இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிலைப்பாடு

தமிழ் அரசியல் கைதிகள் என்று எவருமேயில்லையாம்

செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் உதய கம்பன்வில மறுப்பு
பதிப்பு: 2020 டிச. 08 22:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 10 00:00
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
போரின் போதும் போரின் பின்னரான சூழலிலும் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்கள் மற்றும் கொழும்பு, மலையகம் ஆகிய பகுதிகளில் இலங்கைப் பொலிஸார், இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் பலர் இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை. ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இவர்களை தமிழ் அரசியல் கைதிகள் என்றே பலரும் கூறி வருகின்றனர். ஜெனீவா மனித உரிமைச் சபை உள்ளிட்ட சர்வதேச பொது அமைப்புகளும் தமிழ் அரசியல் கைதிகள் என்று கூறிவரும் நிலையில், இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் என எவருமே இல்லையென அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் உதய கம்பன்வில கூறியுள்ளார்.


 
இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்பதே கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ற தொனியில் அமைச்சர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய இணை அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில இதனைக் கூறினார்.

சிறைச்சாலைகளில் நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா அச்சமும் தலைதூக்கியிருப்பதால் தமிழ் அரசியல் கைதிகளையும் பிணையிலாவது விடுதலை செய்வதற்கான ஆயத்தம் இருக்கின்றதா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், இலங்கையில் கைதிகளே உள்ளனர் என்றும் தமிழ் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியவர்களை அரசியல் கைதிகளாகக் கூறமுடியாது என்றும் அவரவர் சார்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் வழங்கும் அறிக்கையை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் உதய கம்பன்வில மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என்பதுடன் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டுமென சிங்களக் கிராமங்களில் தீவிர பிரசாரங்களிலும் ஈடுபட்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் என்று எவருமே இல்லையென மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது, பிரதி நீதியமைச்சராக இருந்த புத்திரசிகாமனியும் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.