ஈழத் தமிழ் மக்களின் போராட்டத்தில் கலந்துகொண்டதால்

மனோ கணேசனிடம் இலங்கைப் பொலிஸார் வாக்குமூலம்

விசாரணை பற்றிய விபரங்களை ஊடகங்களுக்கு வெளியிடுவேன் என்கிறார் மனோ
பதிப்பு: 2021 பெப். 16 17:51
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 19 02:14
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
வடக்குக் கிழக்கில் இடம்பெற்ற நடைபவனிப் பேரணியில் கலந்துகொண்டதால் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார், விசாரணை நடத்தியதாக மனோ கணேசன் கூறினார். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் நேற்றுத் திங்கட்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன், கருணாகரம், கலையரசன் ஆகியோருக்கு நீதிமன்றத்தினால் அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் இவர்கள் மூவர் மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையிலேயே மனோ கணேசனிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டு சட்டத்தை மீறியதாகக் குற்றம் சுமத்தியே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றே மனோ கணேசன் மீது விசாரணை நடத்தப்பட்டதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை எழுத்து மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலம் தொடர்பாக விரைவில் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தவுள்ளதாக மனோ கணேசன் கூறினார்.

ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியறுத்தியும் இன அழிப்பு விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோரியும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி சென்ற 3 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிமன்றங்களில் தடையுத்தரவைப் பொலிஸார் பெற்றிருந்தனர். இந்நிலையில், இவ்வாறான தடையுத்தரவுகள் எதுவும் தம்மைக் கட்டுப்படுத்தாது எனத் தெரிவித்து தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

பொத்துவிலில் ஆரம்பித்த போராட்டத்தின் போது இலங்கை அரசாங்கத்தின் படைகளுடன் தொடர்புடைய குழுக்களும் பொலிஸாரும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அனைத்து தடைகளையும் தகர்த்து வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் பிரமுகர்களுக்குத் தற்போது பொலிஸார் நீதிமன்றங்களின் மூலமாக அழைப்பாணை விடுத்து வருகின்றனர்.