நிபந்தணைகள் இன்றி

அமெரிக்கா 80 பில்லியன்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளது- அமைச்சர் நிரோஷன் அறிவித்தார்

வடக்கு- கிழக்கில் இராணுவ முகாம்கள் மூடப்படாது- ரணில்
பதிப்பு: 2018 ஜூலை 19 13:11
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 19 19:01
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை மேலும் ஊக்குவிப்பதற்கு 80 பில்லியன்களை நன்கொடையாக வழங்கவுள்ளது. காணி, போக்குவரத்து, விவசாயம், உயர்கல்வி, மின்சக்தி, துறைகளில், அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என இலங்கையின் தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா கூறியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்திற்கு இந்த உதவிகள் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து அமைச்சர் நிரோஷன் பெரேரா எதுவும் கூறவில்லை. அதேவேளை,போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்கா வடமாகாண சபையின் மூலமாக உதவியளிக்க வேண்டும் என முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் கேட்டிருந்தார்.
 
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்னாள் தூதுவர் அத்துல்கெசப் மற்றும் தூதுரக இராஜதந்திரிகளிடம் யாழ்ப்பாணத்தில் வைத்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கை முப்படையினர் தொடர்பான முடிவுகள், செயற்திட்டங்கள் பற்றி, படை உயர் அதிகாரிகளே தீர்மானிக்கின்றனர். இலங்கை அரசாங்கம் தலையிடுவதில்லை-- ரணில்.

இந்த நிலையில் 80 பில்லியன்களை இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா நன்கொடையாக நிபந்தணைகள் இன்றி வழங்கத் தீர்மானித்துள்ளது.

வடக்கு- கிழக்குத் தமிழர் தாயகத்தில் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்றும், நிலையான அரசியல் தீர்வை முன்வைக்குமாறும் அமெரிக்கா, மைத்திரி- ரணில் அரசாங்கத்துக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்திருந்தது.

ஆனால், எந்தவொரு விடயத்திலும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில் அமெரிக்கா 80 பில்லியன்களை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளது.

இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல்களும் நடைபெறவுள்ள நிலையில் இந்த நன்கொடையை அமெரிக்கா வழங்கவுள்ளது.

இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் புதிய அரசியல் யாப்புக்கான ஏற்பாடுகள் எதுவுமே செய்யப்படாத நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகநாடுகளினால் உருவாக்கப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கம், தற்போது குழப்பமான நிலையில் உள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்ச எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளாராக அறிவிக்கப்படலாம் என செய்திகளும் வெளியாகி வரும் நிலையில், அமெரிக்கா 80 பில்லியன்களை நன்கொடையாக வழங்கவுள்ளது.

இதேவேளை, தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் இலங்கை இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்பு பிரிவுகள் எதுவுமே குறைக்கப்பட்டாது என ரணில் விக்கிரமசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் முகாம்கள் வடக்கு- கிழக்கில் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என்று கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன இலங்கை நாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை கேள்வி எழுப்பியிருந்தார்.

இலங்கைப் பிரதமர் என்ற அடிப்படையில் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கை முப்படையினர் தொடர்பான முடிவுகள், செயற்திட்டங்கள் பற்றி. படை உயர் அதிகாரிகளே தீர்மானிப்பதாகவும், அரசாங்கம் இலங்கைப் படையினரின் செயற்பாடுகளில் தலையிடுவதில்லை என்றும் கூறினார்.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை மைத்திரி- ரணில் அரசாங்கம் குறைக்கவுள்ளதாக தினேஸ் குணவர்த்தன குற்றம் சுமத்தியிருந்தார்.

அதேவேளை சீன அபிவிருத்தி வங்கி ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலகு கடனான வழங்கவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கடந்த மே மாதம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.