ஆயர் இராஜப்பு ஜோசப்பின்

புகழுடல் அடக்கம் செய்யும் நாளில் நாடளாவிய துக்க தினம்- அடைக்கலநாதன் கோரிக்கை

இலங்கை அரசாங்கத்திடம் கடிதம்
பதிப்பு: 2021 ஏப். 01 20:43
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 02 21:18
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் இன்று மரணமடைந்த நிலையில் திங்கள் மாலை அன்னாரின் உடல் மன்னாரில் நல்லடக்கம் செய்யப்படுவதினால் அன்று நாடளாவிய துக்க தினமாக இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்த வேண்டும் எனும் கோரிக்கையை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் முன்வைத்துள்ளதாக வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். இது தொடர்பான அவசரக் கடிதமொன்றை இலங்கை பிரதமருக்கு இன்று பிற்பகல் மின் அஞ்சல் மூலமாகவும் தொலைநகல் மூலமாகவும் தான் அனுப்பி வைத்துள்ளதாகவும் செல்வம் அடைக்கலநாநன் கூர்மைக்குத் தெரிவித்தார்.
 
இலங்கையில் அனைத்து இன மக்களின் ஜனரஞ்சகத்தை பெற்று சகல மதங்களுக்கிடையில் ஒற்றுமையை வலியுறுத்திய தலை சிறந்த மனித நேயச் செயல்பாட்டாளரான முன்னாள் ஆயரின் மறைவு, வடகிழக்கு மாகாணம் மட்டுமின்றி முழு இலங்கைக்கும் பெரும் இழப்பு எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, இன்றிலிருந்து இறுதி நல்லடக்கம் செய்யப்படும் திங்கட்கிழமை வரையான எதிர்வரும் மூன்று நாட்களுக்கு வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டு துக்கம் அனுஷ்டிக்குமாறும் செல்வம் அடைக்கலநாதன் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை ஆயரின் மறைவையடுத்து மன்னார் நகரில் அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் வர்த்தக நிலையங்களிலும் முக்கிய சந்திகளிலும் அஞ்சலி செலுத்தும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன். வீடுகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.