இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன அழிப்பை வெளிப்படுத்திய பேரணி

சுயநிர்ணய உரிமையைக் கோரி சிவில் சமூக அமைப்பு பொலிகண்டியில் பிரகடனம்

முள்ளிவாய்க்கால் மண் யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடம் சமயத் தலைவர்கள் ஒப்படைப்பு
பதிப்பு: 2021 பெப். 07 22:32
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 09 02:08
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
ஈழத்தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றம்;, புத்தர் சிலை வைத்தல் உள்ளிட்ட அடக்கு முறைக்கு எதிராக நடத்தப்பட்ட நடைபவனிப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொலிகண்டிப் பிரதேசத்தில் முடிவடைந்தது. கிழக்கு மாகாணத்தில் உள்ள பொத்துவில் பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை இந்தப் நடைபவனிப் பேரணி ஆரம்பித்தது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்று பெயரிடப்பட்டு, ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை ஒற்றையாட்சி அரசின் கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலான அடக்குமுறைகள் வெளிப்படுத்தப்பட்டன.
 
தமிழ்த்தேசியக் கட்சிகள் இந்த நடைபவனிப் பேரணியில் பங்குபற்றியிருந்தாலும் பொதுமக்களும் சிவில் சமூக அமைப்புகளும் மற்றும் சமயக் குருமாரும் மாத்திரமே முக்கியத்துவப்படுத்தப்பட்டனர்.

வடக்குக் கிழக்குச் சிவில் சமூக சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நடைபவனிப் பேரணியின் முன்வரிசையில் சைவசமயக் குருக்கள், அருட்தந்தையர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். முஸ்லிம் மக்களும் இம்முறை பெருமளவில் ஆதரவு கொடுத்தனர்.

கொவிட்-19 நோய்த்தாக்கத்துக்கு உள்ளாகி மரணிக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராகவும் முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக அடக்கப்படுவதைக் கண்டித்துமே முஸ்லிம் மக்கள் இந்த நடைபவனிப் பேரணியில் பங்குபற்றியிருந்தனர்.

தமிழ் மக்களோடு சேர்ந்து போராட வேண்டுமென்ற கருத்துக்களை பேரணியில் கலந்துகொண்ட முஸ்லிம் மக்கள் வெளிப்படுத்தியிருந்தனர். பொத்துவில் பிரதேசத்தில் ஆரம்பித்து மட்டக்களப்பு, திருகோணமலை. வவுனியா, மன்னார் ஊடாக கிளிநொச்சியைச் சென்றடைந்து.

பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்திற்குச் சென்று அங்கிருந்த தியாகி திலீபன் நினைவிடத்தில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த அகிம்சைப் பேரணியை யாழ்ப்பாணம் மாநகருக்குள் செம்மணி நல்லூர் அலங்கார வளைவில் வைத்து மக்கள் அணிதிரண்டு வரவேற்றனர். இந்த வரவேற்பில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் பங்கேற்றார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பொலிகண்டிப் பிரதேசத்தை சென்றடைந்ததும் அங்கு ஒன்றுகூடிய மக்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினர். அங்கு ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டது.

ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தை உலகம் ஏற்கும் திசை நோக்கி, மிகத் தீவிரமாகப் போராட்ட அரசியலை தமிழ் மக்களாகிய நாம் அணிதிரண்டு நகர்த்த வேண்டுமென அந்தப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த திடசங்கற்பத்துடன் போராட்டங்களுக்கு அனைவரும் வீரியமாக, ஒருங்கிணைந்த செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் பேரணி அன்புரிமையுடன் கேட்டுக்கொள்வதாகவும் வடக்கு - கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் வெளியிட்டுள்ள அந்தப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் தொடர்ச்சியான தமிழ் இன அழிப்பு இடம்பெற்று வருவதாக பிரகடனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இந்த நடைபவனிப் பேரணி யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்கு முன்னர் இறுதிப் போரில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்குச் சென்றடைந்தது.

அங்கு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன் பின்னர் நடைபவனிப் பேரணியில் பங்குபற்றிய சமயத் தலைவர்கள், முள்ளிவாய்க்கால் மண்ணை எடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடம் ஒப்படைத்தனர்.