வடமாகாணத்தில் உள்ள

தலை மன்னாரிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையில் உள்ள மணல் திட்டைகளை மீனவர்கள் பயன்படுத்தத் தடை

இலங்கை ஒற்றையாட்சி அரசின் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் திடீர் அறிவிப்பு
பதிப்பு: 2021 மார்ச் 06 21:27
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 07 08:23
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள தமிழ் மீனவக் கிராமமான தலை மன்னாரிற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையில் உள்ள மணல் திட்டைகளை மீனவர்கள் பயன்படுத்த அனுமதிக்க முடியாதென இலங்கை ஒற்றையாட்சி அரசின் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தடாலடியாகத் தெரிவித்துள்ளனர். ஏலவே மன்னார் மாவட்டத்தில் தமிழர்களுக்கு சொந்தமான பல ஏக்கர் காணிகளைச் சுவீகரித்துள்ள இலங்கை அரசின் வன ஜீவராசிகள் திணைக்களம் கடல் நடுவே உள்ள மணல் திட்டைகளைத் தற்பொழுது சொந்தம் கொண்டாடுவது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
 
இந்த நிலையில் மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் தலைமன்னார் மணல் திட்டை விவகாரம் கடுமையாக எதிரொலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வியாழன் மன்னார் மாவட்ட செயலகத்தில் வட மாகாண ஆளுநர் திருமதி பி. எம். எஸ். சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறித்த தலைமன்னார் மணல் திட்டைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த மணல் திட்டைகளை மீனவர்கள் பயன்படுத்த எச்சந்தர்பத்திலும் அனுமதிக்க முடியாதெனத் தெரிவித்துள்ளனர்.

தலைமன்னாருக்கும் இந்தியா இராமேஸ்வரத்திற்கும் இடையில் இலங்கைக்குச் சொந்தமான 3ம் 4ம் 5ம் மணல் திட்டைகள் சுமார் 400 வருடங்களுக்கு மேலாக பேசாலை தலைமன்னார் பகுதி தமிழ் மீனவர்களினால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறித்த மணல் திட்டைகளில் இம் மீனவர்கள் தங்கியிருந்து கடல் தொழில் செய்து வந்ததுடன் பிடிக்கும் மீன்களை கருவாடாகப் பதனிட்டு தமது தொழில்களை மேற்கொண்டு வந்தனர். அத்துடன் மீனவர்கள் காலங்காலமாக தமது வலைகளை உலரச் செய்து இளைப்பாறும் இடமாகவும் குறித்த மணல் திட்டைகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இவ்வகையில் மன்னார் பகுதி தமிழ் மீனவர்களின் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்துள்ள இம் மணல் திட்டைகளுக்குள் நுழைவதற்கோ அதனைத் தளமாகப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடுவதற்கோ தற்பொழுது வன ஜீவராசிகள் திணைக்களம் தடை விதித்துள்ளதுடன் இம் மணல் திட்டைகள் இலங்கை அரசு பறவைகள் சரணாலயமாக பிரகடனப் படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மீனவர்கள் எவரேனும் அனுமதியின்றி மணல் திட்டைக்குள் பிரவேசித்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என வன ஜீவராசிகள் திணைக்களம், தமிழ் மீனவர்களை மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தலைமன்னார் மற்றும் பேசாலை மீனவர்கள் இது தொடர்பில் மன்னார் கடற்றொழில் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர்களுக்கு முறையிட்டு இருந்தனர்.

இதற்கமைய கடந்த வியாழன் நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்படி மணல் திட்டைகள் விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. வட மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் ஆகியோர்களும் அரச திணைக்கள தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த சூழ்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட வன ஜீவராசிகள் திணைக்களத் அதிகாரிகள் இலங்கை அரசாங்கம் தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையிலான 3ம் 4ம் 5ம் திட்டைகளில் தேசிய பறவைகள் சரணலாயமாகப் பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அத்துடன் மணல் திட்டைகளில் காணப்படும் மனித நடமாட்டம் பறவைகளின் சுதந்திரமான செயற்பாட்டிற்கும் அவற்றின் இனப்பெருக்கத்திற்கும் ஊறு விளைவிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மீனவர்கள் குறித்த மணல் திட்டைகளில் உள்நுழைவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் இத் தடையை தம்மால் நீக்கமுடியாதெனவும் அவ்விதம் நீக்குவதாயின் அரச உயர் மட்டத்தின் அனுமதி அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஏலவே தமிழர் தாயகப்பகுதி எங்கும் அவர்களின் குடிநிலங்களும் வயற்காணிகளும் தோட்டங்களும் இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, விஷேச அதிரடிப் படை, வனப் பாதுகாப்பு திணைக்களம், தொல்லியல் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியோர்களினால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு ஏப்பம் விடப்பட்டுள்ள சூழ்நிலையில் ஏழை மீனவர்களின் அன்றாட ஜீவனோபாயத்தின் ஆணி வேராக கடல் நடுவே இருக்கும் தலைமன்னார் மணல் திட்டுக்களையும் விட்டு வைக்காது, பறவைகள் சரணாலயம் எனும் பெயரில் இலங்கை வன ஜீவராசிகள் திணைக்களம் அதனைக் கபளீகரம் செய்துள்ளமை தொடர்பாக மன்னார் மாவட்ட தமிழ் பேசும் மீனவர் சமூகம் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.