தமிழர் தாயகம்

வடமாகாண பாடசாலைகள் திட்டமிடப்பட்டுப் புறக்கணிப்பு

அபிவிருத்திக்கான போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லையெனக் குற்றச்சாட்டு- ஆளணிகளும் பற்றாக்குறை
பதிப்பு: 2021 மார்ச் 04 12:02
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 05 13:58
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
தமிழர்கள் வாழும் வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்திலும் பாரிய குறைபாடுகள் நிலவி வரும் நிலையில் கொழும்பை மையமாகக் கொண்டு ஆட்சி செய்யும் ஸ்ரீ லங்கா பொது ஜனபெரமுன அரசாங்கம் அதனை நிவர்த்தி செய்யப் பொருத்தமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் 12 கல்வி வலயங்கள் இயங்கி வரும் நிலையில் வகுப்பறை மற்றும் நிர்வாகக் கட்டிடங்கள் போதிய அளவு இல்லாததுடன் விஞ்ஞான ஆய்வு கூடங்கள் கணனி மற்றும் தகவல் தொடர்புத் தொழில் நுட்பவியல் பீடங்கள் போன்ற வசதிகளை அநேக பாடசாலைகளில் இலங்கை அரசாங்கம் இன்றுவரை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என வட மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.
 
வட மாகாணத்தில் இயங்கும் ஒரு சில பாடசாலைகளில் வாசிகசாலைக்கான கட்டிடங்கள் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள் ஆகியவை இல்லாததைச் சுட்டிக் காட்டிய இவ்வதிகாரி இலங்கை அரசாங்கம் தென்னிலங்கை பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளை நீக்குவதில் அதீத அக்கறை காட்டும் நிலையில் வட மாகாணப் பாடசாலைகளை முற்றாகக் கைவிட்டுள்ளதாக கூர்மைத் தளத்திற்கு தெரிவித்தார்.

இதேவேளை வட மாகாண சபை இயங்கிய காலப்பகுதியில் அப்போதைய வட மாகாண கல்வி அமைச்சரும் குறித்த பாடசாலைகளில் நிலவிய குறைபாடுகள் தொடர்பில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் முழுமையான யுத்த பாதிப்பை எதிர் நோக்கிய வட மாகாணப் பாடசாலைகளில் நிலவும் பல குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டி அதை நிவர்த்தி செய்யுமாறு முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான நாடாளுமன்ற உறுப்பினர் க.வி விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என வட புல கல்வி சார் சமூகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் மாகாணக் கல்வித் திணைக்களம் வட மாகாண பாடசாலைகளில் நிலவும் பல பௌதீக ரீதியிலான குறைபாடுகளுடன் இப் பாடசாலைகளை தொடர்ச்சியாக இயக்கி வருவதாக மேற்படி உயர் அதிகாரி கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.