வடமாகாணம் தமிழ்பேசும் மக்களின் தாயகமான

மன்னார் கரையோர பிரதேசங்களில் கனிய வளங்கள் அபகரிப்பு- அவுஸ்திரேலிய நிறுவனம் மீது குற்றச்சாட்டு

அனுமதியின்றி செயற்படுவதாக மக்கள் கவலை
பதிப்பு: 2021 பெப். 08 22:56
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 10 17:31
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வடமாகாணம் தமிழர் தாயகப் பகுதியான மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் அவுஸ்திரேலிய நிறுவனமொன்று எவ்வித அனுமதியுமின்றி கடந்த நான்கு வருடங்களாக இல்மைனைட் மற்றும் டைட்டானியம் ஆகிய கனியவளம் தொடர்பாக மேற்கொண்ட இரகசிய அகழ்வாராய்ச்சி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதால் இலங்கை ஒற்றையாட்சி அரசு மறைமுகமாக அனுமதி வழங்கி, ஈழத்தமிழர்களுக்குச் சொந்தமான வளங்களை இரகசியமாக விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கனியவள அபகரிப்புத் தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் ஜூட் கொன்சால் குலாஸ் மக்கள் சார்பில் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தகவல் வழங்கியுள்ளார்.
 

மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை தொடக்கம் தலைமன்னார் பியர் வரையுள்ள கடற்கரைப் பகுதிகளிலேயே குறித்த ஆய்வுப்பணிகளை சம நேரத்தில் முன்னெடுப்பதற்கு மேற்படி அவுஸ்திரேலிய நிறுவனம் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தது.

எனினும் சிலாவத்துறை பகுதி தவிர்ந்த மன்னார் தீவுப்பகுதியில் மட்டும் முதல் கட்டமாக ஆய்வுப்பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய தாழ்வுபாடு தொடக்கம் தலைமன்னார் வரையுள்ள 50ற்கும் மேற்பட்ட இடங்களில் கனியவள அகழ்வினை குறித்த கனியவளத்துறை சார்ந்த நிறுவனம் எவ்வித சந்தடியுமின்றி மிகுந்த நுட்பத்துடன் இரகசியமாக முன்னெடுத்துள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் மன்னார் தீவுப் பகுதியில் குறித்த அவுஸ்திரேலிய நிறுவனம் நாலு வருடங்களாக மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து கடந்த வருட இறுதிப் பகுதிவரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரோ மற்றும் பிரதேச செயலாளர் போன்ற நிர்வாக கட்டமைப்பைச் சேர்ந்த உயர் அதிகாரிகளோ எவரேனும் எதுவும் அறியாதிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

கனிமத் தாது அகழ்வுகள் சார்ந்த உலகின் முன்னணி நிறுவனமான டைட்டானியம் சேன்ட்ஸ் லிமிடெட் (Titanium Sands Limited) எனும் ஸ்தாபனம் மேற்கு அவுஸ்திரேலிய தலைநகரான பேர்த் நகரில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் ஒரு சர்வதேச நிறுவனமாகும். இந்நிறுவனமே மன்னார் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் எவ்வித அனுமதியும் இன்றி இல்மைனைட் படிவங்களைத் தேடி சுமார் 4 வருடங்களாக பல ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டி, தோட்டவெளி, புதுக்குடியிருப்பு, கரிசல்,சிறுதோப்பு, கட்டாஸ்பத்திரி, பேசாலை, நடுக்குடா, பாவிலுப்பட்டம்கட்டிய குடியிருப்பு, கட்டுக்காரன்குடியிருப்பு, தலைமன்னார் கிராமம், தலைமன்னார் பியர் ஆகிய மக்கள் தொகை அதிகமுடைய கிராமங்களில் இல்மைனைட் படிவங்கள் தொடர்பான சுமார் 3500 துளையிடல் ஆய்வுகளை இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த நிறுவனம் இலங்கை புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்திடம் (Geological Survey and Mines Bureau-GSMB) மன்னார் மாவட்டத்தில் இல்மைனைட் மற்றும் டைட்டானியம் ஆகிய கனிய வள ஆய்வுக்கு நேரடியாக எவ்வித அனுமதியும் பெறாது புவிச் சரிதவியல் சுரங்கப் பணியகத்திடம் ஏற்கனவே அனுமதி பெற்றிருந்த வேறு ஐந்து நிறுவனங்களின் உரிமங்களை பயன்படுத்தி மன்னார் மாவட்டத்தில் பொது மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளில் உரிமையாளர்களின் அனுமதியின்றி துளையிடும் ஆய்வுகளை இந்த நிறுவனத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இலங்கை புவிச் சரிதவியல் சுரங்கப்பணியகம் வழமையாக இவ்வாறான அகழ்வுபணிகளுக்கு 3இல் இருந்து 4 மீற்றர் ஆழத்திற்கே பூமியில் துளைகளையோ அகழ்வையோ மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவது வழக்கம். எனினும் இந்த நிறுவனம் மன்னார் தீவில் சுமார் 12 மீற்றர் ஆழத்திற்கு துளைகளையிட்டு கனியவள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது இலங்கை கனியவளச் சட்டங்களுக்கு எதிரான செயற்பாடு எனவும் கூறப்படுகிறது.

