வடமாகாணம்

மன்னார் கடலில் மீன்பிடித்த மீனவர்கள் மூவரைக் காணவில்லை

ஐந்து நாட்களாகத் தேடிவருவதாக உறவினர்கள் முறைப்பாடு
பதிப்பு: 2021 பெப். 05 21:41
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 05 21:54
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வடமாகாணம் மன்னார் மாவட்டத்தின் ஓலைத்தொடுவாய் பகுதியில் கடந்த ஞாயிறு அதிகாலை கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று தமிழ் மீனவர்கள் ஐந்து நாட்கள் கடந்தும் கரை திரும்பாத நிலையில் உறவினர்கள் அவர்களைத் தேடி வருவருகின்றனர். யாழ்ப்பாணம் பருத்திதுறையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய அன்டன் யேசுதாசன் அன்டன் சிவதாஸன் மற்றும் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரான செல்வராஜ் ஜெயராம் மற்றும் மன்னார் கொண்ணையன் குடியிருப்பைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞரான சந்தான் செபஸ்டியான் ஆகிய மூன்று தமிழ் மீனவர்களே கடந்த ஞாயிறு அதிகாலை கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போய்வுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
 
மேற்படி மீனவர்கள் மூவரும் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து கொண்ணையன்குடியிருப்பைச் சேர்ந்த ராஜரெட்னம் கிறிஸ்டின் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி படகிலேயே கடற்றொழிலுக்கு சென்று வருகின்றனர் .

இந்த நிலையில் கடந்த ஞாயிறு அதிகாலை 1.30 க்கு மூவரும் ஒலைத்தொடுவாய் கடலுக்கு வழமை போன்று குறித்த படகில் மீன் பிடிக்கச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சுமார் ஐந்து நாட்கள் கடந்தும் கரை திரும்பாத இவர்களின் நிலை குறித்து தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் ஒலைத்தொடுவாய் பகுதி மீனவர்கள் இவர்களைத் தேடி வருவதாக உறவினர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

குறித்த மீனவர்கள் மூவரும் கடலில் காணாமல்போனது குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டதுடன் மன்னார் சனிவிலேஜ் கடற்படை முகாமிற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.