வடமாகாணம் மன்னார்

நானாட்டான் அருவி ஆற்றை மையப்படுத்தி மண் அகழ்வு

நிலக்கீழ் நீர் உவர் நீராக மாற்றம்- பெருமளவு தமிழர்களின் தோட்டச் செய்கைகள் பாதிப்பு
பதிப்பு: 2021 மார்ச் 22 22:42
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 24 01:16
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
தாயகப் பிரதேசமான வட மாகாணம் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அருவி ஆற்றை மையப்படுத்தி கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடற்ற மண் அகழ்வினால் இப்பகுதியின் நிலக்கீழ் நீர், உவர் நீராக மாற்றமடைந்து நூற்றுக்கணக்கான ஏழைத் தமிழ் குடும்பங்களின் பல நூறு ஏக்கர் தோட்டச் செய்கைகள் கடும் பாதிப்படைந்துள்ளதாக நானாட்டான் பிரதேச சபைத் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி கூர்மைச் செய்திக்கு தெரிவித்தார். மேலும் நானாட்டான் பகுதியில் உள்ள பல குடிநீர் கிணறுகள் குறித்த மணல் அகழ்வினால் நீரின்றி காணப்படுவதினால் இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடும் தலைதூக்கி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
இந்த நிலையில் மன்னார் மாவட்ட மற்றும் நானாட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மணல் அகழ்வினை தடுக்கக் கோரி தான் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளையடுத்து நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அருவி ஆற்றை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மண் அகழ்விற்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளதாக நானாட்டான் பிரதேச சபைத் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்.

மேலும் முசலி பிரதேச செயலகப் பிரிவில் அருவி ஆற்றங்கரையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வினால் அப்பிரதேசங்களிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய ஆறான அருவி ஆறு சுமார் 164 கிலோ மீற்றர் நீளமானது. வட மத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் உருவாகி வட மாகாணம் மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள அரிப்பு கிராமம் ஊடாக இவ் ஆறு இந்து சமுத்திரத்தில் இறுதியாகச் சங்கமமாகிறது.

குறித்த அருவி ஆறானது அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து வவுனியா மாவட்டத்தின் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவில் உள்ள பல தமிழ் கிராமங்களை ஊடறுத்து மன்னார் மாவட்டத்தின் எல்லையை அடைகிறது.

பின்னர் மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலகப் பிரிவில் தேக்கம், குஞ்சிக்குளம், கட்டையடம்பன், பண்ணவெட்டுவான் ஆகிய தமிழ் மக்கள் வாழும் கிராம சேவையாளர் பிரிவுகள் ஊடாக நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் களிமோட்டைபுளியங்குளம், பரிகாரிகண்டல் கிராமசேவையாளர் பகுதிகளை ஊடறுத்து முசலி பிரதேச செயலக பிரிவு எல்லைக்குள் செல்கின்றது. மேலும் முசலி பிரதேச செயலக பிரிவில் மருதமடு, பூநொச்சிக்குளம், பண்டாரவெளி ஆகிய முஸ்லிம் மக்கள் வாழும் கிராமசேவையாளர் பிரிவுகளை ஊடறுத்து மீண்டும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் உள்ள வாழ்க்கைப்பட்டான் கண்டல் இராசமடு, அச்சம்குளம் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகள் வழியாக மீண்டும் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய மீனவக் கிராமமான முத்தரிப்புக் கிராமத்தின் கடலில் சங்கமமாகிறது.

இதன் அடிப்படையில் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் களிமோட்டை புளியங்குளம், பரிகாரிகண்டல், வாழ்க்கைப்பட்டான் கண்டல், இராசமடு, அச்சம்குளம் ஆகிய கிராமசேவையாளர் பகுதிகளின் ஊடாக செல்லும் அருவி ஆற்றின் கரைகளில் 2011 தொடக்கம் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட மாபெரும் மணல் அகழ்வினையே தான் பகீரதப் பிரயத்தனத்திற்கு மத்தியில் அதிகாரிகளின் உதவியுடன் நிறுத்தியுள்ளதாக நானாட்டான் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராம அபிவிருத்தி மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசத்திற்கு அருவி ஆற்று பகுதிகளில் மணல் அகழ்வினை மேற்கொள்வதற்கு கடந்த 2001 ஆம் ஆண்டு காலப் பகுதியில் எட்டு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. இவ் அனுமதிப் பத்திரம் ஊடாக குறித்த சங்கம் சட்டப்படி மணல் அகழ்வினை மேற்கொண்டு நியாய விலையில் மணலை விற்பனை செய்துவந்தது.

உள்ளூர் மக்கள் குறித்த மணல் அகழ்வுப் பணியில் ஈடுபட்ட தன் மூலம் அவர்களும் நிலையான வருமானமொன்றினை பெற்று வந்தனர். இந்தநிலையில் 2011ஆம் ஆண்டு அருவி ஆறு பெருக்கெடுத்து நானாட்டான் பகுதி கிராமங்கள் பல மூழ்கிய நிலையில் சங்கம் மூலமாக மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வுப்பணிகள் கைவிடப்பட்டது.

இத்தருணத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டுப்பகுதியில் மகிந்த ராஜபக்ச அரசின் செல்வாக்குடைய அமைச்சர் ஒருவர் தனது கட்சி ஆதரவாளர்களுக்கும் தென்னிலங்கை மணல் மாபியாக்களுக்கும் நானாட்டான் மற்றும் முசலிப் பகுதிகளில் ஆற்று மணல் அகழ்வதற்கு 38 அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி நானாட்டான் பகுதிகளில் வகை தொகையின்றி கணக்கிட முடியாத மணல் வளம் அகழப்பட்டு தென் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் அனுமதிப்பத்திரங்களில் வழங்கப்பட்ட அளவை விட இப்பிரதேசத்தில் அதிக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நானாட்டானில் உள்ள பல கிராமங்கள் கடும் பாதிப்படைந்து அழிவுறும் நிலையில் பல சவால்களுக்கும் மணல் மாபியாக்களின் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் குறித்த மணல் அகழ்வினை தான் தடுத்துள்ளதாக நானாட்டான் பிரதேச சபைத் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தனக்கு ஏலவே வழங்கப்பட்ட மணல் அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படவில்லை எனவும் தனது மணல் அனுமதிப்பத்திரம் தொடர்பில் அரசாங்க அதிகாரிகள் தமது கடமையை சரி வரச் செய்யவில்லை எனவும் மன்னார் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் நானாட்டான் பிரதேச சபைத் தலைவர் மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் ஆகியோர்கள் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.