வடமாகாணக் கடற்பரப்பில்

தமிழக மீனவர் 54 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது

பழிவாங்கும் செயற்பாடென மீனவர்கள் கண்டனம்
பதிப்பு: 2021 மார்ச் 26 05:58
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 27 00:57
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான வடக்கு மாகாணக் கடற்பரப்பில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 54 இந்திய தமிழ் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று வியாழன் அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் கடந்த செவ்வாய் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரனைக்கு இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்காது நடுநிலைமை வகித்ததிற்கான இலங்கையின் பழிவாங்கும் நடவடிக்கையே தமது மீனவர்களின் குறித்த கைது என தமிழ் நாட்டு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காரைதீவு, மன்னார் மாவட்டத்தில் பேசாலை, மற்றும் முல்லைத்தீவு மாவட்டதில் சாலை ஆகிய கடற்பரப்புகளிலேயே இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை வட மாகாண கடற்பரப் பின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போதே இலங்கை கடற்பிராந்தியத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் காரைதீவுக் கடற்பகுதியில் ஒரு மீன் பிடி படகில் இருந்த 14 பேர்களும் முல்லைத்தீவு சாலைக் கடல் பரப்பில் இரண்டு படகுகளில் இருந்த 20 பேர்களும் மன்னார் பேசாலை கடற்பரப்பில் இரண்டு படகுகளுடன் 20 பேர்கள் எனும் அடிப்படையில் 54 இந்திய தமிழ் மீனவர்களே நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

வியாழன் பிற்பகல் கடலில் கைதான 54 மீனவர்களும் காரைதீவு, நாச்சிக்குடா, மற்றும் முல்லைத்தீவுக் கடற்படைத் தளங்களுக்கு விசாரணைகளுக்காக அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில் கொரோனா நோய் தொற்று அபாயம் காரணமாக மன்னார் பேசாலை கடற்பரப்பில் கைதான 20 மீனவர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மிகுதியான 34 இந்திய மீனவர்களும் அவர்களின் படகுகளிலேயே இலங்கை கடற்படையின் பாதுகாப்புடன் நாளை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

வட மாகாண சுகாதாரப் பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் கடற்றொ ழில் திணைக்கள அதிகாரிகள் ஊடாக அவர்களை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்தில் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார அதிகாரி ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

அத்துடன் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததுடன் இலங்கை கடற்றொழில் அதிகாரிகள் மூலம் கைதான இந்திய மீனவர்கள் அனைவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் குறித்த அதிகாரி கூர்மைக்கு தெரிவித்தார்.