போர்க்காலத்திலும் அதற்குப் பின்னரான சூழலிலும் நித்தமும் உரையாடிய

வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆயர் இராஜப்பு ஜோசப்பின் இறுதி நிகழ்வில் பங்குபற்றவில்லை

சமாதியில் சத்தியப்பிரமாணம் செய்த சிவில் அமைப்புகள்- உருவச்சிலை திறப்பு
பதிப்பு: 2021 ஏப். 06 09:06
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 07 02:28
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
ஆயர் இராயப்பு ஜோசப் தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவர் என்றும் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஆயருடைய பணிகளைத் தொடர்வோம் எனவும் கூறிச் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். சென் செபஸ்தியார் பேராலயத்தில் ஆயர் இராஜப்பு யோசப்பின் புகழுடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதியில் நின்று சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் இவ்வாறு சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இன அழிப்பு என்பதை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தி ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அகிம்சை வழியில் முன்னெடுத்த ஆயர் இராஜப்பு ஜோசப் நினைவாக அவருடைய உருவச் சிலை ஒன்றும் மன்னார் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
மன்னார் ஆயர் இம்மானுவல் பெர்ணாண்டோ உருவச் சிலையைத் திறந்து வைத்தார். சமயப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் உருவச் சிலை திறந்துவைக்கப்பட்டது.

மறைந்த ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு மரியாதை செலுத்தி வடக்குக் கிழக்கு முழுவதும் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதற்காக வீதிகள், வீடுகள் எங்கும் கறுப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் மன்னார் மாவட்டம் சோக மயமாகக் காணப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு,தனியார் போக்கு வரத்து சேவைகளும் இடம் பெறவில்லை.

இதேவேளை, வடக்கு கிழக்கு மற்றும் இலங்கைத் தீவின் ஏனைய பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் எனப் பல்லாயிரக் கணக்கான மக்கள் ஆயரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை, ஆயர் இராயப்பு ஜோசப்பின் மறைவுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் அனுதாபம் தெரிவித்து அவருடைய மக்கள் சேவைகள் பற்றி உரையாற்றினர். இதேவேளை, ஆயர் இராஜப்பு ஜோசப் சமயப் பணிகளைக் கடந்து ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரங்கள் உட்பட இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களோடு தொடர்புபட்டிருந்தார்.

குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பு கொண்டு மக்களின் அவல நிலமைகள் தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகளின் தூதுவர்கள் மன்னார் மாவட்டத்திற்குச் சென்று ஆயர் இராயப்பு ஜோசப்பின் ஆயர் இல்லத்தில் சந்தித்து உரையாடியுமிருந்தனர்.

இவ்வாறு நீண்டகால உறவுகளைப் பேணிவந்த வெளிநாட்டுத் தூதுவர்கள் ஆயரின் மறைவுக்கு இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லையென பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்கள் பலர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஆயருடைய புகழுடலுக்கு வணக்கம் செலுத்தவில்லையெனவும் மக்கள் பலர் குறைப்பட்டுள்ளனர்.

ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப்பின் புகழுடல் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் நேற்றுத் திங்கட்கிழமை மாலை 5.30க்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆயரின் நல்லடக்கத்தில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதிநிதி அதி மேதகு பிறையன் உடைக்வே கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் உள்ள அனைத்து மறை மாவட்டங்களுக்கும் பொறுப்பான ஆயர்கள், துணை ஆயர்கள், ஓய்வு நிலை ஆயர்கள் பல மறை மாவட்டங்களின் குரு முதல்வர்கள் பல அருட் தந்தையர்கள் அருட்சகோதரர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான கன்னியாஸ்திரிகளும் முன்னாள் ஆயரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.

ஆயரின் இறுதி நிகழ்வை முன்னிட்டு மன்னார் நகரெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் இறுதி நிகழ்வு நடைபெற்ற புனித செபஸ்தியார் பேராலயத்தில் பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆயரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகப் புனித செபஸ்தியார் பேராலயம் வருகை தந்த பொதுமக்கள் இராணுவத்தினரால் உடற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.