சிவில் சமூக அமைப்புகளின் அழுத்தங்களினால்

இன அழிப்பு விசாரணையைக் கோர தமிழ்க் கட்சிகள் குழு அமைக்க முடிவு

தமிழ்த்தேசியக் கூட்சிகள் வவுனியாவில் ஒன்றுகூடினர்
பதிப்பு: 2021 ஜன. 04 09:25
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 04 13:44
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இலங்கையைக் கொண்டு செல்ல வேண்டும். அல்லது இலங்கை மீதான ஒரு சிறப்புத் தீர்ப்பாயத்தை உருவாக்க வேண்டுமென்று ஐ.நா செயலாளர் நாயகத்தையும் ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் மற்றும் மனித உரிமைச் சபையிடம் கூட்டாகக் கோரலாமெனத் தமிழ்த்தேசியக் கட்சிகள் அழுத்தம் காரணமாக முதற்கட்ட இணக்கம் கண்டுள்ளன. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு முடிவு செய்துள்ளன. சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இலங்கையைக் கொண்டு செல்வதற்கான அறிக்கை ஒன்றைத் தயாரிப்பதற்கும் இந்தக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
 
அமைக்கப்படவிருக்கும் குழு சரியான முறையில் கோரிக்கைகளை நோக்கி நகர்வதை உறுதிப்படுத்த வேண்டியது மக்கள் அமைப்புகளின் பொறுப்பாக இருக்கின்றது

ஞாயிற்றுக்கிழமை சந்திப்பின் முடிவில், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், இது குறித்துத் தொடர்ந்து கட்சிகள் சந்தித்துப் பேசவிருப்பதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜே்ந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இடம்பெற்ற கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தொிவித்தார். நீதியரசர் க.வி. விக்னேஸ்வரனையும் உள்ளடக்கியே இந்த நகர்வு மேற்கொள்ளப்படும் எனவும் கருத்துத் தெரிவித்தார்.

அதேவேளை, வழமைபோல விக்னேஸ்வர்ன் மீதான தனது அரசியல் தாக்குதலையும் சுமந்திரன் மேற்கொண்டார்.

அடுத்ததாகக் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரனை உள்ளடக்குவதாக நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால், விக்னேஸ்வரனின் கட்சியின் பிரதிநிதியொருவரை உள்ளடக்க இருப்பதாகவும் அமைக்கப்படும் குழுவில், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்படுவர் என்றும் அதுவொரு சிறு குழுவாகவே இருக்குமெனவும் கூறினார்.

சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் விக்னேஸ்வரனை இணைந்து தாக்குவது போன்று தெரிகின்றது. இது இன அழிப்பு விசாரணையைக் கோரும் ஒருங்கிணைந்த முயற்சிக்கு நல்ல அறிகுறியல்ல என்று கூட்டத்தில் பங்குபற்றிய சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் கூறினர்.

வடமாகாண சபையின் முதலமைச்சராக இருந்தபோது விக்னேஸ்வரன் கொண்டு வந்த இன அழிப்புத் தீர்மானம் 2015 ஆம் ஆண்டிலேயே முன் வைக்கப்பட்ட வடமாகாணத்தின் மக்கள் ஆணை பெற்ற ஒரு முக்கிய நகர்வு என்பதாலும் அவர் ஒரு நீதியரசராக இருந்தவர் என்பதாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தற்போது பதவி வகிப்பதாலும் அவரது நேரடிப் பங்குபற்றல் பொருத்தமானது என்ற கருத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுமந்திரன், விக்னேஸ்வரனுடைய கட்சிகளும் மற்றும் சிவில் சமூக அமைப்புகளும் இணைந்து ஒரே கோரிக்கைகளை எழுத்து மூலம் ஆவணப்படுத்துவதற்கு இணங்கியிருப்பதாக தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

அருட்தந்தை ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், தமிழ் அரசுக் கட்சியின்பதில் பொதுச் செயலாளர் ப. சத்தியலிங்கம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் தலைவர் திருமதி அனந்தி சசிதரன், காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரதிநிதிகள், வடக்கு – கிழக்கு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆன்மீகத் தலைவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்

இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியே தமிழ்த்தேசியக் கட்சிகள் கோர வேண்டுமெனவும், ஜெனீவாவில் உள்ள மனித உரிமைச் சபையி்ன் இதுவரை காலப் பொறுமுறை தோல்வியடைந்துள்ளது என்பதை வெளிப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி தாயகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கின்ற அமைப்புகள் வழங்கிய கடும் அழுத்தங்களினாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைக்கப்படவிருக்கும் குழு சரியான முறையில் கோரிக்கைகளை நோக்கி நகர்வதை உறுதிப்படுத்த வேண்டியது மக்கள் அமைப்புகளின் பொறுப்பாக இருக்கின்றது.