இலங்கை ஒற்றையாட்சி அரசின் கொழும்பு மகசீன்

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா

விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நாளை யாழ்ப்பாணத்தில் உறவினர்கள் போராட்டம்
பதிப்பு: 2020 டிச. 27 21:13
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 01 16:41
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே உரிய அதிகாரிகள் மற்றும் தமிழ்க் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தும் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லையெனவும் இந்த அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா தொற்றுக்கு இலக்காகலாமெனக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரும் அறிக்கை ஒன்றின் மூலம் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் எந்தவொரு தமிழ்க் கட்சி உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்கவேயில்லையென உறவினர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
 
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர் சிவரூபன், இரகுபதி சர்மா உள்ளிட்ட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாமெனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு

இலங்கையில் கொரோனா தொற்று பல கொத்தணிகளாக உருவெடுத்து மிக வேகமாகப் பரவி பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், சிறைச்சாலை கொரோனா கொத்தணி மூலம் இதுவரை மூவாயிரத்து 111 கைதிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். ஐந்து கைதிகள் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் 810 கைதிகள் நோய்த் தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள். ஏனைய சிறைச்சாலைகளுடன் ஒப்பிடுகையில் மகசின் சிறைச்சாலையிலேயே தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்படுபவர்களின் தொகை அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்நிலையில், மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இவர்களில், நீரழிவு போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அடங்கலாக வைத்தியர் சிவரூபன், இந்து மதகுருவான இரகுபதி சர்மா உட்பட்ட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சின்னையா சிவரூபன், சி.ஐ. இரகுபதி சர்மா, எட்வேட் சாம் சிவலிங்கம், தங்கவேல் சிவகுமார், நாகலிங்கம் மதனசேகர், தேவசகாயம் உதயகுமார், குலசிங்கம் குலேந்திரன், றுபட்ஷன் யதுஷன், சேவியர் ஜோண்ஷன் டட்லி, தாவீது நிமல்ராஜ் பிரான்சிஸ், விநாயகமூர்த்தி நெஜிலன், இரத்தினம் கிருஷ்ணராஜ், சின்னமணி தனேஸ்வரன், ஞானசேகரம் ராசமதன் ஆகியோரே சிறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் குறைக்கும் முகமாக சில பொறிமுறைகளுக்கு ஊடாக அரசாங்கம் ஆறாயிரம் கைதிகளை விடுவித்துள்ளது.

எனினும், அதில் ஒரு தமிழ் அரசியல் கைதியேனும் உள்வாங்கப்படவில்லை. இதனால், அரசியல் கைதிகளின் பெற்றோர், உறிவினர் மிகுந்த கவலைக்கு உள்ளாகியுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அரசியல் கைதிகள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து அவர்களின் உறவுகளின் வேண்டுகோளுக்கு இணங்க சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரியும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

நாளை திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் பின்புறமாக உள்ள நல்லை ஆதீன முன்றலில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

உறவுகளின் விடுதலைக்காக இன,மத,கட்சி பேதமின்றி அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குவதுடன் தற்போது தாயகத்தில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் அபாயத்தை கருத்தில் கொண்டு, சமூக இடைவெளியை பின்பற்றியும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்தும் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.