மேலும் குறித்த அவுஸ்திரேலிய நிறுவனம் மன்னார் தீவில் இல்மைனைட் மற்றும் டைட்டானியம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுப்பணிக்கு மீனவர்கள் செறிந்து வாழும் பேசாலையைத் தளமாக பயன்படுத்தியதாகவும் அங்கு அவர்கள் அலுவலகமொன்றை ஸ்தாபித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.மேலும் பேசாலை உள்ளூர்வாசிகள் சிலரை மேற்படி அவுஸ்திரேலிய அகழ்வாராய்ச்சியாளர்கள் பணிக்கு அமர்த்தியிருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் கடந்த வருட இறுதியில் புதுக்குடியிருப்பு,பேசாலை நடுக்குடா போன்ற பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான பனந்தோட்டங்கள், தென்னந்தோட்டங்கள் முந்திரி தோப்புகள் மற்றும் குடிநிலக்காணிகளில் உரிமையாளர்களின் அனுமதியின்றி கனரக இயந்திரங்களின் உதவியுடன் பூமியில் துளையிட்டு ஆய்வுப்பகுதிகளை மேற்கொண்ட சமயம் அங்கு வருகை தந்த காணி உரிமையாளர்கள் இது குறித்து ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்த தரப்பினரிடம் வினவியபோது தாம் இப்பகுதிகளில் நிலக்கீழ் நீர் மற்றும் நன்னீர் தொடர்பான பரிசோதனைகளையே மேற்கொண்டதாக அகழ்வுப்பணியாளர்கள் காணி உரிமையாளர்களுக்கு சாதுரியமாக பதிலளித்துள்ளனர்.

மேலும் குறித்த அகழ்வு நிறுவனம் பேசாலையில் முகாமிட்டு மன்னார் தீவின் கரையோரப்பகுதிகளில் கனியவள ஆய்வுகளை மேற்கொண்டு வருவது குறித்த இரகசிய தகவல்கள் கடந்த வருடம் இறுதியில் வெளிவந்த நிலையில் மன்னார் மாவட்டத்தின் மீனவர்களும் ஏனைய பல தரப்பினர்களும் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பேசாலையில் உள்ள அவர்களின் அலுவலகத்தை அவர்கள் மூடியுள்ளதாகக் கூறப்படுகிறது.அத்துடன் மன்னார் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அமைப்பினரும் குறித்த அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு எதிராக மன்னார் நகரில் கடந்த டிசம்பர் 28ம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினையும் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் இலங்கை ஜனாதிபதிக்கும் இது தொடர்பாக விரிவான கடிதமொன்றினையும் இவர்கள் அனுப்பிவைத்துள்ளதாக இவ் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னார் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் இல்மனைட் மற்றும் டைட்டானியம் படிவுகள் மிக அதிகமான செறிவுடன் காணப்படும் நிலையில் அகழ்வுப்பணியில் ஈடுபட்ட டைட்டானியம் சேன்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது இணையத்தளத்தில் இது தொடர்பான விபரங்களை படங்களுடன் பிரசுரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மன்னாரில் மேற்படி கனிமப் படிவுகளுக்காக அகழ்வுபணிகளை மேற்கொள்ளும் பட்சத்தில் நிலக்கீழ் நீர் முறைமை முற்று முழுதாக மாசடைவதுடன் மன்னார் தீவு தமிழ் பேசும் மக்கள் ஆண்டாண்டு காலமாக மேற்கொண்ட மீன் பிடித்தொழில், மரக்கறித் தோட்டச்செய்கைகள், கால்நடை வளர்ப்பு பணிகள், பனை தென்னை தோட்டச் செய்கைகள், முந்திரிகைச் செய்கைகள் உட்பட பல பாரம்பரிய வாழ்வாதாரத்திற்கான தொழில் துறைகளை முற்றாக இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும் எனச் சுட்டிகாட்டப்படுகிறது.