ஓர் ஆட்சியாளனாக விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லாளனின் நீண்ட கால ஆட்சியின் கீழ் இலங்கையில் இனவேறுபாடுகள் இன்றி பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவனது நீண்டகால ஆட்சியில் அனுராதபுரத்திலும் வட இலங்கையிலும் குளங்கள் பல உருவாக்கப்பட்டு, கட்டப்பட்டிருந்தன. விவசாய நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட வகையில் நெல் விளைச்சலுக்கான விவசாய உள்ளீPடுகள் மற்றும் தொழிநுட்பங்கள் போன்றவை இம் மன்னனால் அதிகரிக்கப்பட்டிருந்தன.

பெரி வாவி என்று அழைக்கப்படும் வவுனிக்குளம் இம்மன்னனால் அமைக்கப்பட்ட குளங்களுள் ஒன்றாகும். பௌத்த - இந்து மதங்களோடு தொடர்பு பட்ட ஆலயங்கள் பலவற்றை அமைத்து இலங்கையில் அனைத்து இன மக்களும் மொழி. மத பேதமற்ற முறையில் வாழ்வதற்கான ஓர் அரசியற் சூழ்நிலையை எல்லாளன் மஹாராசன் ஏற்படுத்தியிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாளனின் 44 வருட நல்லாட்சியில் பௌத்த சமயம் பெருவளர்ச்சியடைந்தது. விஹாரைகள் புனரமைப்புச் செய்யப்பட்டன.வவுனியா பாலி நகர் சிவன்கோவில் எல்லாளன் கட்டப்பட்டதாக மரபுகள் குறிப்பிடுகின்றன. வடஇலங்கையில் இம்மன்னனால் அமைக்கப்பபெற்ற எல்லாளன் குளம் (தற்போது எள்ளங்குளம் என அழைக்கப்படுவது) சூரிய வயல்வெளிக்கான நீரை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விவசாயக் கிராமத்ததுடன் இணைந்து வளர்ச்சி பெற்ற ஒரு மையமே உடுப்பிட்டியாகும். இரும்பு – உருக்கு கருவி வகைகளின் உருவாக்கத்திற்கு சிறந்த ஒரு மையமாக இன்றும் விளங்குவது உடுப்பிட்டியாகும். எல்லாளன் மஹாராசாவின் காலத்திலிருந்து (பெருங்கற்காலத்திலிருந்து ) நீர்ப்பாசனமும் கருவித் தொழினுட்பமும் ஒன்றிணைந்த வகையில் எள்ளங்குளத்துடன் இணைந்த வகையில் - உடுப்பிட்டிப்பிராந்தியம் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. பின்னர் இமையாணன் மாப்பாணன் காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தின் மாகாண நிர்வாக மையமாக உடுப்பிட்டி விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

எல்லாளனின் ஆட்சியானது தென்னிலங்கையிலுள்ள உருகுண ஆட்சியாளனாக விளங்கிய காக்கவண்ண திசனின் மகனான துட்டகைமுனுவினால் முற்றுகையிடப்பட்டுச், சிங்கள வம்சத்தினரின் ஆட்சி அனுராதபுரத்தில் மீண்டும் தொடக்கி வைக்கப்பட்டது. எல்லாளன் கொல்லப்பட்ட இடத்தில் அம்மன்னனைக் கௌரவிக்கும் நோக்குடன் துட்டகைமுனுவால் கட்டப்பட்ட விகாரையே தக்கிணவிகாரை என இன்று அழைக்கப்படும் எல்லாளசுகுண விகாரையாகும்.

அவ்வழியே செல்லும் ஊர்வலங்கள், வாகனங்கள் அவ்விடத்தில் நிறுத்தப்பட்டு, ஓசையெழுப்பாமல் பயணிக்கவேண்டும் என சாசனப் பொறிப்பு ஒன்றும் துட்டகைமுனுவால் நிறுவப்பட்டது.

