வடமாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு

திருநெல்வேலி பாற்பண்ணைக் கிராமம் முடக்கம்

யாழ் நகர பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை
பதிப்பு: 2021 மார்ச் 29 22:37
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 31 01:08
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
தமிழர் தாயகம் வடக்கின் யாழ் மாநகரில் கொரோனா தொற்று மிக தீவிரமாகப் பரவி வரும் நிலையில் திருநெல்வேலி பாற்பண்ணைக் கிராமம் அபாயப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் யாழ் கல்வி வலயத்திற்குள் உள்ள 104 பாடசாலைகளையும் இன்று திங்கள் தொடக்கம் ஒரு வாரத்திற்கு மூடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ் நகரில் நேற்றும் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நோய்த் தொற்று பரவாதிருக்க நகரின் வேறு சில பகுதிகளையும் இன்று திங்கள் கிழமை முடக்கும் அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தை வளாகம் மற்றும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று ஞாயிறு கிடைக்கப்பெற்ற நிலையில் இப்பிரதேசத்தைச் சேர்ந்த 127 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 51 நபர்கள் திருநெல்வேலி பகுதியில் உள்ள பாற்பண்ணை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனத்தெரிவிக்கப்படுகிறது

இந்த நிலையில் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் கொரோனா நோய் பரவல் நாளுக்கு நாள் தீவிரம் பெற்றுவரும் நிலையில் நேற்று ஞாயிறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் கொவிட் -19 நோய் எதிர்ப்பு மாவட்டச் செயலணியின் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டு யாழ் நகரில் அதி வேகமாக கொரொனா நோய் பரவிவருவது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டது. இந்த அவசரக் கூட்டத்தையடுத்து பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் யாழ் நகரில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே திருநேல்வேலி பாற்பண்ணைக் கிராமம் அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு மறு அறிவித்தல் வரை அக்கிராமம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் யாழ் நகர கல்வி வலயத்தில் உள்ள 104 பாடசாலைகளையும் இன்று திங்கள் முதல் ஒரு வாரத்திற்கு மூடுவதற்கும் மேற்படி யாழ் மாவட்டக் கொவிட்-19 எதிர்ப்புச் செயலணிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் யாழ் நகரில் வைத்தியர்கள் மருத்துவத் தாதிகள் வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்கள் என ஏலவே பல தரப்பட்டவர்களும் கொரோனா நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நேற்று ஞாயிறு யாழ்ப்பாணம் மா நகர சபை உறுப்பினர் ஓருவரும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே யாழ் மாநகரசபை முதல்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் யாழ் மாநகரசபையின் பிறிதொரு உறுப்பினரும் நோய் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டமை மா நகர சபை உறுப்பினர்களுக்கு இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வேகமாக பரவி பலர் இதுவரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று யாழ் மாநகரவாசிகள் தாமாகவே முன்வந்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.இந்த வகையில் யாழ் நகரில் நேற்று ஞாயிறு காலை முதல் மாலை வரை 870 பீ. சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக வட மாகாண சுகாதாரத் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் கூர்மைக்குத் தெரிவித்தார்