வடமாகாணத்தில்

குரங்குகளின் தொல்லைகளைத் தடுக்கத் துப்பாக்கிகள் கோரப்படுகின்றன

ஆளுநரிடம் வேண்டுகோள்
பதிப்பு: 2021 மார்ச் 29 16:55
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 31 01:25
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
குரங்குகளின் அட்டூழியத்தைத் தடுப்பதற்கு துப்பாக்கிகளைத் தந்து மக்களைப் பட்டினிச்சாவிலிருந்து காப்பாற்றுமாறு முல்லைத்தீவு மாவட்ட இணைத் தலைவர்களான வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோர்களிடம் தான் வேண்டுகோள் விடுத்ததாகத் துணுக்காய் பிரதேச சபையின் தவிசாளர் அம்பலவாணர் அமிர்தலிங்கம் கூர்மைச் செய்தித்தளத்திற்கு தெரிவித்தார். கடந்த செவ்வாய் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் முல்லை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற வேளையே குறித்த கோரிக்கையைத் தான் முன்வைத்ததாகத் துணுக்காய் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
 
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் வரலாற்றில் என்றுமில்லா தவாறு குரங்குகளின் அட்டூழியம் தலை தூக்கிய நிலையில் இப்பகுதி தமிழ் மக்களின் அனைத்து வாழ்வாதாரக் கட்டமைப்புகளும் குரங்குகளினால் தினமும் துவம்சம் செய்யப்பட்டு வருகிறது என தவிசாளர் அம்பலவாணர் அமிர்தலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் குறிப்பிட்டார்.

இறுதி யுத்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்து பல இடப்பெயர்வுகளை சந்தித்து கையில் எதுவுமின்றி துணுக்காய் பகுதியில் மீள்குடியேறிய இம்மக்கள் பரம்பரை பரம்பரையாக தாம் மேற்கொண்ட நெற்செய்கை மரக்கறி மற்றும் பழச்செய்கை உட்பட தென்னந் தோட்டம் சேனைப்பயிர் செய்கை ஆகியவற்றையே தமது வருமானத்திற்கான மூலாதாரமாகவும் வாழ்வாதாரமாகவும் தற்போது கொண்டுள்ள நிலையில் குரங்குகளினால் தமது வருமான வழிகள் அனைத்தும் நிர்மூலமாகி அன்றாட ஜீவியத்திற்கே அல்லல்லுறுவதுடன் அவர்கள் வறுமையுடன் போராடி வருவதாகவும் தெரிவித்தார்.

கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள் வீடுகளில் உள்ள சமைத்த உணவுகளைப் சமையல் பாத்திரங்களுடன் எடுத்துச் செல்வதுடன் பாதணிகள் பாடசாலைப் பிள்ளைகளின் சீருடைகள் புத்தகப்பைகள், உடுபுடவைகள் உட்பட தேநீர் குவளைகளைக் கூட விட்டுவைக்காத நிலையில் பொது மக்களையும் குரங்குகள் கடித்து குதறுவதாகவும் தவிசாளர் அமிர்தலிங்கம் மேலும் தெரிவித்தார்.

இலங்கை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் குரங்குகளின் அட்டூழியத்தில் இருந்து தம்மை பாதுகாக்குமாறு துணுக்காய் மக்கள் தொடர்ச்சியாக பல கோரிக்கைகளை விடுத்து வந்த நிலையில் இது குறித்து இலங்கை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவி ல்லை எனவும் தவிசாளர் அமிர்தலிங்கம் கூர்மைக்கு மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் குரங்குகளின் நடமாட்டத்தை தடுக்க உரிய நடவடிக் கைகளை எடுக்குமாறு துணுக்காய் பிரதேச மக்கள் தன்னிடம் தொடர்ந்தும் வேண்டுகோள்விடுத்த நிலையிலேயே கடந்த செவ்வாய் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி இணைத் தலைவர்களான வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் குரங்குகள் தொடர்பான பிரச்சனையை பிரஸ்தாபித்ததுடன் குரங்கு குதறிய தேங்காய் ஒன்றை தான் அங்கு எடுத்துச்சென்று அதனைக் காட்சிப்படுத்தி குரங்குகளைக் கட்டுப்படுத்த சொட்கன் எனப்படும் துப்பாக்கிகளை கோரியதாகவும் அவர் தெரிவித்தார் .

துணுக்காய் மக்களுக்கு துப்பாக்கி இல்லாவிட்டால் வாழ்வு இல்லை என்ற அளவுக்கு குரங்குகளின் அட்டகாசம் தலைத் தூக்கியுள்ளதினால் வீட்டுக்கொரு துப்பாக்கி இருத்தல் வேண்டும் எனும் கட்டாயச் சூழ்நிலையிலே தான் கிராமத்திற்கு ஒரு துப்பாக்கியாவது வழங்கவேண்டும் எனும் கோரிக்கையை அங்கு பலமாக முன்வைத்ததாகவும் தனது கோரிக்கை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தெனவும் தவிசாளர் குறிப்பிட்டார்.

துணுக்காய் பிரதேச செயலக பிரிவில் செயல்படும் விவசாய அமைப்புகளின் நிதியைக்கொண்டு தாம் வவுனியா நகரில் புதிய துப்பாக்கிகளை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.

அத்துடன் ஏலவே கடந்த செவ்வாய் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கமைய விவசாய பெரும்பாக உத்தியோகத்தர் மற்றும் தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர்களின் சிபார்சுடன் சட்டபூர்வ நடைமுறைக்கு அமைய விரைவில் துப்பாக்கிகள் பெறப்பட்டு துணுக்காய் மக்கள் குரங்குகளினால் எதிர்நோக்கிய நீண்ட காலப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என துணுக்காய் பிரதேச சபைத் தவிசாளர் கூர்மைக்கு மேலும் குறிபிட்டார்.