தரம் 6

வரலாறு தரம் ஆறு

தரம் 06இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கு இத்தீவின் ஆட்சியாளர்கள் சிங்களவர் மட்டுமே என்பது தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தேசய ஒருங்கிணைப்பினைக் கருத்தில் கொண்டு இக்குறிப்பிடப்பட்ட நூலின் பாடப்பரப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதாயின் இலங்கையின் கற்கால குடியேற்றங்கள் என்ற உபதலைப்பினுள் பெரும் கற்கால குடியேற்றங்கள் என்ற தலைப்பினை உட்புகுத்தி அப்பண்பாட்டுக்குரிய மக்களினை இலங்கை வாழ் தமிழ் மக்களது மூதாதையர்களாக இனங்காட்டி பௌத்த மதத்தின் வருகையின் போது பௌத்த மதத்திற்கு மாற்றப்பட்டவர்களுள் இவர்களும் உள்ளடங்குவர். கந்தரோடையில் நிகழ்ந்தது அதுவே. கந்தரோடையில் வாழ்ந்த பெரும் கற்காலப் பண்பாட்டுக்குரிய மக்களது தடயங்கள் கி.மு. 800 ற்கு முன்னுள்ள ஒரு காலப்பரப்பினை சுட்டி நிற்கின்ற நிலையில் கி.மு. 03 ஆம் நூற்றாண்டில் நகர மாந்தர்களாக வாழ்ந்த அவர்கள் பௌத்த மதத்திற்கு மாற்றுவிக்கப்பட்டிருந்தனர். கந்தரோடையில் வாழ்ந்த நாகர் இனம் தமிழ் பௌத்தர்களாக மாற்றமடைந்தமைக்கு அனுராதபுரத்துடன் கொண்ட தொடர்பாலன்றி தமிழ் நாட்டுடன் கொண்ட தொடர்பே காரணம் என்பதனை சங்ககால பெருவழுதியின் பௌத்த சின்னம் பொறிக்கப்பட்ட பின் இலச்சினையுடனான நாணயங்கள் ஆதாராங்கள் ஆகின்றன.

தரம் 07 வரலாறு

2016 இல் 02 ஆம் பதிப்பாக வெளிவந்த தரம் 07 வரலாற்று பாடவிதானமானது 05 அத்தியாயங்களாக வகுக்கப்பட்டு எமது புராதன வாழ்க்கை முறை, எமது கீர்த்தி மிக்க அரசர்கள், எமது கலாசரா மரபுரிமைகள், பிற்கால ஆட்சி மையங்கள், ஐரோப்பாவின் புராதன நாகரிகங்கள் என்ற தலைப்புக்களில் பாடவிதானம் வரையப்பட்டுள்ளது.

புராதன வாழ்க்கை முறை முழுவதும் சிங்கள கிராமிய வாழ்க்கை முறையைத் தழுவிய வகையிலேயே பாளி மொழியில் அமைந்த கலைச் சொல்லாக்கங்களுடன் விபரிக்கப்பட்டுள்ளது.

சேனைப் பயிர்ச் செய்கை, சேற்று விவசாயம் என்பவை தொடர்பாக மத்திய மலைநாட்டு முறைகளை அடிப்படையாகக் கொண்டு விபரிக்கப்பட்டுள்ளது. எமது கீர்த்தி மிக்க அரசர்கள் வரிசையில் பிற்பட்ட அனுராதபுரக்கால மன்னர்கள் மற்றும் பொலநறுவைக்கால மன்னர்கள் ஆட்சி, நிர்வாகம், பங்களிப்பு, சாதனை, பண்பாடு என்ற அடிப்படைகளில் விபரிக்கப்பட்டுள்ளன.

பல்லவ சோழ அரசுகளின் அரசியல் பண்பாட்டுத் தொடர்புகள் மிகவும் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

பௌத்த சிங்கள கண்ணோட்டத்திலிருந்தே பல்லவ வம்சம் தொடர்பாகவும் சோழ வம்சம் தொடர்பாகவும் வரலாறு வரையப்பட்டுள்ளது.

ஏனெனில், இலங்கையில் கட்டப்பட்ட பௌத்த கோயில்கள் பல திராவிடக் கட்டடக் கலைமுறையில் அமைந்தமைக்கு நாவந்தாகெடிகே, திரியாய் பெரும்பள்ளி என்பன உதாரணங்களாகும்.

சோழர் கால வெண்கல விக்கிரகங்களில் முக்கியமானவற்றை இவ்வத்தியாயத்தில் இணைக்க வேண்டிய அவசியமும் காணப்படுகின்றது.

எமது கலாசார மரபுரிமைகள் என்ற அத்தியாயத்தில் தமிழ் பண்பாட்டுக்குரிய கலாசார மரபுரிமைகளுக்குரிய கலை வடிவங்கள் எவையுமே காட்டப்பட்டிருக்கவில்லை யாழ்ப்பாண இராச்சியம் என்று வருமோரிடத்தில் மட்டும் நல்லூர் கந்தசாமி கோயிலின் முகப்புப் படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சபுமல் (குமாரய்யாவின் தொடர்பின் நிமிர்த்தம் காரணமாகவும் இக்கோயிலை பிரசுரம் செய்திருக்க முடியும்.

தரம் 08 வரலாறு

2016 இல் 01 ஆம் பதிப்பாக வெளிவந்துள்ள இப் பாடநூலும் 05 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

இலங்கையின் பாரம்பரிய தொழில்நுட்பமும் கலைகளும், கண்டி இராச்சியம், ஐரோப்பிய மறுமலர்ச்சி, நாடுகாண் பயணங்களும் ஐரோப்பியர் கீழைத் தேசங்களுக்கு வருகை தரலும், இலங்கையின் கரையோரப் பிரதேசம் போத்துக்கேயரின் ஆதிக்கத்திற்குள் உட்படல் என்ற தலைப்புகளில் பாடப்பரப்பு வரையப்பட்டுள்ளது.

