உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த விசாரணை ஆணைக்குழு பரிந்துரையின்படி

முஸ்லிம்களின் மதராஸா நிலையங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்

ஆனால் பொதுபலசேனவைத் தடை செய்ய முடியாதென்கிறார் அமைச்சர் பீரிஸ்
பதிப்பு: 2021 மார்ச் 08 19:17
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 09 03:51
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் பொதுபல சேன இயக்கத்தைத் தடை செய்ய முடியாதென ராஜபக்ச அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் அறிவித்துள்ளார். பௌத்த பிக்குமாரை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பொதுபலசேன இயக்கத்தைத் தடை செய்யுமாறு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரைக்கு அமைவாகவே பொதுபல சேனவைத் தடை செய்ய முடியாதென அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
 
ஆணைக்குழுவின் இப்பரிந்துரைக்கு எதிராக பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் பகிரங்கமாகவே கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், பொதுபல சேனாவை தடை செய்வதால் எந்த நன்மையும் ஏற்பட்டுவிடாது என கூறினார். பரிந்துரையின் பிரகாரம் தடை செய்வது கடினமானதெனவும் அமைச்சர் சொன்னார்.

ஆணைக்குழுவில் கூறப்பட்டுள்ளவாறு கல்வி குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்த முடியும். குறிப்பாக இனவாத சிந்தனைகள் பாட விதானங்களில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை நீக்க வேண்டும். மதராஸா நிலையங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டுமென ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த முடியுமென அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கூறினார்.

முஸ்லிம் மக்களின் இஸ்லாமியப் பாடவிதானங்களில் மாற்றம் செய்யும் திட்டமொன்றையே அரசாங்கம் நடைமுறைப்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுவதாக அவதானிகள் கூறுகின்றனர்.