கோட்டா- மகிந்த தலைமையிலான

அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள்- விமல் வீரவன்ச தலைமையில் 12 கட்சிகள் சந்திப்பு

சமாதானப்படுத்த பௌத்த தேரர்கள் தீவிர முயற்சி
பதிப்பு: 2021 பெப். 13 21:55
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 14 01:45
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டுமென கூட்டணிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியதால் ஏற்பட்ட முரண்பாடுகள் நீடித்துச் செல்வதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
 
ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தீவிரமாக முன்னெடுத்திருந்த ராஜபக்ச குடும்பத்தின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் தற்போது ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கூட ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேலும் தீவிரமாக முன்னெடுப்பதிலும், இந்திய- அமெரிக்க அரசுகளுக்கு இலங்கைத் தீவில் இடம்கொடுக்கக்கூடாதென்ற நோக்கிலுமே நாளுக்கு நாள் விரிவடைந்து வருகின்றன

இதனால் கொழும்பு அரசியலில் அவசர சந்திப்புகள் இடம்பெற்று வருவதாகவும், இந்த முறுகல் நிலையை தீர்த்து வைக்க பௌத்த தேரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி தொடர்பாகக் கருத்துக்கூற அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாதென கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஏனைய அங்கத்துவக் கட்சிகளோடும் இது குறித்துப் பேசி வருவதாக அமைச்சர் ஜென்ஸ்டன் பெர்ணாண்டோ கூறினார். தேசிய சுதந்திர முன்னணியை கூட்டணிக் கட்சிகளில் இருந்து வெளியேற்ற வேண்டுமென மூத்த உறுப்பினர்கள் சிலர் மகிந்த ராஜபக்சவிடம் கூறியதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகளின் தலைவர்களும் விமல் வீரவன்சவின் வீட்டில் ஒன்றுகூடிப் பேசியுள்ளதாகவும் இதனால் ஏனைய அங்கத்துவக் கட்சிகளையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியில் இருந்து பிரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதெனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி அரசாங்கம் இலங்கை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியமைத்துள்ள நிலையில் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பொதுஜனப் பெரமுனக் கட்சியில் அங்கம் வகிக்கும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கோட்டாபய ராஜபக்சவுடன் அதிருப்தியடைந்துள்ள நிலையில், விமல் வீரவன்சவுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுவதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை இல்லாதொழித்த ராஜபக்ச குடும்பம் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்து மீண்டும் 2020 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத் தீவிரமாக முன்னெடுத்திருந்த ராஜபக்ச குடும்பத்தின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் தற்போது ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கூட ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேலும் தீவிரமாக முன்னெடுப்பதிலும், இந்திய- அமெரிக்க அரசுகளுக்கு இலங்கைத் தீவில் இடம்கொடுக்கக்கூடாதென்ற நோக்கிலுமே நாளுக்கு நாள் விரிவடைந்து வருகின்றன.