கொழும்பு அரசியல் குழப்பங்களைத் தற்காலிகமாகத் திசை திருப்பவே

புலிக் கதைகூறி மணிவண்ணன் கைது செய்யப்பட்டாரா?

அரசியல் விடுதலைப் போராட்டங்கள் அகிம்சை வழியில் முன்னெடுக்கப்படுவதை தடுப்பதும் பிரதான நோக்கம்
பதிப்பு: 2021 ஏப். 09 10:41
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 09 23:03
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இலங்கை ஒற்றையாட்சி அரசின் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோவினால் வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான மணிவண்ணன், வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். நகர காவல் படை உருவாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை எட்டு மணியளவில் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் காவல்துறையினர் பயன்படுத்திய சீருடைகளை ஒத்ததாக இருந்தது என்ற குற்றச்சாட்டிலேயே மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
ஆனால் அது அவ்வாறான சீருடையல்ல என்றும், கொழும்பு மாநகர சபை கொழும்பில் அவ்வாறான சீருடையோடு காவல் படை ஒன்றை வைத்திருப்பதாகவும் மணிவண்ணன் பொலிஸாரின் விசாரணையில் கூறியிருந்தார்.

ஆனாலும் சுமார் 6 மணி நேர விசாரணைகளின் பின்னர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தக் கைது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் நாடாளுமன்றத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டம் வெளியிட்டனர். மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென தமிழரசுக் கட்சி உறுப்பினர் சிறீதரன், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கண்டனம் வெளியிட்டதுடன், கொழும்பு மாநாகர சபையும் அவ்வாறான சீருடை ஒன்றைப் பயன்படுத்திச் சிறப்புக் காவல் அணி ஒன்றை வைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாளஸ் நிர்மலநாதன், மணிவண்ண்ன் ஈபிடிபியின் ஆதரவுடன் முதல்வராகப் பதவி வகிப்பதாகக் கூறியிருந்தார்.

அத்துடன் அரசாங்கத்திற்கு ஆதரவு வழஙகும் கட்சி ஒன்றின் ஆதரவுடனேயே புலிகளின் சீருடைகளை ஒத்த நீலச் சீருடைகள் அணியப்பட்ட காவல் படை ஒன்றை உருவாக்கியதாகவும் உரையாற்றியிருந்தார்.

இதேவேளை, மணிவண்ணன் அமைத்த யாழ் நகரக் காவல் படையின் சீருடை புலிகளின் காவல்துறையினர் பயன்படுத்தியது போன்றதென சிலர் முகநூலில் பதிவிட்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் செயற்படும் கொழும்பை மையமாகக் கொண்ட சிங்களக் கட்சிகளின் ஆதரவாளர்கள் சிலரும் தமது முகநூல்களில் அவ்வாறு பதிவிட்டிருந்தனர்.

இவ்வாறான காரணங்களினாலேயே இந்த விவகாரம் பூதாகரமாகக் கிளம்பி மணிவண்ணன் கைது செய்யப்பட வேண்டியதொரு ஆபத்தான நிலைமை ஏற்பட்டதென்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு.

இதேவேளை, யாழ் பல்கலைக்கழகச் சட்டத்துறை முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி குமாரவேல் குருபரன் தனது முகநூலில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

----- பொலிசார் மாநகரசபைக்குத் தமது வேலையை எப்படி செய்வது என்பதை பற்றி வகுப்பெடுக்க முடியாது.

உள்ளூராட்சி அமைப்புக்களை நெறிப்படுத்தும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு தான் உண்டு. மாகாண அமைச்சர் இல்லாததால் அந்த அதிகாரம் ஆளுநருடையது. ஆளுநர் வேண்டுமென்றால் முதல்வரிடம் விளக்கம் கேட்கட்டும். ஆளுநர் சொல்வதை முதல்வர் கேட்காவிட்டால் அதற்கு ஒரு முறை இருக்கிறது. நீதிமன்றமும் இருக்கிறது.

