வடமாகாணம்

மன்னார் மாந்தை வடக்கில் புதிய பிரதேச செயலகம்

அதிகாரிகள் தகவல்
பதிப்பு: 2021 பெப். 12 09:37
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 13 12:37
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
தமிழ் மக்களின் பூர்விகப் பகுதியான வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில் மாந்தை வடக்கு எனும் புதிய பிரதேசச் செயலகப் பிரிவை உருவாக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம், மாந்தை மேற்கு, நானாட்டான், மடு, முசலி எனும் ஐந்து பிரதேசச் செயலகப் பிரிவுகள் இயங்கி வரும் நிலையில் மாந்தை வடக்கு எனும் ஆறாவது புதிய செயலகப் பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான நடவடிக்கைகளே துரித கதியில் முன்னெடுக்கப்படுவதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
 
மன்னார் மாவட்டத்தில் ஏலவே மாந்தை மேற்கு எனும் பெயரில் செயல்படும் பிரதேச செயலகப் பிரிவு 36 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்டதாக இயங்கிவருகின்றது.

இந்த நிலையில் இப்பிரதேசச் செயலக நிருவாகத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாணம்-மன்னார் பிரதான நெடுஞ்சாலைக்கு அருகாமையில் அமைந்துள்ள வெள்ளாங்குளம், தேவன்பிட்டி, பாலியாறு, இலுப்பைக்கடவை, அந்தோனியார்புரம், கள்ளியடி, கூராய், ஆத்திமோட்டை, கோவில்குளம், பள்ளமடு, காயாநகர், பெரியமடு கிழக்கு, பெரியமடு மேற்கு, விடத்தல்தீவு மத்தி, விடத்தல்தீவு கிழக்கு, விடத்தல்தீவு மேற்கு, விடத்தல்தீவு வடக்கு ஆகிய தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் கிராமசேவையாளர் பிரிவுகளை புதிதாக உருவாக்கப்படவுள்ள மாந்தை வடக்கு பிரதேசச் செயலகப் பிரிவு நிருவாகத்தின் கீழ் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என மாவட்டச் செயலக அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாப்பாமோட்டை கிராமசேவையாளர் பிரிவையும் மாந்தை வடக்கு பிரதேசச் செயலகப் பிரிவின் நிர்வாகத்துடன் இணைப்பது தொடர்பாகவும் அதிகாரிகள் தீவிரமாகப் பரிசீலனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் புதிதாக உருவாக்கப்படவுள்ள மாந்தை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்கான பிரதேசச் செயலக அலுவலகக் கட்டிடத்தொகுதியை பள்ளமடு கிராமசேவையாளர் பிரிவில் யாழ்ப்பாணம்-மன்னார் பிரதான நெடுஞ்சாலையொட்டியதாக பள்ளமடு அரசினர் வைத்தியசாலை- க்கு அருகாமையில் அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தின் பிரதான நகரமாகவும், வர்த்தக, நிர்வாக மையமாகவும் உள்ள மன்னார் நகர், மன்னார் நகரம் எனும் பிரதேச செயலகப் பிரிவிற்குள்ளே- யே அமையப் பெற்றுள்ளது. இந்த நிலையில் மன்னார் தீவின் நுழை வாயிலான பெரியகடை மற்றும் பஸார் பகுதியிலிருந்து தலைமன்னார் பியர்வரை உள்ள பகுதிகளும் மன்னார் தீவைத் தாண்டி உயிலங்குளம் வரையான பெரும் நிலப்பரப்பும் குறித்த மன்னார் பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மேலும் இச் செயலகப் பிரிவு மன்னார் தீவுப்பகுதியில் 38 கிராம சேவையாளர் பிரிவுகளையும் . தீவிற்கு வெளியே பெரும் நிலப்பரப்பு பகுதியில் 11 கிராமசேவையாளர் பிரிவுகளையும் கொண்டு இயங்கி வருகிறது.

மேலும் மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவின் கட்டுபாட்டின் கீழ் மன்னார் தீவிற்கு வெளியே பெரும் நிலப்பரப்பில் உள்ள குறித்த 11 கிராமசேவையாளர் பிரிவுகளில் கள்ளிகட்டைக்காடு, பெரிய நாவற்குளம், புதுக்கமம், உயிலங்குளம்,மாதோட்டம், உயிர்தராசன்குளம் ஆகிய ஆறு பிரிவுகளையும் நானாட்டான் பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் நாகதாழ்வு, திருக்கேதிஸ்வரம்,வண்ணமோட்டை, நீலசேனை மற்றும் பரப்பாங்கண்டல் ஆகிய மிகுதியான 5 கிராம சேவையாளர் பிரிவுகளையும் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவின் நிருவாகத்துடன் இணைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவு பெரும் நிலப்பரப்பில் உள்ள தனது 11 கிராமசேவையாளர் பிரிவுகளை மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் பிரதேச செயலகங்களுக்கிடையில் பங்கிட்ட நிலையில் மன்னார் தீவிற்குல் அடங்கியுள்ள தனது மிகுதி 38 கிராமசேவையாளர் பிரிவுகளை மட்டும் கொண்ட ஒரு பிரதேச செயலக அலகாக மாற்றமடையவுள்ளது. மேலும் இவ்வாறான புதிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட மன்னார் நகர் பிரதேச செயலகத்தைப் உத்தியோகப்பூர்வமாக பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை விரைவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

மன்னார் மாவட்டத்தில் மாந்தை வடக்கு எனும் புதிய பிரதேச செயலகப் பிரிவை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரன்லி டீ மெல் தலைமையில் கடந்த திங்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானும் கலந்துகொண்டார்.

மன்னார் மாவட்டத்தில் புதிய பிரதேசச் செயலக உருவாக்கம் தொடர்பானத் திட்ட முன்மொழிவு விடயத்திற்குப் பொறுப்பான தேசிய பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் ஒப்புதலுக்கு அனுப்பிவைப்பது தொடர்பாகவும் மேற்படி கலந்துரையாடலில் பரிசீலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.