வடமாகாணம்

மன்னார் ஒல்லாந்தர் கோட்டையைச் சூழவுள்ள மக்களை வெளியேற்ற உத்தரவு

முஸ்லிம் பள்ளிவாசலையும் அகற்றுமாறு இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் வேண்டுகோள்
பதிப்பு: 2021 ஏப். 04 20:48
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 04 22:55
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
வட மாகாணம் மன்னார் நகரில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையைச் சூழவுள்ள பகுதியில் குடியிருக்கும் பொது மக்களையும் அப்பகுதியில் நிலை கொண்டுள்ள பொலிஸாரையும் வெளியேற்றி அங்கு அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலையும் அகற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கைத் தொல் பொருட்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன் கூர்மைச் செய்தித்தளத்திற்கு தெரிவித்தார்.
 
மன்னார் கோட்டையின் அருகாமையில் உள்ள நிலப்பரப்பு தொல்லியல் சார்ந்த இடமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதினால் அப் பகுதியில் அமைந்துள்ள மன்னார் நீதிமன்றக் கட்டிடத்தொகுதியையும் பிறிதொரு இடத்திற்கு மாற்றம் செய்தல் வேண்டும் எனும் தகவலையும் தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்ததாகவும் குணபாலன் கூர்மை செய்திக்கு மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கம் மன்னார் கோட்டையை மையப்படுத்தி மாபெரும் சுற்றுலாத் தளமொன்றினை நிறுவும் வகையில் அதற்கான ஆரம்ப கட்டச் செயற்பாடுகளுக்காக 28 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில் குறித்த கோட்டையைப் புனரமைக்கும் பணிகளை இலங்கை தொல்பொருள் திணைக்களம் தற்பொழுது மேற்கொண்டு வருவதாக மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலக அதிகாரிகள், மன்னார் பிரதேசச் செயலாளர் உட்பட இலங்கை தொல்பொருள் திணைக்களம், சுற்றுலா அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் குழு அண்மையில் புனரமைப்புப் பணிகள் நடைபெறும் மன்னார் கோட்டைப் பகுதியைப் பார்வையிட்ட வேளையே தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மேற்படி கோரிக்கையை முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.

மன்னார் நகரின் நுழை வாயிலில் அமைந்துள்ள மேற்படி கோட்டை கட்டிடம் கடந்த 1560 ஆம் ஆண்டு இலங்கையை ஆட்சி செய்த போர்த்துக்கேயரினால் கட்டப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் பராமரிக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கை அரசு மன்னார் கோட்டையையும் அதன் அருகில் உள்ள 400 மீற்றர் தூரம் வரையான நிலப்பரப்பையும் அதி முக்கிய தொல்லியல் தளமாகப் பிரகடனப்படுத்தி 1983 ஆம் ஆண்டு இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலையும் விடுத்துள்ளது.

இந்த நிலையில் மன்னார் கோட்டையிலிருந்து 400 மீற்றர் நிலப்பரப்பை இலங்கை தொல்பொருள் திணைக்களம் மூன்று வலயங்களாக பிரித்துள்ளதாகவும் கோட்டையிலிருந்து முதல் 70 மீற்றர் பகுதி முதலாவது வலயமாகவும் 71 லிருந்து 150 மீற்றர் வரையான பகுதி இரண்டாவது வலயமாகவும் 151 லிருந்து 400 மீற்றர் வரையான பகுதி மூன்றாவது வலயமாகவும் பிரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மூன்று வலயங்களில் இரண்டாம் மூன்றாம் வலயங்களில் மட்டுமே பொது மக்களின் நிரந்தர வீடுகளும் முஸ்லிம் பள்ளிவாசலும் பொலிஸ் காவலரண் மற்றும் அவர்களின் விடுதிகள் உட்பட சில அரச திணைக்களங்களின் கட்டிடங்கள் இலங்கை தொல்பொருட் திணைக்களத்தின் அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையிலே பொதுமக்களின் வீடுகளையும் பள்ளிவாசல் கட்டிடம், பொலிஸ் காவலரண், பொலிஸ் விடுதிகள் உட்பட மன்னார் நீதிமன்ற கட்டிடம் ஆகியவற்றை வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யும் வேண்டுகோளைத் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முன்வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் கோட்டை அருகில் உள்ள முதலாம் வலயத்தில் உள்ள அகழிகளைப் புனரமைத்து அப்பகுதியில் அபிவிருத்தி மேற்கொண்டு அதில் நவீன வசதிகள் கொண்ட ஹொட்டல் மற்றும் பொது மக்கள் இளைப்பாறும் பூங்காவொன்றினை அமைத்து அங்கிருந்து மன்னார் கடல் நீர் ஏரி ஊடாக உல்லாச படகுச் சேவைகளை மேற்கொண்டு மன்னார் கோட்டையையும் அதனைச் சூழவுள்ள பகுதியையும் தேசிய சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கு இலங்கை சுற்றுலா அதிகார சபை ஊடாக தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனடிப்படையில் முதலாம் வலயத்தில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் பூர்த்தியடைந்ததும் இரண்டாம் மூன்றாம் பகுதிகள் விரைவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள நிலையிலே அப்பணிகளுக்கு இடையூறாக உள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கு இலங்கை தொல்பொருட் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை மன்னார் கோட்டையின் இரண்டாம் மூன்றாம் வலயங்களில் தொல்பொருள் திணைக்களத்தின் காணிகளில் வீடுகள் அமைத்துள்ள பொது மக்களின் விபரங்களை மன்னார் பிரதேச செயலக அதிகாரிகள் திரட்டி வரும் நிலையில் பொது மக்கள் தொல்பொருள் திணைக்களத்தின் செயல்பாடுகளுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.