அதிகாரத்தை இயன்ற வரை விரிவாக பொருள்கோடல் செய்து உபயோகிக்கும் முதல்வர் Manivannan Visvalingam அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். கட்சி அரசியல் கடந்து நாம் ஆதரிக்க வேண்டும். எங்களுக்கும் அதிகாரம் கொடுத்தால் ஆளத் தெரியும் என்பதை காட்ட வேண்டும். அதை தீர்க்கமாகவும் நிதானமாகவும் அவர் செய்ய நாம் துணை நிற்க வேண்டும். அது நோக்கியதாக மணியின் செயற்பாடுகளை நான் முழுமையாக வரவேற்கிறேன்------ என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை. தமிழரசுக் கட்சியின் ஆட்சியில் உள்ள கோப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தனது முகாநூலில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

---யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் வி. மணிவண்ணன் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் சக தவிசாளார் என்ற வகையில் இன்று காலை முதற்கட்டமாக இலங்கை உள்ளூராட்சி அதிகார சபைகளின் சம்மேளனம் (Federation of Sri Lankan Local Government Authorities) மற்றும் மாநகர முதல்வர் ஒன்றியம் ஆகியவற்றின் கவனத்திற்கு இவ்விடயத்தை தொலைபேசியில் கொண்டுவந்தேன்.

உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் தலைவராக பதவி வகிக்கும் குருநாகல் மாநகர முதல்வர் துஸார சஞ்சீவ, இவ்விடயம் தற்போது பொலிஸ் விசாரணையில் இருப்பதனாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்குள் இருப்பதனாலும் தாம் உரிய சட்ட ஏற்பாடுகளுடன் தலையிடுவதாகவும் தெரிவித்தார். இதேவேளை இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் என்ற வகையில் தாம் முதல்வருடைய கைது தொடர்பில் உள்ளுராட்சி அமைச்சருடன் தாமதமின்றி இவ்விடயம் குறித்து பேசவுள்ளதாகவும் தொவித்தார்.

மேலும், இலங்கையில் மேயர்களை உள்ளடக்கி முதல்வர்கள் ஒன்றியமும் உள்ள நிலையில் அதன் தலைவராகவுள்ள மொரட்டுவை மாநகர முதல்வர் டபிள்யூ. சந்திமல் பெர்ணான்டோவுக்கும் யாழ்.மாநகர முதல்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் விடுதலை தொடர்பில் தங்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கோண்டேன்.

அதற்கு முதல்வர் ஒன்றியத்தின் தலைவர், தான் ஊடகம் வாயிலாக இவ்விடயம் பற்றித் தெரிந்து கொண்டதாகவும் இவ்விடயம் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பான கைது. நகர ஒழுங்கு படுத்தல்களைச் செய்வதற்கு பொலிசாரையே முதல்வர் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றார். நான் இது தங்கள் அபிப்பிராயம் சார்ந்த விடயமாக இருக்கின்ற நிலையில் தாங்கள் நாட்டில் உள்ள முதல்வர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்பு என்ற வகையில் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்---- இவ்வாறு பதிவிடப்பட்டிருந்தது.

இதேவேளை, ராஜபக்சக்களை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சூத்திரதாரிகளைக் கைது செய்யும் விவகாரங்களைத் திசை திருப்பும் நோக்கில் மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருக்கலாமென்ற கருத்துக்கள் கொழும்பில் நிலவுகின்றன.

விடுதலைப் புலிகளின் சீருடையைப் பயன்படுத்தினார் என்ற கதைகள் புனையப்பட்டுச் சிங்கள இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் இணையங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்திலும் அரசதரப்பு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் அவ்வாறான கதைகளைக் கூறியுள்ளனர்.

இதனால் கொழும்பு அரசியலில் தற்போது மணிவண்ணன் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் பற்றியே அதிகமாகப் பேசப்படுகின்றன. அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் பற்றிய பேச்சுக்களும் தற்காலிகமாகக் குறைவடைந்துள்ளன.

அத்துடன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்திரதாரிகளைக் கைது செய்யும் விவகாரம் பற்றிய பேச்சுக்களும் குறைவடைந்துள்ளன. கொழும்பில் அரசியல் குழப்பங்கள் ஏற்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் புலிகளின் மீளுருவாக்கம் பற்றிய பேச்சுக்களைக் கிளப்பிவிடும் சந்தர்ப்பவாத அரசியல் தென்னிலங்கையில் அவ்வப்போது மேலோங்கி வருவதையே சமீபகாலமாக அவதானிக்க முடிவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த போராட்டங்கள் அகிம்சை வழியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கிலும் மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருப்பதாகவே விமர்சகர்கள் கூறுகின்றனர்.