எதுவுமேயில்லாத ஜெனீவா மனித உரிமைச் சபையின்

தீர்மானம் தொடர்பாக விளக்கமளிக்கும் இலங்கை அரசாங்கம்

ஆபத்து இல்லையென்கிறார் அமைச்சர் கெகலிய- தமிழரின் முகத்தில் அறையப்பட்டுள்ளது- கஜேந்திரகுமார்
பதிப்பு: 2021 மார்ச் 24 18:52
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 24 21:16
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானம் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தாதென்று அமைச்சரவைப் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுமென்றும், ஐக்கிய நாடுகள் சபையின் படைகள் இலங்கைக்கு வருமெனவும் சிங்கள இணையத்தளங்களில் வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லையெனவும் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல கூறினார். கொழும்பில் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அமைச்சர் கெகலிய ரம்புக்வெல, மனித உரிமைச் சபையின் தீர்மானம் தொடர்பாக அரசாங்கம் அதிகாரபூர்வமாக விரைவில் கருத்து வெளியிடும் என்றும் கூறினார்.
 
பௌத்த தேரர்கள் மற்றும் பொது மக்களுக்கு இது தொடர்பாக விளக்கமளிக்கப்படும் என்றும் இத் தீர்மானம் இலங்கைக்கு ஆபத்து என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேண்டுமென்றே செய்தி ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுவதாகவும் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல கூறினார்.

இதேவேளை, ராஜபக்ச குடும்பத்தின் பலவீனமான செயற்பாடுகளே மனித உரிமைச் சபையின் கடுமையான தீர்மானத்துக்குப் பிரதான காரணம் என்று ஜே.வி.பி உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

மனித உரிமைச் சபையின் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கைக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாமென சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமிழ் மக்களுக்கு எதிரான போரை நடத்தியவர்களே விசாரணைகளையும் நடத்துமாறு ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தில் பரிந்துரைத்திருப்பது எந்தவகையான நியாயம் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தத் தீர்மானம் தமிழ் மக்களின் முகத்தில் அறைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மனித உரிமைச் சபையி்ல் இலங்கை விவகாரத்தைக் கையாளும் பிரித்தானியா தலைமையிலான நாடுகள் வழங்கிய பரிந்துரை ஈழத்தமிழர்களின் முகத்தில் அறையப்பட்டுள்ளது என்ற தலைப்பில் சென்ற பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி கூர்மை இணையத் தளத்தில் விளக்கக் கட்டுரை ஒன்று எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.