வடமாகாணம்

வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

மாவட்ட அலுவலகம் முன் ஒன்றுதிரண்ட மக்கள்
பதிப்பு: 2021 மார்ச் 31 22:58
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 01 13:35
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ரணில்- மைத்திரி அரசாங்கத்தில் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போதைய ராஜபக்ச அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கக்கோரி திங்கட்கிழமை காலை முல்லைத்தீவு மாவட்டத்திலும் மன்னார் மாவட்டத்திலும் குறித்த வீட்டுத்திட்டப் பயனாளிகளான தமிழ் மக்களினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாங்குளம் நகரில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தின் முன் நூற்றுக்கணக்கில் ஒன்று திரண்ட வீட்டுத்திட்ட பயனாளிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
 
அவர்கள் தாம் நிர்மாணித்த வீடுகளுக்கான கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அங்கு கோஷம் எழுப்பினர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிலும் மேற்படி வீட்டுத்திட்டத்தைப் பெற்ற பொது மக்கள் தமது வீடுகளுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வீட்டுத் திட்டப்பயனாளிகள் நூற்றுக்கணக்கானோர் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அருகிலிருந்து பேரணியாக பிரதேச செயலகம் சென்றடைந்து பின்னர் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு வீட்டுத்திட்டம் தொடர்பில் தமது கொடுப்பனவுகளை உடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் சி.ஜெயகாந்தனிடம் கூர்மைச் செய்தி தளம் இது தொடர்பில் விவரம் கேட்டபோது, முல்லைதீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வீடுகளை பெற்ற 1344 பயனாளிகள் உள்ளதாகவும் இவர்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கொடுப்பனவுகளை வழங்கவேண்டியுள்ளதெனவும் தெரிவித்தார்

இவர்களுக்கு மேற்படி புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான முதற்கட்டக் கொடுப்பனவாக குறிப்பிட்டதொரு பணத்தொகை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் வழங்கப்பட்டதாகவும் எனினும் அடுத்தடுத்த கொடுப்பனவுகள் வழங்கப்படாததினால் வீட்டு நிர்மாணப்பணிகளைப் பூர்த்தி செய்யமுடியாத நிலையில் தமது மிகுதிக் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் கூர்மைக்கு மேலும் தெரிவித்தார்

இதேவேளை மன்னார் நகரிலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீட்டுத்திட்ட பயனாளிகளான பொது மக்கள் கவனயீர்ப்பு பேரணியொன்றினை இன்று மேற்கொண்டனர்.

செவ்வாய்க்கிழமை காலை குறித்த கவனயீர்ப்பு பேரணி மன்னார் பொது விளையாட்டு அரங்கில் ஆரம்பித்து வைத்தியசாலை வீதி, புனித செபஸ்தியார் பேராலய வீதி, மற்றும் பஸார் வீதியூடாக மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்து. குறித்த பேரணியில் மேற்படி வீட்டுத்திட்டத்தின் ஊடாக வீடுகளை நிர்மாணித்து அதற்கான கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளாத நூற்றுக்கணக்கான பொது மக்கள் பல்வேறு வாசகங்களைக் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு கலந்துகொண்டனர்.

முன்னைய அரசாங்கத்தின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் "சமட்ட செவன எனும் மாதிரி கிராமம் வீட்டுத்திட்டம் மற்றும் கொத்தணி வீட்டுத்திட்டங்கள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இலங்கையின் வட கிழக்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான், மடு, முசலி மன்னார் நகரம் மற்றும் மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி திட்டத்தின் ஊடாக வீடுகள் அற்ற மற்றும் குடிசை வீடுகளில் வாழும் வறிய குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை பயனாளிகளுக்கு முதல் கட்ட கொடுப்பனவினை வழங்கியது. எனினும் மிகுதி கொடுப்பனவு வழங்கப்படவில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதினால் குறித்த வீட்டுத்திட்டத்தை ராஜபக்ஸ அரசாங்கம் முற்றாக கைவிட்ட நிலையில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏழை தமிழ் மக்களே தமது வீடுகளுக்கான கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தை மன்னாரில் மேற்கொண்டனர்.