வடமாகாணம் மன்னார்

திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரி நிகழ்வுகள்- கொரோனா பாதுகாப்பு எச்சரிக்கை

வருகையைக் குறைக்குமாறும் அவசரக் கோரிக்கை
பதிப்பு: 2021 மார்ச் 11 14:30
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 13 22:37
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#tamil
மன்னாரில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இன்று வியாழன் மகா சிவராத்திரித் தினத்தை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் கடுமையான சுகாதார நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் உட்படுத்தப்படுவார்கள் எனச் சுகாதார அதிகாரிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர். மேலும் சிவராத்திரித் தினத்தை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் நடைபெறும் பல அன்னதான நிகழ்வுகள் இம்முறை மட்டுப்படுத்தப்பட்டு இரண்டு மடங்களில் மட்டுமே அன்னதான நிகழ்வுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என மன்னார் சுகாதார அதிகாரிகள் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்
 
எனினும் குறித்த அன்னதான மடங்களில் பக்தர்கள் அமர்ந்து உணவு அருந்துவதற்கும் அங்கு உணவு வகைகளை பரிமாறுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்களுக்கு குறித்த அன்னதான மடங்களில் உணவுகளைப் பொதி செய்து வழங்குமாறு ஆலய நிருவாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் ஆலயத்தில் நாளை வியாழன் காலை ஆரம்பிக்கப்படும் சிவராத்திரி தின அனுஷ்டானங்களில் பாலாவி தீர்த்தக்கரையில் இருந்து சிவன் ஆலயத்தை நோக்கி மேற்கொள்ளப்படும் தீர்த்தக் காவடி நிகழ்வுகளுக்கு கொரோனா தொற்றுக் காரணமாக மன்னார் சுகாதார அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வரத்தில் நடத்தப்படும் நான்கு ஜாம பூசைகளில் கலந்து கொள்வதற்கும் ஏனைய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதற்கும் வரையறுக்கப்பட்ட எண்ணிக் கையிலேயே பொது மக்கள் அனுமதிக்கப்படுவதுடன் ஆலய வளாகத்திலும் அவர்களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மன்னார் சுகாதார திணைக்களப் பணியாளர்களும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் திருக்கேதீஸ்வர ஆலயப் பகுதிகளில் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.