தமிழ் இன அழிப்பை துணிவோடு வெளிப்படுத்திய

ஆயர் இராயப்பு ஜோசப் காலமானார்- பெருமளவான மக்கள் சமய வேறுபாடின்றி கண்ணீர் வணக்கம்

புகழுடல் திங்கட்கிழமை மன்னாரில் நல்லடக்கம்
பதிப்பு: 2021 ஏப். 01 17:40
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 02 21:17
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
தமிழ் இன அழிப்பை சர்வதேசத்துக்குப் பகிரங்கமாகவும் துணிவோடும் வெளிப்படுத்திய இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர்மருதமடு வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை காலை 6.30க்குக் காலமானார். தனது 80 ஆவது வயதில் காலமான ஆயர், மன்னார் மறை மாவட்டத்தின் இரண்டாவது ஆயராக 1992ம் ஆண்டு ஜூலை மாதம் ஆறாம் திகதி பாப்பரசரினால் நியமனம் செய்யப்பட்டார். மன்னார் மறை மாவட்ட ஆயராகத் தொடர்சியாக 24 வருடங்கள் பணியாற்றிய நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி தனது ஆயர் பணியிலிருந்து இவர் இளைப்பாறினார்.
 
கடந்த 2015 ஆம் ஆண்டு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி மன்னார் ஆயர் இல்லத்தில் ஓய்வெடுத்திருந்தார். கடந்த இரண்டு மாதங்களாக யாழ் திருச்சிலுவைக் கன்னியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று காலை மரணமடைந்ததாக மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் வண.பிதா சோசை ஊடகங்களுக்கு அறிவித்தார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 1940 ஏப்பிரல் 16 ஆம் திகதி பிறந்த முன்னாள் ஆயர் தனது இளம் பிராயத்தில் தனது குடும்பத்தாருடன் வவுனியா செட்டிக்குளத்தில் வசித்ததுடன் தனது ஆரம்ப கல்வியை யாழ் நெடுந்தீவிலும் பின்னர் மன்னார் முருங்கன் றோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையிலும் பயின்றார்.

பின்னர் தனது உயர் கல்வியை யாழ் நகரில் தொடர்ந்த கலாநிதி இராயப்பு ஜோசப் யாழ் குரு மடத்தில் இறையியல் கல்வியைத் தொடர்ந்த நிலையில் 1967ல் தனது 27 வயதில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அத்துடன் அவர் மன்னார் மறை மாவட்டதின் முருங்கன் பங்கின் உதவிப் பங்கு தந்தையாகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப்பின் மரணச் செய்தி கேட்டு வட கிழக்கு தமிழ் மக்கள் உட்பட உலகளாவிய ரீதியில் வாழும் தமிழ் மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

தற்போது முன்னாள் ஆயரின் புகழுடல்யாழ் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரமுகர்கள் உயர் அதிகாரிகள் உட்பட ஆயிரக்கணக்கான பொது மக்கள் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அத்துடன் இலங்கையின் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு அரசியல் முக்கியஸ்தர்கள் ஆயரின் மறைவையிட்டு தமது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்

முன்னாள் ஆயரின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும திங்கள் மாலை 3 மணிக்கு மன்னார் நகரில் நடைபெறவுள்ளது. அன்றைய நாள் வடகிழக்கு தாயகம் முழுதும் துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.