இங்கு இலங்கையின்; பாரம்பரிய தொழில்நுட்பமும் கலைகளும் என்ற தலைப்பில் திராவிடருக்கும் நீரியல் தொழில்நுட்பத்திற்கும் அல்லது நாகருக்கும் நீரியல் தொழில்நுட்பத்திற்கிடையே உள்ள தொடர்புகள் எவ்விடத்திலும் எடுத்துச்சொல்லப்பட்டிருக்கவில்லை.

தனிப்பட்டவர்களது சொத்துடமைகளுள் (வபிகமிஹா) குளங்கள் காணப்பட்டிருந்தமையினை பிராமிக்கல் வெட்டுக்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன.

ஆரம்பத்தில் நாக வம்சத்தினரே குளச் சொந்தக்காரராகக் காணப்பட்டமையால் குளத்தங்கரைக்குப் போய் வருகின்ற ஒரு மரபு திராவிட மரபில் நீடித்து நிலைத்து வந்துள்ளது.

இப்பின்னணியில் பாரம்பரியத் தொழில்நுட்பத்தின் உருவாக்கத்துடன் தமிழர்களிடமிருந்த பங்களிப்பு எடுத்துக் காட்டப்படல் அவசியமாகும்.

இப்பாட நூலில் இடம்பெற்றுள்ள கண்டி இராச்சியம் தொடர்பான பாடப்பரப்பில் கண்டி இராச்சிய மன்னர்களின் தோற்றத்திற்கும் தென்னிந்திய தேவர் குடும்பங்களுக்குமிடையிலான வம்சத் தொடர்புகள் பெரிதாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கவில்லை.

ஸ்ரீவீரபராக்கிரம நரேந்திரசிங்க மன்னன் பற்றிக் குறிப்பிடுமிடத்திலேயே தென்னிந்திய இளவரசியைத் திருமணம் புரிந்துகொண்ட வரலாறு சொல்லப்பட்டுள்ளது.

இம் மன்னனைத் தொடர்ந்து வந்த நாயக்க வம்சத்தினர் கி.பி. 1739 இலிருந்து 1815 வரைக்கும் ஆட்சி புரிந்த வரலாறு கண்டிய தென்னிந்திய பண்பாட்டுத் தொடர்புக் காலகட்டம் என்பதனை ஆசிரியர் குழு அங்கு அழுத்திக் குறிப்பிடவில்லை.

வரலாற்றுப் பாடநூல்கள் தங்களது பண்பாட்டு இருப்புத் தொடர்பான சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள்

01. ஆனைக்கோட்டை அகழ்வின்போது கண்டெடுக்கப்பட்ட முத்திரையும் அதன் வாசகமும் 'கோவேத' அரசற்கரசன்.

02. ஆனைக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட இரு எழும்புக்கூடுகளின் படம்.

03. கந்தரோடையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட தமிழ் பிராமிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கலவோடுகள்ஃ மட்பாண்ட ஓடுகள்.

04. மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்ட முத்திரை (STAMPS)

05. பல்வேறு வகைப்பட்ட (Beads கார்ணேலியன் (Terracotta/ Punch Marked Coins)

06. வெள்ளி நாணயங்களின் படம்.

07. நாகபட்டினப் புத்தர் மரபிலுள்ள சிலை.

08. கிருஸ்ணர் சிலை போன்றன.

ஆசிரியர் குறிப்பு--

இந்த ஆக்கம் கூர்மைச் செய்தித் தளத்தின் ஆலோசனைகளுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் ஏற்ப விரிவாகவும் ஆதாரங்களோடும் ஆசிரியர் இந்திரகுமார் அவர்களினால் எழுதப்பட்டது. இவர் வரலாற்றுப் பாடநூல் சார்ந்த அதுவும் தமிழ் மொழி வரலாற்றுப் பாடநூல்களில் ஏற்பட்டிருந்த பிழைகள் தொடர்பான கலந்துரையாடல்களின்போது துறைசார் நிபுணர்களுடன் பங்குபற்றிய அனுபவங்களின் அடிப்படையில் இந்த ஆக்கத்தை எழுதியுள்ளார். இவர் கொழும்பில் தனியார் கல்வி நிறுவனங்களில் வரலாற்றுப் பாடத்தைக் கற்பிப்பவர்

கொழும்பில் இருந்து வெளிவந்த ஆசிரியர்களுக்கான அகவிழி சஞ்சிகை. மற்றும் கல்வியியல்களம் ஆகியவற்றின் ஆசிரியராகவும் பதவி வகித்திருந்தார். பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் மொழி முதுமானிப் பட்டாதாரியான இந்திரகுமார், ஊடகக் கற்கைகளில் தமிழ் மொழி இலக்கண விருத்தி, மொழித் திறன் சார்ந்த விரிவுரையார் என்பதும் குறிப்பிடத்தக்கது.